ஐ.நா. நிகழ்வுக்கு மஹிந்த அழைக்கப்பட்டமை பாதிக்கப்பட்டோரின் முகத்திலறையும் செயல்

ஐ.நா. நிகழ்வுக்கு மஹிந்த அழைக்கப்பட்டமை
பாதிக்கப்பட்டோரின் முகத்திலறையும் செயல்

– சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் கடும் சாடல்

“ஐக்கிய நாடுகள் சபையின் 75 ஆவது வருடப் பூர்த்தியை முன்னிட்டு இலங்கையிலுள்ள ஐ.நா அலுவலகம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வுக்குப் பிரதமர் மகிந்த ராஜபக்ச பிரதம விருந்தினராக அழைக்கப்பட்டமையானது, போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமைகள் மீறல்களினால் பாதிக்கப்பட்ட மக்களின் முகத்திலறையும் செயலாகும்.”

– இவ்வாறு சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் கடுமையாகச் சாடியுள்ளது.

போர்க்குற்றங்களுடன் தொடர்புபட்டிருப்பதாகக் குற்றஞ்சாட்டப்பட்டிருப்பவர்களின் பொதுவான பிம்பம் துடைத்தெறியப்படுவதற்குத் துணைபுரியக்கூடிய செயல்களில் ஐக்கிய நாடுகள் சபை ஈடுபடக்கூடாது. ஆனால், கடந்த வாரம் அத்தகையதொரு செயலையே இலங்கையின் ஐ.நா. அலுவலகம் செய்தது எனவும் சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் விசனம் தெரிவித்துள்ளது.

அண்மையில் ஐக்கிய நாடுகள் சபை உருவாக்கப்பட்டு 75 ஆண்டுகள் பூர்த்தியடைந்துள்ளமையை முன்னிட்டு இலங்கையிலுள்ள ஐ.நா. அலுவலகத்தால் இணையவழி நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன், அதில் பிரதம விருந்தினராக பிரதமர் மஹிந்த ராஜபக்ச கலந்துகொண்டு உரை நிகழ்த்தியிருந்தார்.

இது குறித்து சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஐக்கிய நாடுகள் பணிப்பாளர் லூயிஸ் சார்போனே அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.