கிழக்கு மாகாண தொல்பொருள் பாதுகாப்பு செயலணி – சம்பந்தன் ஜனாதிபதிக்கு கடிதம்

கிழக்கு மாகாணத்தின் தொல்பொருட்களை பாதுகாப்பதற்கான ஜனாதிபதி செயலணி கிழக்கு மாகாணத்தை மாத்திரம் அடிப்படையாகக் கொண்டு ஸ்தாபிக்கப்பட்டமை தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அதிருப்தி வெளியிட்டு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.

இலங்கை நாடானது பல்லினத்தை பிரதிபலிக்கும் வண்ணம் மொழி, மதங்கள், கலாசாரங்கள் உள்ள நாடென இரா.சம்பந்தன் ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

கிழக்கு மாகாணமானது பல்லின மக்கள் வாழ்கின்ற ஒரு மாகாணமாக இருந்த போதிலும், அங்கு தமிழ் பேசுகின்ற மக்களே பெரும்பான்மையாக வாழ்வதாக சுட்டிக்காட்டியுள்ள இரா.சம்பந்தன் ஸ்தாபிக்கப்பட்டுள்ள செயலணி முற்று முழுதாக சிங்கள உறுப்பினர்களைக் கொண்டுள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.

அத்துடன் இந்த செயலணி ஒரு இனம் மற்றும் மதத்தின் நலனுக்காக மாத்திரமே நிறுவப்பட்டுள்ளமை தெளிவாக புலப்படுவதாகவும் அவர், இந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

விஜயனின் வருகைக்கு முன்னதாகவே திருக்கேதீஸ்வரம், முன்னேஸ்வரம், தொன்றீஸ்வரம், திருக்கோணேஸ்வரம், நகுலேஸ்வரம் ஆகிய ஆலயங்கள் இலங்கையில் இருந்ததாக வரலாற்று ஆய்வாளர்களை மேற்கோள்காட்டி இரா.சம்பந்தன் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளார்.

இந்த பழம்பெரும் ஆலயங்களில் ஒன்றான திருக்கோணேஸ்வரம் ஆலயம் கிழக்கு மாகாணத்திலுள்ள திருகோணமலையில் அமைந்துள்ளதாக தெரிவித்துள்ள முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் திருக்கோணேஸ்வரம் ஆலயம், தக்ஷின கைலாயம் என புராணங்களில் விபரிக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

தொன்றீஸ்வரம் ஆலயம் தற்போது சிதைவடைந்து வருவதாக தெரிவித்துள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர், அதன் தொல்பொருள் சின்னங்களை பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்காமைக்கான காரணம் என்னவென கேள்வி எழுப்பியுள்ளார்.

கிழக்கு மாகாணத்தில் பழமையான பௌத்த விகாரைகள் உள்ளதாகவும், முன்னைய காலத்தில் தமிழ் இந்துக்கள் பௌத்த மதத்தை பின்பற்றியமைக்கான சான்றுகள் உள்ளதாகவும் இரா.சம்பந்தன் ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

புதிதாக எந்தவொரு காணிகளையும் கையகப்படுத்தாமல், பௌத்த தொல்லியல் சின்னங்களை பாதுகாப்பதற்கான எந்தவொரு நடவடிக்கைகையும் எடுப்பதற்கு தாம் ஆட்சேபனை தெரிவிக்கவில்லை என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார்.

அவ்வாறு செயற்படுவதன் மூலமே மக்கள் மத்தியில் அமைதியையும் நல்லிணக்கத்தையும் பேண முடியும் எனவும் இந்த கடிதத்தில் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இந்தக் கடிதத்தின் பிரதியை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கும் இரா.சம்பந்தன் அனுப்பி வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments are closed.