‘சந்திரசேகரன் மக்கள் முன்னணி’ அனுஷா தலைமையில் உதயம்! 

‘சந்திரசேகரன் மக்கள் முன்னணி’
அனுஷா தலைமையில் உதயம்! 

மலையக மக்கள் முன்னணியின் ஸ்தாபகத் தலைவர் மாமனிதர் பெ.சந்திரசேகரனின் புதல்வி சட்டத்தரணி அனுஷா  சந்திரசேகரன் தலைமையில் ‘சந்திரசேகரன் மக்கள் முன்னணி’ என்ற பெயரில் புதியதொரு அரசியல் கட்சி உதயமாகியுள்ளது.

அத்துடன், ‘அண்ணா சந்திரசேகரன் தொழிலாளர் முன்னணி’ எனும் தொழிற்சங்கப் பிரிவும் அமைக்கப்பட்டுள்ளது. இவ்விரு அமைப்புக்களினதும் பொதுச்செயலாளராக அனுஷா சந்திரசேகரன் செயற்படுவார். ஏனைய உறுப்பினர்கள் விபரம் விரைவில் அறிவிக்கப்படவுள்ளது.

புதிய அரசியல் கட்சி ஆரம்பித்தமை தொடர்பில் கருத்து வெளியிட்ட அனுஷா சந்திரசேகரன் கூறியவை வருமாறு:-

“கடந்த பொதுத் தேர்தலில் எனக்கு நேரடியாக வாக்களித்த 17 ஆயிரத்துக்கும் அதிகமானோர் மற்றும் வாக்களிக்க முயற்சித்த 5 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொடுத்த ஆதரவைத் தேர்தலோடு நான் மட்டுப்படுத்திக்கொள்ள விரும்பவில்லை. இதற்கும் சமமாக இந்தத் தொகுதியில் வாக்காளர்கள் அல்லாத நூற்றுக்கணக்கான ஆதரவாளர்கள் வழங்கிய ஆதரவின் வெளிப்பாடே இது.

இதனை எனக்கு வழங்கப்பட்ட அரசியல் அங்கீகாரமாக எடுத்துக்கொண்டு என் தந்தை வழியில் எனது மக்கள் சேவையை ஆரம்பித்துள்ளேன்.

நான் எதிர்ப்பார்த்ததை விடவும் வஞ்சகம் நிறைந்த களமாக இது இருந்தாலும் கூட அதனை வென்று சாதிக்கும் மனோதைரியத்தை என் தந்தை எனக்கு தினமும் வழங்குகின்றார். கற்றவர்கள் அரசியலுக்கு வருவதில்லை அல்லது தகுதியானவர்களுக்கு மக்கள் அங்கீகாரம் வழங்குவதில்லை என்ற பிழையான குற்றச்சாட்டுக்களுக்கு அப்பால் இளைஞர்கள் மத்தியில் இருக்கும் அரசியல் தாகத்தை நான் தெளிவாகப் புரிந்துகொண்டுள்ளேன்.

அர்த்தமுள்ள கருத்துக்கள் அவர்கள் ஏற்றுக்கொள்ளும் விதத்தில் கூறப்பட்டால் நிச்சயமாக இளைஞர்களை ஓரணியில் திரட்ட முடியும். இதனை வரலாறு நிரூபித்துள்ளது.

தேர்தலில் போட்டியிட்டு வென்றோம், தோற்றோம், இனி அடுத்த தேர்தல் என்றில்லாமல் தேசிய அரசியலில் எமது சமூகத்தை இணைப்பதற்கு ஏற்பட்டுள்ள இடைவெளியை நாம் நிரப்ப வேண்டும்.

பெருந்தோட்டத்துறை சார்ந்த இதுவரை அரசின் பார்வையே படாத எம் தொழிலாளர்களுக்காக மட்டுமல்லாது தொழிலாளர்கள் அல்லாத எமது மலையக உறவுகளையும் இணைத்துக்கொண்டு பயனளிப்பதற்காகவே இந்த இரு அமைப்புகளையும் அமைத்துள்ளேன்.

எல்லா பாகுபாடுகளுக்கும் அப்பால் மலையகம் என்ற அடித்தளத்தில் இருந்து ஏனைய அனைத்து முற்போக்குச் சக்திகளுடனும் இணைந்து என் தந்தை எவ்வாறு அரசியல் பிரளயத்தை ஏற்படுத்தினாரே அதே வழியில் எனது செயற்பாடுகளும் அமையும்.

ஆகவே, கபடத்தன தலைமையில் வெறுப்புற்றுள்ள மலையக மக்கள் முன்னணியின் அங்கத்தவர்கள் மட்டுமின்றி என் தந்தையின் ஆதரவாளர்கள் என்பதால் ஒதுக்கப்பட்டவர்கள் அல்லது ஒதுங்கி இருப்பவர்கள் அனைவரும் என்னோடு இணைந்து செயற்படுமாறு அழைப்பு விடுக்கிறேன். அதேபோன்று எம் சமூகத்தின் மாற்றத்துக்காக உணர்வோடு செயற்படும் அனைத்துச் சக்திகளும் எனக்கு ஆதரவு தருமாறு அழைக்கின்றேன்.

துணிவுடனும் தெளிவுடனும் செயற்பட்டால் மாற்ற முடியாது ஒன்றுமே இல்லை என உறுதி செய்வோம்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.