நாட்டை மீண்டும் முடக்கமாட்டோம் இன்னமும் சமூகப் பரவல் இல்லை என்கின்றது அரசு

“கொரோனா வைரஸ் சமூகப் பரவல் அடைந்துள்ளது என மருத்துவ சங்கம் கூறவில்லை. தேவைகளின்படிதான் நாட்டை முடக்க வேண்டிய நிலை ஏற்படும் என்று அவர்கள் கூறியுள்ளனர். எனவே, அதற்கான தேவை தற்போது இல்லாததால் முழுநாடும் மீண்டும் முடக்கப்படாது.”

– இவ்வாறு காதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி உறுதிபடத் தெரிவித்தார்.

“விரைவில் இந்த கொரோனாத் தொற்று நோய்க்கு தடுப்பூசி யொன்றை பெற்றுத்தருவதாக உலக சுகாதார ஸ்தாபனம் எமக்கு கூறியுள்ளதுடன் அதற்காக சுகாதார அமைச்சை தயார்ப்படுத்துமாறும் கோரியுள்ளது. ஆகவே, நாம் அதற்கு எம்மைத் தயார்படுத்தி வருகின்றோம்” எனவும் அவர் குறிப்பிட்டார்.

நாடாளுமன்றத்தில் நேற்று தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்கவினால் முன்வைக்கப்பட்ட கொரோனாத் தொற்றால் ஏற்பட்டுள்ள சுகாதார நெருக்கடி தொடர்பான சபை ஒத்திவைப்புவேளை விவாதத்துக்கு பதிலளித்து உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு கூறிய சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி மேலும் தெரிவித்ததாவது:-

“ஜனாதிபதி மற்றும் பிரதமரின் தலைமைத்துவம் பலமானதாக உள்ளதால் நாம் மோசமான நிலையில் இல்லை. கொரோனாத் தொற்று ஒழிப்புக்காக இராணுவத் தளபதி தலைமையில் செயலணியொன்று அமைக்கப்பட்டுள்ளது. அதேபோன்று பொது சுகாதார பரிசோதகர்கள், பொலிஸார் உட்பட பாதுகாப்பு படைகளின் பாரிய ஒத்துழைப்பும் பங்களிப்பும் உள்ளது.உரிய அதிகாரிகள் அழைத்து தினமும் கலந்துரையாடல்களை நடத்தி ஜனாதிபதி எடுக்கும் தீர்மானங்கள் உலகில் ஏனைய நாடுகளுக்கு முன்னுதாரணமாகவுள்ளன.

கொரோனா என்பது உலகளாவிய தொற்று நோய். உலகிற்கு இந்த வைரஸ் புதிது. இலங்கையில் முதல் கொரோனா தொற்றாளர் கண்டறியப்பட்டது முதல் பல தீர்மானங்களை அரசு எடுத்ததுடன், முழுநாட்டையும் முடக்கினோம். இன்று நாம் அவ்வாறு முழு நாட்டையும் முடக்க முடியாது. இந்தச் செயற்பாட்டில் அனுபவம் வாய்ந்தவர்களாக சுகாதாரத்துறையும் தொற்றுநோய் பிரிவினர் உட்பட துறைசார் ஏனையவர்கள் உயரிய அனுபவத்தையும் நிபுணத்துவத்தையும் பெற்றுக்கொண்டுள்ளனர்.

எம்மிடம் துறைசார் நிபுணர்கள் தொற்றுநோய் பிரவில் அனுவபம் வாய்ந்த ஆலோசகர்கள் உள்ளனர். அவர்களின் ஆலோசனைகளின் பிரகாரம்தான் அரசாங்கம் செயற்படுகிறது. மாறாக அரசியல்வாதிகளால் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படுவதில்லை. அவ்வப்போது இதுதொடர்பான உலகளாவிய மாற்றங்களின் அடிப்படையில்தான் ஆலோசகர்கள் எமக்கு ஆலோசனைகளை வழங்குகின்றனர். அபிவிருத்திக்குப் பெயர்போன நாடுகள்கூட கொரோனாவால் திக்குமுக்காடும் நிலையில் இந்த அனுவபம் வாய்ந்த நிபுணர்கள் எமக்கு மிகவும் பயனுறிவாய்ந்த ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர்.

மருத்துவச் சங்கம் நாட்டை முடக்குவது நல்லதெனக் கூறியுள்ளதாக சிலர் பிரசாரம் செய்கின்றனர். கொரோனா வைரஸ் சமூக பரவல் அடைந்துள்ளதாக மருத்துவர் சங்கம் கூறியுள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் கூறுகின்றார். மருத்துவச் சங்கம் அவ்வாறு கூறவில்லை. தேவைகளின் படிதான் நாட்டை முடக்க வேண்டிய நிலை ஏற்படுமென அவர்கள் கூறியுள்ளனர். உலக சுகாதார ஸ்தாபனம் இந்த வைரஸ் சமூக பரவல் அடைவதற்கான நியமங்களை வெளியிட்டுள்ளது. அந்த நியமங்களின்படி தொற்நோய் பிரிவு சமூகப் பரவல் அடைந்துள்ளதாக கூறினால் மாத்திரமே இதனை ஏற்றுக்கொள்ள முடியும். அதனையே மருத்துவ அதிகாரிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. உலக சுகாதார ஸ்தாபனத்தின் ஆலோசனையின் பிரகாரமே நாம் செயற்படுகின்றோம். எனவே, நாட்டை மீண்டும் முடக்க மாட்டோம்.

நாம் பொறுப்பற்ற விதத்தில் செயற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கூறுகின்றனர். இதுதொடர்பான தெளிவான வழிகாட்டல்களை நாம் சமூகத்திற்கு வழங்கியுள்ளோம். காரியாலயம் முதல் வர்த்தக நிலையங்கள் வரை எவ்வாறு செயற்பட வேண்டுமென அதில் தெளிவாக கூறப்பட்டுள்ளது.

இலங்கையில் முதல் கொரோனாத் தொற்றாளர் கண்டறியப்படும்போது ஒரு ஆய்வுகூடம்தான் எமக்கு இருந்தது. மார்ச் மாதமாகும் போது 6 ஆய்வுகூடங்களை அமைத்தோம். ஆனால், தற்போது 26 ஆய்வு கூடங்கள் உள்ளன. அதேபோன்று மார்ச் மாதம் 250 கட்டில்கள்தான் சிகிச்சையளிப்பதற்காக இருந்தன. ஒக்டோபர் மாதத்தில் 3500 கட்டில்களை தயார்படுத்தினோம். ஆரம்பத்தில் தொற்றாளர்களைக் கண்டறிய ஐ.டி.எச். வைத்தியசாலை மாத்திரமே இருந்தது. ஆனால், தற்போது 30 வைத்தியசாலைகளை அமைத்துள்ளோம். மார்ச் மாதத்தில் எம்மால் 250 பி.சி.ஆர். பரிசோதனைகளைத்தான் செய்ய முடிந்தது. தற்போது தினமும் 8000 பி.சி.ஆர்.பரிசோதனைகளை செய்யும் வகையில் முன்னேறியுள்ளோம்.

விரைவில் இந்தத் தொற்று நோய்க்கு தடுப்பூயொன்றை பெற்றுத்தருவதாக உலக சுகாதார ஸ்தாபனம் எமக்குக் கூறியுள்ளதுடன் அதற்காக சுகாதார அமைச்சை தயார்ப்படுத்துமாறும் கோரியுள்ளது. ஆகவே, நாம் அதற்கு எம்மைத் தயார்படுத்தி வருகின்றோம்.

உலகில் அனைத்து மட்டத்திலும் கொரோனா ஒழிப்பு செயற்பாட்டில் இலங்கை முன்னிலையில் உள்ளது. எமது நாட்டைப் போன்று தனிமைப்படுத்தல் நிலையங்கள் வேறு எந்த நாட்டிலும் இல்லை. கொரோனாத் தொற்று ஒழிப்பு நடவடிக்கைகளுக்காகப் புலனாய்வுத்துறையும் செயற்படுகின்றது. 85 தனிமைப்படுத்தல் நிலையங்கள் உள்ளன. 10ஆயிரம் பேர்வரை அவற்றில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். ஏனைய நாடுகளில் தொற்றாளர்களை வீடுகளில் இருக்குமாறே கூறுகின்றனர். நாம் வைத்தியாலைக்கு கொண்டுசென்று சிகிச்சையளிக்கிறோம்.

மினுவாங்கொடை தொழிற்சாலையில் தொற்றாளர் கண்டுப்பிடிக்கப்பட்டு மூன்று நாட்டிகளுக்குள் மீண்டும் சுகாதார வழிகாட்டல்களைப் புதுப்பித்தோம். நோய் அறிகுறிகள் இல்லாதவர்கள் ஏதாவது நிகழ்வுக்கு சென்றால் ஏனையவர்களுக்கு இது பரவலடையும். அதனைத் தடுப்பதற்காக புலனாய்வுத்துறையுடன் இணைந்து விசேட பொறிமுறைகளை நாம் கையாள்கிறோம். நோயை ஒழிக்கும் செயற்பாடு உட்பட அனைத்துறைகளிலும் ஏனைய நாடுகளைவிட மிகவும் உயரிய மட்டத்தில் இலங்கை செயற்படுகின்றது” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.