இந்தியத் தூதுவர் – சம்பந்தன் சந்திப்பு : கொதிக்கின்றார் அமைச்சர் கெஹலிய

இந்தியத் தூதுவர் – சம்பந்தன் சந்திப்பு குறித்து அரசு சீற்றம்

எந்த நாடும் இலங்கைக்கு
அழுத்தம் வழங்க முடியாது

– கொதிக்கின்றார் அமைச்சர் கெஹலிய

“இலங்கையில் தமிழர்கள் மட்டுமன்றி சிங்களவர்கள், முஸ்லிம்கள் என மூவின மக்களும் வாழ்கின்றார்கள். இந்தநிலையில், தமிழர் விவகாரம் தொடர்பில் எந்த நாடும் இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க முடியாது.”

– இவ்வாறு அமைச்சரவைப் பேச்சாளரும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பாக்லேக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் இடையில் கொழும்பில் கடந்த புதன்கிழமை மாலை திடீரென முக்கிய சந்திப்பு நடைபெற்றது. இதன்போது தமிழர் தரப்பின் பல்வேறு விடயங்கள் குறித்து இருவரும் பேசினர்.

இது தொடர்பில் அரசின் பேச்சாளரான கெஹலிய ரம்புக்வெல கருத்துத் தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“இலங்கையில் தமிழர், முஸ்லிம்கள், சிங்களவர்கள் என மூவின மக்களும் சமவுரிமைகளுடன் ஒற்றுமையாக வாழ்கின்றார்கள். ஆனால், இந்த ஒற்றுமையைச் சிதறடிக்கும் வகையில் தமிழ் அரசியல்வாதிகள்தான் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றார்கள். அப்படியான தமிழ் அரசியல்வாதிகளுடன் தமிழர் விவகாரம் தொடர்பில் வெளிநாடுகளின் தூதுவர்கள் தன்னந்தனியே பேச்சு நடத்துவது ஏற்றுகொள்ளக்கூடியதல்ல.

குறித்த தமிழ் அரசியல்வாதிகளுடன் மட்டும் பேசிவிட்டு தமிழர் விவகாரம் தொடர்பில் எந்த நாடும் இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க முடியாது.

இந்த நாட்டில் மூவின மக்கள் வாழ்கின்றார்கள் என்பதை தமிழர் விவகாரம் தொடர்பில் அக்கறை செலுத்தும் நாடுகள் கவனத்தில்கொள்ள வேண்டும்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.