இந்திய மீனவர் இன்று கைது: மறுத்தது இலங்கை கடற்படை

முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாணம் கடற்பரப்பின் இடையே வெற்றிலைக் கேணி பகுதியில் 14 இந்திய மீனவர்கள் கைதுசெய்யப்பட்டனர் என்று வெளியாகிவரும் செய்திகளில் எந்தவித உண்மையும் இல்லை என்று இலங்கை கடற்படை அறிவித்துள்ளது.

இலங்கை கடற்படையினரால் 14 இந்திய மீனவர்கள் இன்று அதிகாலை கைதுசெய்யப்பட்டனர் என்று செய்திகள் வெளியிடப்பட்டிருந்தன.

இதுகுறித்து இலங்கை கடற்படைப் பேச்சாளர் இசுறு சூரியபண்டாரவிடம் கொழும்பு ஊடகம் ஒன்று வினவியபோது, அவர்கள் கைது செய்யப்படவில்லை என்றும், குறித்த மீனவர்கள் பயணித்த 2 படகுகள் இலங்கை கடற்பரப்புக்கு அண்மித்த பகுதியில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தரித்து நின்றன எனவும், அதனைத் திருத்துவதற்காக இலங்கை கடற்படை அதிகாரிகள் சிலர் முயற்சிகளை எடுத்தனர் எனவும் விளக்கம் வழங்கினார்.

இதேவேளை, 2015ஆம் ஆண்டு முதல் 2018ஆம் ஆண்டு இறுதிவரை இலங்கை கடற்பரப்பில் வைத்து பறிமுதல் செய்யப்பட்ட இந்திய மீனவர்களின் 140 இற்கும் அதிகமான படகுகளை மீண்டும் அவர்களுக்குப் பெற்றுக்கொடுப்பது பற்றி அண்மையில் இலங்கை மீன்பிடி அமைச்சுக்குக் கடிதம் அனுப்பியதாகவும் கடற்படைப் பேச்சாளர் தெரிவித்தார்.

இந்தப் படகுகள் வருடக்கணக்காக நிறுத்திவைக்கப்பட்டிருந்தபடியால் சேதமடைந்து விட்டன எனவும், அவற்றைத் திருத்திய பின்னரும் மீண்டும் பெற்றுக்கொள்ள இந்திய மீனவர்கள் வராதபடியால் அவர்களுக்கே மீண்டும் படகுகளை வழங்க நடவடிக்கை எடுக்கும்படி கூறி அனுப்பிவைத்த கடிதத்துக்கு அமைச்சு இன்றுவரை நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் இலங்கை கடற்படைப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டார்.

Leave A Reply

Your email address will not be published.