சீனா – அமெரிக்கா மோதல் தொடர்பில் கோட்டா அரசை எச்சரிக்கிறார் சம்பந்தன்

வெளிநாட்டுக் கொள்கையில் நடுநிலைமை
தவறினால் மிகப் பெரிய பின்விளைவு நேரும்

சீனா – அமெரிக்கா மோதல் தொடர்பில்
கோட்டா அரசை எச்சரிக்கிறார் சம்பந்தன்

“ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான இலங்கை அரசு, அனைத்து நாடுகளுடனும் இணைந்து பயணிக்கக்கூடியவாறு புதிதாக – பக்கச்சார்பில்லாமல் சமாந்தரமான கொள்கைகளை வகுத்துக் கருமங்களை முன்னெடுக்க வேண்டும். இந்தக் கடமையிலிருந்து தவறினால் பாரிய பின்விளைவுகளை இலங்கை சந்திக்க வேண்டி வரும்.”

– இவ்வாறு எச்சரிக்கை விடுத்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்.

உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டு இலங்கை வந்திருந்த அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பியா, ‘நிலையான வளர்ச்சியுடன் இலங்கை மக்களுக்கு இறையாண்மையும் சுதந்திரமும் இருக்க வேண்டும் என்று அமெரிக்கா விரும்புகின்றது. ஒரு நட்பு நாடாக அமெரிக்கா அதைச் சரியாக வழங்குகின்றது என்று நாங்கள் நினைக்கின்றோம். ஆனால், சீனா ஆக்கிரமிப்பு நோக்கத்தைக் கொண்டுள்ளது. இலங்கையைச் சீனா வேட்டையாடி வருகின்றது. அந்த நாடு நிலத்திலும் கடலிலும் இறையாண்மையை மீறி வருகின்றது’ என்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தார்.

இது தொடர்பில் இரா.சம்பந்தனிடம் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையில் பலவிதமான கருமங்கள் சம்பந்தமாக சமீப காலத்தில் ஏற்பட்ட தொடர்புகள் யாவரும் அறிந்ததே.

கடல் பாதை மற்றும் உள்நாட்டுப் அபிவிருத்திப் பணிகளில் சீனாவின் பங்களிப்பு வேரூன்றிக் காணப்படுகின்றது.

இந்த விடயம் தொடர்பாக இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட ஏனைய நாடுகள் தெரிவிக்கும் விமர்சனக் கருத்துக்களை நாங்கள் மதிப்பீடு செய்ய வேண்டும்.

இதையெல்லாவற்றையும் உணர்ந்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான இலங்கை அரசு, அனைத்து நாடுகளுடனும் இணைந்து பயணிக்கக்கூடியவாறு புதிதாக – பக்கச்சார்பில்லாமல் சமாந்தரமான கொள்கைகளை வகுத்துக் கருமங்களை முன்னெடுக்க வேண்டும். இது இலங்கை அரசின் பிரதான கடமை.

இந்தக் கடமையிலிருந்து தவறினால் பாரிய பின்விளைவுகளை இலங்கை சந்திக்க வேண்டி வரும்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.