இலங்கைக் கடற்பரப்பில் மீட்கப்பட்ட 236 ஈரானிய கடற்படையினரும் விசேட விமானம் தாயகத்துக்கு!

இலங்கையின் பாதுகாப்பில் வைக்கப்பட்டிருந்த ஈரானிய கடற்படையைச் சேர்ந்த 236 வீரர்கள், மனிதாபிமான அடிப்படையிலான விசேட ஏற்பாடுகளின் கீழ் செவ்வாய்க்கிழமை இரவு அவர்களது தாயகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இது குறித்து பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் அருண ஜயசேகர கருத்துத் தெரிவிக்கையில்; “இலங்கைக் கடற்பரப்புக்கு அருகில் அமெரிக்க நீர்மூழ்கித் தாக்குதலுக்குள்ளான ‘IRIS Dena’ கப்பலிலிருந்து மீட்கப்பட்ட 32 வீரர்களும், ‘IRIS Bushehr’ கப்பலில் இருந்த 204 மாலுமிகளுமே இவ்வாறு பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்” – என்று தெரிவித்தார்.

கடலில் விபத்துக்குள்ளாகி, இலங்கை கடற்படையினரால் காயமடைந்த நிலையில் மீட்கப்பட்ட இவர்கள், நாட்டில் உள்ள வெலிசறை மற்றும் கொக்கல தடுப்பு மையங்களில் தங்கவைக்கப்பட்டு உரிய பாதுகாப்புடன் பராமரிக்கப்பட்டு வந்தனர்.

இவர்களை அழைத்துச் செல்வதற்காக ‘Meraj Airlines’ நிறுவனத்துக்குச் சொந்தமான ‘Iran-09’ என்ற விசேட விமானம் நேற்று மாலை 4 மணியளவில் கட்டுநாயக்க விமானப்படைத் தளத்தை வந்தடைந்தது. அதனைத் தொடர்ந்து, வெலிசறை முகாமிலிருந்த 204 பேரும், கொக்கல முகாமிலிருந்த 32 பேரும் பலத்த பாதுகாப்புடன் விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.

அனைத்து சட்ட நடைமுறைகளும் பூர்த்தி செய்யப்பட்ட நிலையில், குறித்த விசேட விமானம் இரவு 8.35 மணியளவில் கட்டுநாயக்க விமானப்படைத் தளத்திலிருந்து ஈரானை நோக்கிப் புறப்பட்டது. சர்வதேச மனிதாபிமான ஒத்துழைப்பின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது என்று பாதுகாப்புத் துறை அதிகாரிகள் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.