ட்ரம்ப்பின் செயலுக்கு ரணில் கடும் கண்டனம்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான நிர்வாகம், பிற நாடுகளின் ஆட்சி அதிகாரத்தை வலுக்கட்டாயமாக மாற்ற எடுக்கும் நடவடிக்கைகள் எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்று இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் முன்னெடுத்து வரும் இராணுவத் தாக்குதல்கள் குறித்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், இஸ்ரேலுடன் இணைந்து ஈரானின் தற்போதைய தலைமையை அகற்ற முயற்சிக்கின்றார். ஒரு நாட்டின் அரசை அகற்றுவதாக இருந்தால், அதற்குப் பயன்படுத்தப்படும் இத்தகைய வன்முறை வழிமுறைகளை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. இது சர்வதேச சட்டங்கள் மற்றும் மரபுகளுக்கு முற்றிலும் முரணானது என சுவிற்சர்லாந்தும் நோர்வேயும் ஏற்கனவே சுட்டிக்காட்டியுள்ளன.” – என்றார்.

இந்த விவகாரம் மிகவும் பாரதூரமானது என்று குறிப்பிட்ட அவர், இவ்வாறான உலக அரசியல் போக்குகள் இலங்கையைப் போன்ற சிறிய நாடுகளுக்குச் சாதகமானவை அல்ல என்றும் எச்சரித்தார்.

“அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் உலகம் முழுவதும் தனது விருப்பப்படி இயங்க வேண்டுமென எதிர்பார்க்கின்றார். ஆனால், இது போன்ற ஆழமான சர்வதேசப் பிரச்சினைகள் மற்றும் அதிகாரப் போட்டிகள் சிறிய நாடுகளின் ஸ்திரத்தன்மைக்குப் பெரும் பாதிப்பையே ஏற்படுத்தும்.” – என்றும் ரணில் விக்கிரமசிங்க மேலும் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.