செஞ்சோலையில் கொல்லப்பட்டோருக்கு யாழ். மாநகர சபை அமர்வில் அஞ்சலி!
செஞ்சோலையில் இடம்பெற்ற விமானக் குண்டு வீச்சின்போது பரிதாபகரமாகக் கொல்லப்பட்ட பாடசாலை மாணவிகளின் 19 ஆம் ஆண்டு நினைவேந்தலையொட்டி யாழ்ப்பாணம் மாநகர சபை அமர்வில் சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.
யாழ். மாநகர சபையின் ஓகஸ்ட் மாத அமர்வு இன்று மாநகர மேயர் திருமதி. மதிவதனி விவேகானந்தராஜா தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது 2006 ஆம் ஆண்டு வள்ளிபுனம் பகுதியில் அமைந்திருந்த செஞ்சோலையில் முகாமைத்துவப் பயிற்சி இடம்பெற்றபோது இடம்பெற்ற விமானக் குண்டு வீச்சில் 54 மாணவிகளும் 7 பணியாளர்களுமாக 61 பேர் படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.

இதன் 19 ஆம் ஆண்டு நினைவேந்தலையொட்டியே இன்று யாழ்ப்பாணம் மாநகர சபை அமர்வில் சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.
மாநகர மேயரின் அறிவிப்பையடுத்து அனைவரும் எழுந்து நின்று அகவணக்கம் செலுத்தினர்.
அகவணக்கத்தையடுத்து நினைவுச் சுடரை மாநகர மேயர் ஏற்றிவைத்தார்.
