யாழ். மாநகர சுகாதார சிற்றூழியர்கள் இன்று பணிப்பகிஷ்கரிப்புப் போராட்டம் – வீதியில் நிற்பவர்களைச் சந்திப்பதற்குத் தயாரில்லை என்று மேயர் தெரிவிப்பு.

முறையான முன்னறிவிப்போ அன்றி தெரியப்படுத்தலோ இன்றி வீதியில் நிற்பவர்களைச் சந்திப்பதற்கு நான் தயாரில்லை என்று தெரிவித்த யாழ்ப்பாணம் மாநகர சபையின் மேயர் மதிவதனி விவேகானந்தராஜா, சதிகள், பின்னணிகள் மூலம் போராட்டத்தில் இறங்கியுள்ள இவர்கள், வேண்டுமானால் தன்னை எழுத்து மூலமான ஆவணத்துடன் நேரடியாக வந்து சந்தித்தால் அது தொடர்பில் பரீசலிக்கலாம் என்றும் குறிப்பிட்டார்.

பொறியியலாளரது கட்டுப்பாட்டில் இருந்து தம்மை விடுவித்து பிராந்திய சுகாதார சேவை அதிகாரியின் கீழ் செயற்பட அனுமதிக்குமாறு கோரி யாழ். மாநகர சுகாதார சிற்றூழியர்கள் இன்று பணிப்பகிஷ்கரிப்புப் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

யாழ். மாநகர சபையின் மாதாந்த அமர்வு இன்று நடைபெற்ற நிலையில் இது தொடர்பில் மேயரிடம் உறுப்பினர்கள் கேள்வி எழுப்பிய நிலையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அனைத்து மாநகர, நகர சபைகளினது சுகாதாரப் பகுதிகள் பிராந்திய சுகாதார அதிகாரியின் கீழ்தான் இருந்து வருகின்றது.

ஆனால், யாழ். மாநகரின் சுகாதாரப் பிரிவு மட்டும் பொறியியலாளரது கட்டுப்பாட்டில் இருக்கின்றது.

அதனால் நாளாந்தம் பல்வேறு நடைமுறைப் பிரச்சினைகள் உருவாகி வருகின்றன.

எனவே, இவ்வாறு இருக்கும் நடைமுறையை மாற்றி பிராந்திய சுகதார அதிகாரியின் கீழ் கொண்டுவரல் வேண்டும்.

அத்துடன் ஊழியர்களது நிரந்தர நியமனம், இடமாற்றம், உழவு இயந்திர ஒப்பந்தங்கள் மூலம் வகை தெரியப்படும் திண்மக்கழிவுகள் பிரித்தாழ்கையில் இருக்கும் குழப்பங்கள் உள்ளிட்ட சில நடைமுறை பிரச்சினைகளுக்குத் தீர்வு, கண்காணிப்பாளர்களது இடமாற்றம் உள்ளிட்ட விடயங்களை முன்னிறுத்தி ஊழியர்கள் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

இவர்களது பிரச்சினைக்குத் தீர்வை வழங்க யாழ். மாநகர சபை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.

Leave A Reply

Your email address will not be published.