மட்டக்களப்பில் கித்துள் குளங்களின் இணைப்பினூடாக நீர் கொள்ளவினை பெற முயற்சி

மட்டக்களப்பில் உறுகாமம், கித்துள் குளங்களின் இணைப்பினூடாக 90 எம்.சீ.எம். நீர் கொள்ளவினைப் பெற்றுக்கொள்ள சாத்திய வளங்கள் ஆராய்வு

முந்தனை ஆறு ஆற்றுப்படுக்கை அபிவிருத்தித் திட்டத்தின்கீழ் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள உறுகாமம் மற்றும் கித்துள் குளங்களினை இணைத்து உருவாக்கப்படவுள்ள நீர்த்தேக்கத்தினை 90 எம்.சீ.எம். ஆக உயர்த்துவதற்கான சாத்திய வளங்களை ஆராயம் விசேட கூட்டம் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு இணைத்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சிவனேசதுரை சந்திரகாந்தனின் பங்குபற்றுதலுடன், அரசாங்க அதிபர் கே. கருணாகரன் தலைமையில் இன்று (27) மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
பிரான்ஸ் நாட்டு அபிவிருத்தி நிறுவனம், ஐரோப்பிய ஒன்றியம் மாற்றம் இலங்கை அரசின் நிதிப் பங்களிப்புடன் மேற்கொள்ளப்படவிருக்கும் முந்தனை ஆறு ஆற்றுப்படுக்கை அபிவிருத்தித் திட்டத்தில் உறுகாமம், கித்துள் குளங்கள் இணைத்த நீர்த்தேக்கத்திட்டம் 58 எம்.சீ.எம். ஆக உயர்த்துவதற்கான முன்மொழிவுகள் வைக்கப்பட்டு திட்டமிடப்பட்டிருந்தது.
இருப்பினும் தற்பொழுது இந்நீர்த்தேக்கத்தினை 90 எம்.சீ.எம். ஆக உயர்த்துவதன் மூலம் இப்பகுதியில் தற்போதுள்ள 11 ஆயிரம் நீர்ப்பாசனக் காணிகளுக்கு மேலதிகமாக 14 ஆயிரத்தி 230 ஏக்கர் விவசாய காணிகளுக்கு இருபோகத்திற்கான நீர்ப் பாசனம் வழங்கமுடிவதுடன், 25 ஆயிரம் குடும்பங்களுக்கு குடிநீர் வசதிகளையும் வழங்க முடியுமாகவுள்ளது.
இந்நீர்த் தேக்கத்தினை 90 எம்.சீ.எம். ஆக உயர்துவதற்கான சாத்தியவள அறிக்கை சம்மந்தப்பட்ட திணைக்களங்களினாலும், நிபுனர் குழுவினாலும் ஆராயப்பட்டு வருகின்றதுடன் இதுவரை அவ்அறிக்கை நிறைவு பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
இதுதவிர இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதனூடாக சித்தாண்டி, வந்தாறுமூலை, கிரான், முறக்கட்டான்சேனை பிரதேசங்களில் ஏற்படும் வெள்ளப் பெருக்கு குறைவடைதல், விவசாய நிலங்களின் உற்பத்தி அதிகரித்தல், உப உணவுப் பளிர்ச் செய்கை அதிகரித்தல், நன்னீர் மீன்பிடி வசதி அதிகரித்தல், கால்நடைக்கிசைவான பயிர் செய்கை ஊக்குpத்தல், மேச்சல்தறை வசதிகளைப் பெற்றுக் கொள்ளல் போன்ற நேரடி நன்மைகள் பெற்றுக் கொள்ளக்கூடியதாக எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்விசேட கூட்டத்தில் மேலதிக அரசாங்க அதிபர் திருமதி. சுதர்சினி ஸ்ரீகாந்த், கிழக்கு மாகாண நீர்ப்பாசன பணிப்பாளர் சமன் வீரசிங்க, மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திருமதி. சசிகலா புண்ணியமூர்த்தி, சம்மந்தப்பட்ட திணைக்கள உயர் அதிகாரிகள் பலரும் பிரசன்னமாயிருந்தனர்.

Sathasivam Nirojan

 

Leave A Reply

Your email address will not be published.