இரண்டு மாதங்களுக்கு இலங்கையில் ஆபத்து! பிரதி சுகாதார சேவை பணிப்பாளர்

இரண்டு மாதங்களுக்கு
இலங்கையில் ஆபத்து!

ஜனவரி வரை கொரோனாக் கொத்தணி பரவல்;
பிரதி சுகாதார சேவை பணிப்பாளர் எச்சரிக்கை

“மினுவாங்கொடை கொரோனா வைரஸ் கொத்தணியையும், பேலியகொட கொரோனா வைரஸ் கொத்தணியையும் முழுமையாகக் கட்டுப்படுத்த இன்னும் இரண்டு மாதங்கள் செல்லலாம். அதுவரைக்கும் நாட்டில் ஆபத்தான நிலை காணப்படும். தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்புடன் உயிரிழந்தவர்களின் தொகையும் உயரும்.”

– இவ்வாறு பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“மினுவாங்கொடை ஆடைத்தொழிற்சாலை நிறுவனத்திலிருந்து முதலாவது தொற்றாளர் அடையாளம் காணப்பட்டு ஒரு மாதம் நிறைவடைந்துள்ளது.

தற்போது இந்தக் கொத்தணிப் பரவல் ஓரளவுக்குக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. எனினும், எதிர்வரும் ஜனவரி மாதம் வரை ஆபத்து இருக்கின்றது. ஏனெனில், தொற்றாளர்களுடன் நெருங்கிப் பழகியவர்கள் புதிய  தொற்றாளர்களாக அடையாளம் காணப்படுகின்றார்கள். இதைக் கட்டுப்படுத்த எதிர்வரும் ஜனவரி மாதம் வரை காலம் எடுக்கும்.

இதேவேளை, பேலியகொட மீன் சந்தை கொரோனா வைரஸ் கொத்தணி நாடு முழுவதிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையும் இப்போதைக்குக் கட்டுப்படுத்த முடியாது. எனினும், இரண்டு மாதங்களுக்குள் கட்டுப்படுத்த முடியும்.

2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நாட்டு மக்களுக்குத் தீர்க்கரமான மாதமாக இருக்கப்போகின்றது. ஆனால், நாட்டு மக்கள் பூரண ஒத்துழைப்பு வழங்கினால் – சுகாதார வழிகாட்டல்களை உரிய முறையில் பின்பற்றினால் இவ்வருடம் முடிவதற்குள் கொரோனாக் கொத்தணிகளுக்கு முடிவுகட்ட முடியும்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.