டித்வா பேரிடரால் பாதிக்கப்பட்ட மலையக மக்களை இன்னமும் கூடாரங்களிலேயே தவிக்கவிட்டுள்ளது அரசு – ஆஸ்திரேலிய தூதுவரிடம் மனோ கணேசன் முறையீடு.

“பாதுகாப்பான காணி இல்லை என்ற காரணத்தைக் கூறி, ‘டித்வா’ பேரிடரினால் பாதிக்கப்பட்ட மலையக அகதிகளை அநுர அரசு இன்னமும் தற்காலிகக் கூடாரங்களிலேயே தவிக்க விட்டுள்ளது. இந்நிலைமை கண்டி, நுவரெலியா மற்றும் பதுளை மாவட்டங்களில் தொடர்கின்றது.”

– இவ்வாறு தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பி. தெரிவித்தார்.

கொழும்பில் உள்ள ஆஸ்திரேலியா ஹவுஸில் இலங்கைக்கான ஆஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மெத்யூ டக்வொர்த்துக்கும் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தூதுக் குழுவினருக்கும் இடையில் நடைபெற்ற விசேட உயர்மட்டச் சந்திப்பின் போதே அவர் இந்த விவரங்களை ஆஸ்திரேலியத் தரப்பிடம் உத்தியோகபூர்வமாக எடுத்துரைத்தார்.

டித்வா புனருத்தாரணப் பணிகளுக்காக, இலங்கைக்குப் பாதுகாப்பான நிலத்தைத் தெரிவு செய்வது எப்படி என்ற தொழில்நுட்ப உதவிகளை ஆஸ்திரேலிய அரசு வழங்குவது குறித்துத் தனது மகிழ்ச்சியைத் தெரிவித்த மனோ கணேசன் எம்.பி., தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தைப் பலப்படுத்துவதற்கு ஆஸ்திரேலிய அரசு வழங்கி வரும் ஆதரவுக்காகத் தூதுக்குழு சார்பாக நன்றியையும் தெரிவித்துக்கொண்டார்.

தமிழ் முற்போக்குக் கூட்டணியின் ஊடக செயலகம் விடுத்துள்ள உத்தியோகபூர்வ அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

“டித்வா பேரிடரினால் பாதிக்கப்பட்ட மலையகக் குடும்பங்களுக்கான மீள்குடியேற்றத்துக்குப் பொருத்தமான காணிகளை அடையாளம் கண்டு விடுவிப்பதில், தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் உத்தியோகபூர்வ அனுமதி தாமதமே தற்போதைய பிரதான தடையாகக் காணப்படுகின்றது.

டிஜிட்டல் வரைபடமாக்கல் மற்றும் தொழில்நுட்பத் திறனை மேம்படுத்துவதற்காக ஆஸ்திரேலியா வழங்கும் ஆதரவானது, பாதிக்கப்படக்கூடிய எமது மலையகச் சமூகங்களின் பாதுகாப்பான மற்றும் நிலையான மீள்குடியேற்றத்தை விரைவுபடுத்த உதவும் மிக முக்கிய பங்களிப்பாகும்.

உங்களது நிதி மற்றும் தொழில்நுட்ப உதவிகள் இலங்கை அரசுக்கு வழங்கப்படும் வேளைகளில், அவை உண்மையாகவே பாதிக்கப்பட்ட மலையக மக்களுக்குப் பயன்படுகின்றதா என்பதை ஆஸ்திரேலியத் தரப்பு நேரடியாகக் கண்காணித்து உறுதிப்படுத்த வேண்டும்.” – என்றும் மனோ கணேசன் எம்.பி. இந்தச் சந்திப்பில் வலியுறுத்தினார்.

இந்த விசேட இராஜதந்திரச் சந்திப்பில் தமிழ் முற்போக்குக் கூட்டணி சார்பாக அதன் தலைவர் மனோ கணேசன் எம்.பியுடன், இரத்தினபுரி பிரதேச சபையின் உப தவிசாளரும் ஜ.ம.முவின் சிரேஷ்ட உப தலைவருமான சந்திரகுமார், சர்வதேச விவகாரங்கள் தொடர்பான உப தலைவர் பாரத் அருள்சாமி ஆகியோரும் கலந்துகொண்டனர்.

ஆஸ்திரேலியத் தரப்பில் உயர்ஸ்தானிகர் மெத்யூ டக்வொர்த், துணைத் தூதுவர் ரூத் பைர்ட் மற்றும் அரசியல் அதிகாரி மெத்யூ லார்ட் ஆகிய முக்கிய அதிகாரிகள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.