ராகுல் காந்தியின் உதவியால் தொழிலதிபராக மாறிய செருப்பு தைக்கும் தொழிலாளி!

மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியின் உதவியால் செருப்பு தைக்கும் தொழிலாளி தொழிலதிபராக மாறியுள்ளார்.
யார் அவர்?
இந்திய மாநிலமான உத்தரப்பிரதேசம், சுல்தான்பூரைச் சேர்ந்த செருப்பு தைக்கும் தொழிலாளி ராம்சேத். இவர் தினமும் ரூ.150க்கு கஷ்டப்பட்டு வந்த நிலையில் தற்போது தனது சொந்த பிராண்டை உருவாக்கும் அளவுக்கு தொழிலதிபராக மாறியுள்ளார்.
இவருடைய வாழ்க்கை நிலை மாறியதற்கு மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியே காரணம்.
அதாவது, ராம்சேத் தனது சொந்த திறமையால் முன்னேற வேண்டும் என்று அவருக்கு செருப்பு தைக்கும் இயந்திரத்தையும், மூலப்பொருட்களையும் ராகுல் காந்தி பரிசளித்தார்.
இதையடுத்து, கடந்த பிப்ரவரி மாதம் டெல்லி ஜன்பத் சாலையில் உள்ள ராகுல் காந்தியின் வீட்டுக்கு ராம்சேத் சென்றிருந்தார்.
அப்போது, ராகுல் காந்தி, சோனியா காந்தி மற்றும் பிரியங்கா காந்தி வதேராவை சந்தித்தார். அவர்களுக்கு தனது கையால் செய்யப்பட்ட காலணிகளையும் பரிசாக கொடுத்தார்.
இதன்பிறகு ராம்சேத்தை மும்பைக்கு அழைத்துச் சென்ற ராகுல் காந்தி, சார்மர் ஸ்டூடியோ என்ற பிராண்டின் நிறுவனரான சுதீர் ராஜ்பர் என்ற தொழிலதிபரை அவருக்கு அறிமுகம் செய்து வைத்தார்.
இவரிடம் இருந்து தொழில்நுட்பங்களையும், வர்த்தக சூட்சுமங்களையும் ராம்சேத் தெரிந்து கொண்டார்.
இது தான் அவருடைய வாழ்க்கைக்கு மாற்றமாக இருந்தது. தற்போது, “ராம்சேத் மோச்சி” என்ற புதிய பிராண்டை அறிமுகம் செய்யும் பணியில் ராம்சேத் தீவிரமாக இறங்கியுள்ளார். இதற்கு ராகுல் காந்தியின் உதவி தான் காரணம் என்பதையும் அவர் கூறியுள்ளார்.