கொரோனாவால் இறக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை புதைக்க அனுமதி வழங்கப்படுமா?

கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கும் முஸ்லிம்களின் சடலத்தை புதைக்க வேண்டும் என முன்வைக்கப்படும் கோரிக்கைகள் தொடர்பில் ஆராயப்படுவதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஆராயவென அமைக்கப்பட்டுள்ள விசேட வைத்திய நிபுணர்கள் குழு இவ்வாரம் கூடவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இது தொடர்பில் இன்று பாராளுமன்றில் கருத்து வெளியிட்ட நிலையில் நீதி அமைச்சர் அலி சப்ரி மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹுமான் ஆகியோரும் கருத்து தெரிவித்தனர்.

தேர்தலுக்கு முன்னர் இதுதொடர்பான கோரிக்கை முன்வைக்கப்பட்டபோது இடைக்கால அரசாங்கம் அதனை கணக்கிலெடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் தற்போது தேர்தல் முடிந்து நிலையான அரசாங்கம் அமைந்துள்ள நிலையில் இவ்விடயம் குறித்து ஆராயப்படுவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

கொரோனா வைரசினால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கு அனுமதிக்க வேண்டும் என பல தரப்பினர் விடுத்துள்ள வேண்டுகோள்களை அரசாங்கம் ஆராய்ந்து வருவதாக நீதியமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரசினால் உயிரிழக்கும் முஸ்லிம் மக்களின் உடல்களை தகனம் செய்ய வேண்டாம் என முஸ்லிம் கட்சிகள், அமைப்புக்கள் வேண்டுகோள் விடுத்து வருவதாக அவர் இன்று பாராளுமன்றில் கூறினார்.

கொரோனா முதல்கட்ட பரவல் காலத்தில் வைரசின் இயல்பு குறித்து தெரியாததாலும் கொவிட் 19 குறித்த நிச்சயமற்ற தன்மை காரணமாகவும் கொரோனா வைரசினால் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வதில்லை என்ற முடிவு எடுக்கப்பட்டதாகவும்  அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தற்போது கொரோனா இரண்டாம் அலை தொடங்கியுள்ளதால் சடலங்களை அடக்கம் செய்வது குறித்து மீள ஆராயப்படுவதாக நீதியமைச்சர் தெரிவித்துள்ளார்.

உலக சுகாதார அமைப்பு கொரோனா வைரஸினால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் உடல்களை புதைக்க முடியும் என அறிவித்துள்ள போதும் இலங்கை அதனை மீள ஆராய முயற்சிப்பதாக எதிர்கட்சி பிரதம கொரடா லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.