பயணத் தடைகளைத் தன்பாட்டில் இராணுவத் தளபதி விதிக்கலாமா? யார் அதிகாரம் கொடுத்தார்கள்.சுமந்திரன் கேள்வி.

பயணத் தடைகளைத் தன்பாட்டில் இராணுவத் தளபதி விதிக்கலாமா? யார் அதிகாரம் கொடுத்தார்கள் என நாடாளுமன்றில் சுமந்திரன் கேள்வி.

“இராணுவத் தளபதி சவேந்திர சில்வா, கடந்த புதன்கிழமை இரவு திடீரென ஓர் அறிவிப்பை விடுகின்றார். ‘மேல் மாகாணத்தில் உள்ள எவரும் மேல் மாகாணத்தை விட்டு வெளியேற முடியாது என்ற உத்தரவு உடனடியாக அமுலுக்கு வருகின்றது. எதிர்வரும் 15ஆம் திகதி வரையில் இந்த உத்தரவு நடைமுறையில் இருக்கும்’ என்று அரச கட்டளை ஒன்றைப் பிறப்பித்துள்ளார். எந்தச் சட்டத்தின் பிரகாரம் இராணுவத் தளபதி இந்தக் கட்டளையைப் பிறப்பித்துள்ளார்? இவ்வாறான  கட்டளைகளைப் பிறப்பிப்பதற்கான சட்ட அங்கீகாரம் இராணுவத் தளபதிக்கு இருக்கின்றதா?”  இவ்வாறு அரசிடம் கேள்வி எழுப்பினார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன்.

நாடாளுமன்றத்தில் நேற்று பிரதமரும் நிதி அமைச்சருமான மஹிந்த ராஜபக்சவால் சமர்ப்பிக்கப்பட்ட 2020ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டு சட்டமூல விவாதத்தில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கேள்வி எழுப்பினார்.

இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“தற்போதைய அரசு  முன்வைத்துள்ள 2020ஆண்டுக்கான ஒதுக்கீடு சட்ட அங்கீகாரம் பெற்ற ஒன்றல்ல. அரசமைப்பின் 148ஆம் சரத்தில் பொது நிதி முழுமையாக நாடாளுமன்றத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது எனத் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. இந்த விடயங்களில் நாடாளுமன்ற அனுமதி இல்லாது எந்த நிறுவனத்தின் நிதியையும் கையாள முடியாது. இதில் அரச ஊழியர்களுக்கான கொடுப்பனவு அல்லது அரச சேவையுடன் நேரடியாகத் தொடர்புபட்ட விடயங்களுக்கு மாத்திரமே நிதியை நாடாளுமன்ற அங்கீகாரம் இல்லாது கையாள முடியும் என்ற மாற்று சரத்தும் உள்ளது. அது தவிர்ந்து வேறு எந்தவொரு விடயத்துக்கும் அரச நிதி கையாளப்பட முடியாது.

இவ்வாறு சரத்துக்கள் உள்ள நிலையில் இரண்டு தடவைகள் நாடாளுமன்ற அனுமதி இல்லாது ஜனாதிபதியால் பொது நிதி கையாளப்பட்டுள்ளது. எனவே, இன்று (நேற்று) சபைக்குச் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 2020ஆம் ஆண்டுக்கான  ஒதுக்கீட்டுச் சட்டமூலம் சட்ட ரீதியற்றது. எனவே, இந்தவிவாதமும் சட்ட அங்கீகாரம் இல்லாத ஒன்றே என்பதால் எம்மால் இதனை அங்கீகரிக்க முடியாது.

இதேவேளை, இராணுவத் தளபதி சவேந்திர சில்வா, கடந்த புதன்கிழமை இரவு திடீரென ஓர் அறிவிப்பை விடுகின்றார். ‘மேல் மாகாணத்தில் உள்ள எவரும் மேல் மாகாணத்தை விட்டு வெளியேற முடியாது என்ற உத்தரவு உடனடியாக அமுலுக்கு வருகின்றது. எதிர்வரும் 15ஆம் திகதி வரையில் இந்த உத்தரவு நடைமுறையில் இருக்கும்’ என்று அரச கட்டளை ஒன்றைப் பிறப்பித்துள்ளார். எந்தச் சட்டத்தின் பிரகாரம் இராணுவத் தளபதி இந்தக் கட்டளையைப் பிறப்பித்துள்ளார்? இவ்வாறான  கட்டளைகளைப் பிறப்பிப்பதற்கான சட்ட அங்கீகாரம் இராணுவத் தளபதிக்கு இருக்கின்றதா? என இங்குள்ள அரச தரப்பினர் யாராவது தெளிவுபடுத்த முடியுமா?

இது அரசர் ஒருவர் தான் விரும்பியவாறு பொதுமக்களுக்குக் கட்டளை பிறப்பிப்பது போன்றுள்ளது. இராணுவத் தளபதியால் சட்டத்துக்கு முரணாகவே இந்தக் கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்ல தனிமைப்படுத்தல் ஊரடங்கு என்ற ஒன்றை இன்று நாட்டில் பிறப்பித்துள்ளனர். இதுவும்கூட  சட்டத்துக்கு முரணானது. 123 ஆண்டுகள் பழமையான சட்டத்தைப் பயன்படுத்தியே இப்போது இந்த உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளனர். இது கொலரா நோய் ஏற்பட்ட காலத்தில் பயன்படுத்தப்பட்ட சட்டம். எனவே, இந்தச் சட்டங்களில் மாற்றங்களைக் கொண்டுவர வேண்டியது அவசியம்.

இதேபோன்றே சட்டத்துக்குப் புறம்பான இன்னுமொரு விடயமும் உள்ளது.  அதாவது சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேவை கருதி மாத்திரம் நாடாளுமன்றத்துக்கு வர முடியும் என்ற சட்டம் உள்ளது. இவ்வாறான நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) எவ்வாறு மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டார்? அவரால் எவ்வாறு கட்டடத் திறப்பு விழாவுக்குச் செல்ல முடிந்தது? எந்தச் சட்டத்தின் அடிப்படையில் அவருக்கு இந்த அனுமதிகள் வழங்கப்பட்டன என்பதற்கு விளக்கமளிக்க முடியுமா?

இவ்வாறான விடயங்களைப் பார்க்கின்றபோது  இந்த அரசு சகல நடவடிக்கைகளையும்  சட்டத்துக்கு முரணாகவே  செய்து வருகின்றது என்பது உறுதிப்படுத்தப்படுகின்றது” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.