கொரோனாவைக் காரணம் காட்டி ஊடகங்களுக்கு அரசு கதவடைப்பு. ரணில் கடும் சீற்றம்.

கொரோனாவைக் காரணம் காட்டி
ஊடகங்களுக்கு அரசு கதவடைப்பு
ரணில் கடும் சீற்றம்

“கொரோனா வைரஸ் தொற்றைக் காரணம் காட்டி ஊடகங்களுக்கு நாடாளுமன்றக் கதவுகள் அடைக்கப்பட்டமை ஜனநாயகத்தின் எதிர்காலத்துக்குச் சுபயோகமாக அமையாது.”

– இவ்வாறு சுட்டிக்காட்டியுள்ளார் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை கட்சி உறுப்பினர்கள் நேற்று சந்தித்தபோதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“2021ஆம் நிதியாண்துக்காக ஆளும் கட்சி சமர்ப்பித்துள்ள வரவு – செலவுத் திட்டத் தரவுகள் பல தவறானவையாகும். நாட்டின் பொருளாதார அபிவிருத்தி வேகம் மறை எண்ணில் இருக்கின்றது என மத்திய வங்கி தெரிவித்திருந்தது. ஆனால், வரவு – செலவுத் திட்ட அறிக்கையில் நாட்டின் பொருளாதாரம் அபிவிருத்தி நிலையில் உள்ளது எனத் தரவுகளுடன் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு போலித் தரவுகளுடன் செயற்பட்டால் பணவீக்கமே ஏற்படும்.

அதன் பின்னர் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை அதிகரிக்கும். வரிச் சலுகைகள் வழங்கினாலும் கொள்வனவு செய்ய மக்களிடம் பணம் இருக்க வேண்டும்.

மக்களுக்கு வருமானத்தை ஏற்படுத்தும் வகையில் ஆளும் கட்சியின் வரவு – செலவுத் திட்டம் அமையவில்லை என்பது கவலைக்குரிய விடயமாகும். எனவே, மக்களைத் தெளிவுபடுத்த வேண்டும்.

குறைகளை ஆதாரத்துடன் ஒப்புவிக்க ஐக்கிய தேசியக் கட்சி செயற்பட வேண்டும். இந்த விடயத்தில் பிரதித் தலைவர் என்ற வகையில் ருவன் விஜேவர்தனவுக்குப் பாரிய பொறுப்புள்ளது.

ஜனநாயகத்தின் முக்கிய தூணாக ஊடகம் உள்ளது. இவ்வாறானதொரு நிலையில் நாடாளுமன்றமே ஊடகத்தை ஓரங்கட்டுவது என்பது ஜனநாயகத்தின் எதிர்காலத்துக்குச் சுபயோகமாக அமையாது.

ஊடகங்கள் என்னைப் படுமோசமான முறையில் விமர்சித்தன. ஆனால், ஊடக சுதந்திரத்தைப் பாதுகாப்பதில் மும்முரமாகச் செயற்பட்டேன். கொரோனாவைக் காரணம் காட்டி ஊடகங்களுக்கு நாடாளுமன்றக் கதவுகள் அடைக்கப்பட்டமை தவறாகும். தற்போதைய எதிர்க்கட்சி (சஜித் அணி) இதனைப் பேசுவதில்லை” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.