பொலிஸாரின் கெடுபிடிகளுக்கு மத்தியில் காணிகளை உடனே விடுவிக்கக் கோரி பலாலி சந்தியில் தொடரும் போராட்டம்! – தார்ப்பாளைக் கைகளால் பிடித்தவாறு மக்கள் கவனவீர்ப்பு.

https://we.tl/t-YmPckpcBwnxicZ4d

யாழ்ப்பாணம், வலிகாமம் வடக்கு மக்கள் தமது காணிகளை விடுவிக்கக் கோரி பலாலி சந்தியில் இன்று ஞாயிற்றுக்கிழமை ஆறாவது வாரமாகவும் தொடர் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

கடந்த 36 வருடங்களாகக் காணிகளை இழந்த மக்கள், இராணுவத்தினர் வசமுள்ள தமது சொந்த நிலங்களை உடனடியாக விடுவிக்குமாறு கோரி இப்போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மக்களின் காணிகளில் இராணுவத்தினர் விவசாய நடவடிக்கைகள் மற்றும் வர்த்தக நிலையங்களை அமைத்துத் தமது சொந்தத் தேவைகளுக்குப் பயன்படுத்தி வருகின்றமையால், தாம் நீண்ட காலமாக வீடுகள் மற்றும் நிலங்கள் அற்று நிர்க்கதியாக வாழ்ந்து வருகின்றனர் என்று அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, கடந்த வாரங்களில் போராட்டக்காரர்கள் பயன்படுத்திய, பலாலி பொதுநோக்கு மண்டபத்துக்கு அருகில் காணப்பட்ட வலிகாமம் வடக்கு பிரதேச சபைக்குச் சொந்தமான குடிதண்ணீர் தாங்கி மற்றும் தற்காலிக மலசலக்கூடம் என்பவற்றைப் பலாலிப் பொலிஸார் அங்கிருந்து அகற்றிப் பொலிஸ் நிலையத்துக்கு எடுத்துச் சென்றுள்ளனர். இதனால் இன்று போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் குடிதண்ணீர் மற்றும் மலசலகூட வசதிகள் இன்றி பல்வேறு இன்னல்களுக்கு முகங்கொடுத்தனர்.

அத்துடன், போராட்டத்தில் தற்காலிகக் கொட்டகை அமைக்கவோ அல்லது தார்ப்பாள் கட்டுவதற்காக இரண்டு தடிகளை நாட்டவோ கூடப் பொலிஸார் அனுமதிக்கவில்லை. இதனால் முதியவர்கள் உள்ளிட்ட மக்கள், கைகளினால் தார்ப்பாளைப் பிடித்தவாறே கடும் வெயிலின் கொடுமையிலிருந்து தம்மைக் பாதுகாத்துக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இன்றைய போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறிதரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உள்ளிட்ட பல அரசியல்வாதிகளும் கலந்துகொண்டு தமது ஆதரவைத் தெரிவித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.