சினிமாவின் தொழில்நுட்ப ரகசியங்கள் – 01

சினிமாவுக்கு பின்னால்…
சினிமாவின் தொழில்நுட்ப ரகசியங்கள்
– பெ.கணேஷ்

சினிமாவைப் பற்றி நிறைய பேர் நிறைய விஷயங்களை சொல்லியிருக்கிறார்கள். பல புத்தகம் சினிமா தொடர்பாக வந்திருக்கின்றன. ஆனால் அதிலெல்லாமிருந்து சற்றே வித்தியாசமானதாக இந்த தொடர் இருக்கும்.

பதினைந்து ஆண்டுகள் சினிமாவின் உதவி இயக்குநனராக, இணைஇயக்குனராக, வசனகர்த்தாவாக பணியாற்றி இயக்குனராக போராடியவன் நான். என்னுள் இருக்கும் ஏமாற்றம், ஆதங்கம், பின்னோக்கி பார்த்தல், புரிதல் தெளிவு என எல்லா உணர்வுகளையும் கொட்டப்போகிறேன்.

கதை, திரைக்கதை, வசனம், ஒளிப்பதிவு, இயக்கம், எடிட்டிங், டப்பிங், மிக்சிங் என்று சினிமாவிலுள்ள அத்தனை டெக்னிகலாக விஷயத்திலும் என்னோட சேர்ந்து நீங்களும் பயணிக்கப் போகிறீர்கள். இத்தொடர் படித்து முடிக்கிற வேளையில் நிச்சயமாக நீங்கள் ஒரு திரைப்படத்தில் வேலை பார்த்த முழுத்திருப்தியை அடைவீர்கள்.

சினிமா கனவுகளோடு வாழ்ந்துகொண்டிருக்கும் இளைஞர்களுக்கும் சினிமாவை தொடமுடியாமல் வெளிநாடுகளில் ஏக்கத்தோடு வாழ்ந்துக்கொண்டிருக்கும் தமிழ் இளைஞர்களுக்கும் இத்தொடர் ஒரு இளைப்பாருதலாக இருக்கும்.

1

“சினிமா என்பது ஒரு மாய வித்தையோ, கம்பசூத்ரமோ அல்ல நான் என்ன செய்கிறேன் என்பதை என்னருகில் இருந்து இரண்டு நாட்கள் கூர்மையாக கவனித்தாலே போதும் சினிமா என்பது இதுதானா? என அவர்களுக்கு புரிந்துவிடும்”
என்று இயக்குனர் இமயம் பாரதிராஜா அவர்கள் ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிறார்கள்.

அவர் சொல்வது போல் சினிமா ஒரு செப்படு வித்தையோ, விடைகாண முடியாத புதிரோ அல்ல. அது ஒரு கலை. யாரும் எந்த வயதினரும் கற்றறியக்கூடிய, பார்த்து உணரக்கூடிய ஒரு மென்மையான கலை.

நான் முன்னுரையில் சொன்னது போல். நீங்கள் இத்தொடரை படித்து முடிக்கிற வேளையில் நீங்களும் ஒரு சினிமாவை உணர்ந்த, சினிமாவை அறிந்த கலைஞனாகியிருப்பீர்கள்.

அந்த நம்பிக்கையோடு இத்தொடருக்குள் நீங்கள் பிரவேசியுங்கள். முதலில் இத்தொடரை கடினமான டெக்னிகல் வார்த்தைகள் இல்லாமல் மிக இயல்பான வழக்குத் தமிழிலேயே எழுதப்போகிறேன்.

இத்தொடரில் என்னோடு உங்களை கைகோர்த்து அழைத்து செல்லும்விதமாக உங்களுக்கு (வாசகர்களுக்கு) தமிழ் என்கிற பெயரை வைத்திருக்கிறேன். உங்களுக்குள் எழும் சந்தேகம், கேள்விகள் எல்லாமும் தமிழ் என்கிற பெயரின் மூலம் எழுப்பப்பட்டு அதற்கு நான் பதில் சொல்லும் விதமாக தொடர் நகரும். இந்த நடை உங்களுக்கு மிகவும் பிடிக்கும் என்கிற நம்பிக்கையோடு முதலில் திரைப்படத்திற்கு வேர் போன்ற ‘கதை’யில் இத்தொடர் துவங்குகிறது.

1.திரைப்படத்திற்கு கதை எழுதுவது எப்படி?

நிறைய பேர் மனதிலிருக்கும் கேள்வி இது. கிராமங்களில், நகரங்களில் வசிக்கும் இளைஞர்கள் தங்கள் வாழ்க்கையில் சந்தித்த அனுபவங்கள் மனதில் செதுக்கி கதையாக வடிவம் கொடுத்திருப்பார்கள். ஆனால் அதை எப்படி சொல்வது? எப்படி எழுதுவது என்று தெரியாது. எப்படி ஆரம்பிப்பது எப்படி முடிப்பது என்கிற குழப்பம் இருக்கும். கதை என்பது எப்படி சொல்லப்படவேண்டும் கதை எப்படி உருவாக்கப்படவேண்டும் என்று இப்போது பார்ப்போம்.

என்ன தமிழ் நீங்க எதுவும் கேட்கலே?

தமிழ் : அது நானும் ஒரு கதை எழுதி வச்சிருக்கேன் அதை அப்புறம் சொல்கிறேன். முதல்ல நீங்க கதைங்கிறது எவ்வளவு இருக்குன்னு சொல்லுங்க? கதைங்கிறது பெரும்பாலும் எல்லாமும் ஒரே மாதிரிதான் இருக்கும் ஒரு படத்துல ஹீரோ ஏழை, ஹீரோயின் பணக்காரர்ன்னா இன்னொரு படத்துல ஹீரோயின் ஏழை ஹீரோ பணக்காரர்னு இருப்பார்.

நமக்கு கதையைவிட கதையோட கருதான் முக்கியம். அதாவது எலிப்ஸ்டார் உங்கள் காலத்தில் இன்னைக்கு செல்வராகவன், காலம் வரைக்கும் எடுக்கப்பட்டிருக்கிற எல்லா படங்களும் ஒன்பது ‘கரு’விற்குள் தான் அடங்கியிருக்கு.

காதல், பாசம், விட்டுக்கொடுத்தல், தியாகம், சந்தேகம், பிரிந்தவர் சேர்தல், பழிவாங்குதல், வறுமையிலிருந்து முன்னேறுதல், தெய்வீகம்னு ஒன்பது கருக்களில்தான் இதுவரையில் தமிழ் சினிமா நகர்ந்திருக்கிறது. நீங்கள் இதுவரை வெளிவந்திருக்கும் எந்த படத்தை எடுத்துக்கொண்டாலும் அதில் இந்த ஒன்பது கருக்களில் ஏதாவது ஒன்றுதான் இருக்கும்.

இப்படி நீங்கள் முதலில் ஒரு கருவை எடுத்துக்கொண்டு அந்தக் கருவை சார்ந்த கதையை சொல்ல முற்பட வேண்டும். அல்லது உங்கள் மனதிலிருக்கும் கதை இந்த கருக்களில் எந்த கருவை சார்ந்திருக்கிறது என்பதை ஆராய்ந்து அதை தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும்.

உதாரணத்திற்கு மேலே இருக்கும் ஒன்பது கருக்களில் தியாகம், சந்தேகம், பிரிந்தவர் சேர்தல் என்கிற கருக்களை சார்ந்து உங்கள் கதைஇருந்தால் அது ஒரு சக்ஸஸ் பார்முலா கரு. நீங்கள் தாராளமாக உங்கள் கதையை விரிவுபடுத்த ஆரம்பிக்கலாம்.

அடுத்து சமீபத்தில் வந்திருக்கிற வெற்றி படங்களை நீங்கள் இந்த ‘கரு’ என்கிற கண்ணோட்டத்தில் ஆராட்யந்தால் எந்த கருக்களை கொண்ட படங்கள் ஹிட்டாகியிருக்கிறது என்பது உங்களுக்கு புலப்படும்.

உதாரணத்திற்கு தற்போது பெரிய அளவில் ஹிட்டான படங்கள் என்று பார்த்தால் கேரக்டர்களுக்கு சஸ்பென்ஸ் வைத்துவிட்டு அந்த சஸ்பென்ஸை ஆடியன்சுக்கு முதலிலேயே விளக்கிவிடுகிற படங்கள் பெரிய அளவில் வெற்றி பெறுகின்றன. இது ஹாலிவுட் இயக்குனர் ஹிட்ச் காக் ஸ்டைல். அதாவது ஹிட்ச் காக் தனது படங்களில் பலவிதமான சஸ்பென்ஸ் படங்களை எடுத்திருக்கிறார். படம் முழுவதும் குற்றவாளி யார் என்பது படத்தில் நடிக்கும் நடிகர்களுக்கும் தெரியாது. பார்க்கும் பார்வையாளருக்கும் தெரியாது. கடைசியில்தான் அந்த சஸ்பென்ஸ் விளக்கப்படும் இது ஒருவகை சஸ்பென்ஸ்.

குற்றவாளி யார் என்பது கேரக்டர்களுக்கு தெரியும். ஆனால் பார்வையாளனுக்கு சொல்லாமல் படம் முடியும்போது தான் தெரியப்படுத்துவார் அது இரண்டாவது வகை சஸ்பென்ஸ்.

குற்றவாளி யார் என்பதை முதலிலேயே பார்வையாளனுக்கு சொல்லி விட்டு படத்திலுள்ள கேரக்டர்களுக்கு அந்த சஸ்பென்ஸ் படங்கள்தான் தமிழில் பெரிய சக்ஸஸ் ஆகிறது.

உதாரணத்திற்கு காதல் கோட்டை. இந்த படத்தில் அஜீத்தும் தேவயாணியும் காதலிப்பது பார்வையாளனுக்கு தெரியும். ஆனால் அந்த கேரக்டர்கள் ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக் கொள்ளாமல் காதலிப்பார்கள். நேரிலே வரும் போது கூட அவர்களுக்கு தாங்கள் தான் காதலர்கள் என்று தெரியாது. அப்போது முதலிலேயே சஸ்பென்ஸ் தெரிந்ததால் பார்வையாளர்கள் பதறுவார்கள். கடைசியில்தான் அஜீத்துக்கும், தேவயாணிக்கும் தங்கள் தான் காதலர்கள் என்பது புரியும்.

அதேபோல் உள்ளத்தை அள்ளித்தா படத்தில் முதல் ரீலிலேயே ரம்பா யார் என்பது ஆடியன்சுக்கு சொல்லப்பட்டு விடும். ஆனால் கார்த்திக்கிற்கு ரம்பா யார் என்பது தெரியாமல் அவர் வீட்டுக்கே வந்து டிரைவராக வேலைபார்ப்பார். முடிவில்தான் ரம்பாவை தான் தன் அப்பா தனக்கு பெண் பார்த்தார் என்ற விஷயம் தெரியும்.

அதேபோல் சேதுவில் டிவக்ரமின் மனநிலை தெளிவடைந்த விஷயப் சூஆடியன்சுக்கு தெரியும் அபிதாவுக்கு தெரியாது.

ரமணாவில் விஜயகாந்த் தான் மக்கள் புரட்சி நாயகன் என்பது ஆடியன்சுக்கு தெரியும் படத்திலுள்ள கேரக்டர்களுக்கு தெரியாது.

காதல் கொண்டேனில் தனுஷ் சைக்கோ என்பது ஆடியன்சுக்குத் தெரியும் படத்திலுள்ள கேரக்டர்களுக்கு தெரியாது.

இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். நீங்கள் தற்போது உருவாக்கும் கதையை இந்த கருவில் மையப்படுத்தி துவங்குவது நல்லது.

தமிழ் : சரி கதைக்கான நாட் என்கிறார்களே அது என்ன?

இரண்டு மணிநேரம் நீக்க சொல்லப் போகிற கதையின் முக்கியமான பிரச்சனை மற்றும் கருவை சார்ந்த முடிச்சு தான் ‘நாட்’ எனப்படுகிறது.

அதாவது கதையின் போக்கில் அதிரடியாய் ஒரு பிரச்சனையை உருவாக்கி அது எப்படி விலகும் என்கிற கொக்கியை போடுவது.

உதாரணத்திற்கு இத்தனை நாள் தன்னிடம் மிகவும் பாசமாக நடந்து கொண்ட அப்பா அம்மா இருவரும் தன் நிஜ அப்பா அம்மா இல்லை என்கிற அதிரடியான தகவலை சொல்வது. பிறகு அது எப்படி நிகழ்ந்தது அதற்கான தீர்வு என்ன? என்று யோசிக்க வைப்பது முடிவில் விடை சொல்வது. இதுதான் நாட் அதாவது முடிச்சு.

நீங்கள் கதையை தீர்மானித்துவிட்டிருந்தால் அதிலுள்ள முக்கியமான திருப்பம் அல்லது முக்கியமான சம்பவம் எது என்பதை யோசியுங்கள். அந்த திருப்பத்திற்கு பிறகு சம்பவத்திற்கு பிறகு கதையை எப்படி நகர்த்தப் போகிறீர்கள். எப்படி அந்த திருப்பத்திற்கு சம்பவத்திற்கு தீர்வு சொல்லப்போகிறீர்கள் என்று தீர்மானியுங்கள் இப்படி நீங்கள் தீர்மானித்து விட்டால் முழு கதையையும் உருவாக்கி விட்டீர்கள் என்று அர்த்தம்.

தமிழ் : நான் முழுகதையையும் யோசிச்சிட்டேன். அதை எப்படி தயாரிப்பாளர்கள் கிட்டே சொல்றது?

நீங்கள் யோசித்திருக்கும் கதையில் முதலில் ‘கரு’ என்ன என்பதை தீர்மானித்து விட்டீர்களா? அடுத்து கதைக்குள் நிகழும் அதிரடியான சம்பவமும் அதற்கான தீர்வும் என்கிற ‘நாட்’டை தீர்மானித்துவிட்டீர்களா? இப்போது தாராளமாக கதை சொல்ல புறப்படலாம். ஏனெனில் ஒரு தயாரிப்பாளர் முதலில் கேட்கும் கேள்விகள் இதுதான் படத்தின் கரு என்ன? நாட் என்ன?

நீங்கள் இதில் தெளிவாக இருப்பதால் பிரச்சனையில்லை உடனே சொல்லிவிடலாம். கதையின் கருவும், நாட்டும் பிடித்திருந்தால் உடனே முழுக் கதையையும் சொல்லும்படி தயாரிப்பாளர் உங்களிடம் கேட்பார். உடனே நீங்கள் உங்கள் கதையில் வரும் நாயகன் யார் என்பதை அவரின் கற்பனைக்காக ஒரு பிரபல ஹீரோவின் பெயரைச் சொல்லி அவர் மூலமாகவே கதை நகர்வதாக ஆரம்பிக்கலாம்.

நீங்கள் சொல்லப்போகிற கதைக்காக ஒரு மணி நேரத்தையோ அதற்கும் கூடுதலான நேரத்தையோ செலவிட முடியாத பிஸியில் இருக்கும் தயாரிப்பாளர் என்றால் இரண்டு வரியில் உங்கள் கதையை சொல்லுங்கள் என்பார். அப்பொழுது நீங்கள் அதிர்ச்சியடையாமல் தைரியமாக இரண்டு வரிகளில் கதை சொல்ல முடியும் அதாவது கதையின் கருவையும் நாட்டையும் இணைத்து நீங்கள் தீர்மானித்திருக்கிற கதையை இரண்டே வரிகளில் சொல்லிவிடலாம்.

உதாரணத்திற்கு இயக்குனர் பாக்யராஜ் அவர்கள் தனது படத்தின் கதையை இரண்டே வரிகளில் தீர்மானிப்பதாக எழுதியிருக்கிறார். அதாவது அவருடைய அந்த ஏழு நாட்கள் படத்தின் கதையை இரண்டு வரியில் சொல்வதென்றால்.

“என் காதலி உன் மனைவியாகலாம். ஆனால்
உன் மனைவி என் காதலியாக முடியாது.”

இதுதான் அந்த முழுபடத்தின் கதை நீங்கள் யோசித்திருக்கும் கதை இதுபோல் இரண்டு வரிகளில் சொல்ல முடியுமா? என்று யோசியுங்கள்.

வித்தியாசமான ‘நாட்’கள் உருவாக இந்த இரண்டு வரி கதை என்பது ஒரு டெக்னிக்கான விஷயமாக இருப்பதால் உங்கள் கதையை நீங்கள் மேலும் மெருகூட்ட இது ஒரு வழியாக இருக்கும். அடுத்து நீங்கள் ஒரு மணி நேரத்திற்கு கதை சொல்வதாக இருந்தால் முதலில் கதையை துவங்கும் போது கதை துவங்கும் காலம் அதாவது பருவம் கதை நடக்கும் இடம் (களம்) இரண்டையும் மிகத் தெளிவாக குறிப்பிடுங்கள். அது ஒரு மழைக்காலம் கடற்கரையோர கிராமம் அதில் நடுத்தர குடும்பத்தை சார்ந்த முஙபபது வயது இளைஞன் தான் ஹீரோ என்று தெளிவாக ஆரம்பிக்க வேண்டும். அடுத்து கதையின் போக்கை முழு படத்திற்கும் நான்கு பகுதிகளாக பிரித்துக் கொள்ள வேண்டும்.

முதல் பகுதியில் கதையிலுள்ள பாத்திரங்களும், பாத்திரங்களின் தன்மைகளும் விளக்கப்பட வேண்டும். அதேபோல் படத்தில் முதல் பத்து நிமிடங்களுக்குள்ளாகவே கதைக்குள் பார்வையாளனை ஒன்ற வைக்கும் விதமாக கதையை உருவாக்க வேண்டும்.

அடுத்து இடைவேளை பகுதிவரை இரண்டாவது பகுதியாக நிர்ணயிக்க வேண்டும் அந்த இரண்டாவது பகுதியில்தான் நீங்கள் அனுமானித்திருக்கிற திருப்பம் என்கிற நாட் வரவேண்டும் அப்பொழுது தான் இடைவேளைக்கு செல்கிற பார்வையாளர்களின் மனதில் அது என்ன? ஏன்? என்னவாகும்? என்கிற கேள்விகளை உருவாக்கி அடுத்த நகர இருக்கிற படத்தில் ஆர்வமாக ஒன்றிடச் செய்யும்.

இடைவேளைக்கு அடுத்தது மூன்றாவது பகுதியாக தீர்மானித்து கதையை துவக்கி, நீங்கள் உருவாக்கிய பிரச்சனை எதனால் வந்தது? ஏன் அந்த நிலை என்பதை விளக்க வேண்டும்.

கடைசி நான்காவது பகுதியில் அந்த திருப்பத்திற்கு விடை சொல்ல ஆரம்பித்து தெளிவான பதிலாக சொல்ல வேண்டும். இப்படி நான்கு பகுதிகளாக பிரித்துக் கொண்டால் நீங்கள் கதையை நகர்த்தி செல்ல ஏதுவாக இருக்கும்.

முன்பெல்லாம் எம்.ஜி.ஆர் ஃபார்முலா என்றிருந்தது முதலில் ஒரு அம்மா அல்லது பாசத்தை உள்ளடக்கிய ஒரு செண்டிமெண்ட் சீன். அடுத்து ஒரு காமெடி அடுத்து ஒரு ரொமான்ஸ் சீன் அடுத்து ஒரு ஃபைப் என முழுபடமும் சங்கிலிக் கோர்வையாக நகரும்.

முதலில் சீனில் ஹீரோவும் ஹீரோயினும் மிகவும் சந்தோஷமாக இருக்கிறார்கள் என்றால் அடுத்த சீள்ன சோக சீனாக இருக்கும்.

ஆனால் இன்று அதுபோல் எந்த பார்முலாவில் இல்லை முதல் ரீலிலேயே மூன்று பாடல்கள் கூட வருகிறது. இடைவேளைக்கு முன்பே கதை முடிந்து இடைவேளைக்குப் பிறகு வேறு கதை ஆரம்பிக்கிறது.

ஆனாலும் கதையோட்டத்தில் ப்ளோ என்கிற தெளிவு இப்போது கண்டிப்பாக இருந்தே ஆகவேண்டிய சூழலிருக்கிறது.

நீங்கள் உங்கள் கதையை மேலே சொன்னது போன்று நான்கு பகுதிகளாக பிரித்துக்கொண்டால் கண்டிப்பாக கதையோட்டம் தெளிவாகி விடும்.

தமிழ் : சரி. கதை இப்படி இருக்கட்டும் திரைக்கதைன்னு சொல்றாங்களே அதை எப்படி எழுதுறது?

மேலே சொன்ன நான்கு பகுதிகளாக பிரித்துக்கொள்ளும் டெக்னிக்கே திரைக்கதைக்கான டெக்னிக்தான்.

தொடரும் ……

Thanks: Kumudam.com

Comments are closed.