எதிர்வரும் 2 வாரங்கள் மிக அவதானம் தேவை யாழில் வைத்து இராணுவத் தளபதி எச்சரிக்கை.

எதிர்வரும் 2 வாரங்கள்மிக அவதானம் தேவை
யாழில் வைத்து இராணுவத் தளபதி எச்சரிக்கை

“கொரோனாத் தொற்றுப் பரவலால் எதிர்வரும் இரண்டு வாரங்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும். இந்த இரண்டு வாரங்களும் மக்கள் சுகாதாரப் பிரிவினருக்கு பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.”

– இவ்வாறு கொரோனாத் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவரும் இராணுவத் தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் இன்று ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கொரோனாவின் தற்போதைய நிலவரம் தொடர்பில் ஜனாதிபதி நேற்று எம்முடன் கலந்துரையாடினார். அத்துடன் மாவட்ட அரச அதிபர் ஊடாக தற்போதைய நிலைமைகள் தொடர்பில்  கண்காணித்து வருகின்றோம். எனினும், எதிர்வரும் இரண்டு வாரங்கள் மிகவும் அவதானம் தேவை.

எதிர்வரும் வாரங்கள் நத்தார் மற்றும் புதுவருடக் கொண்டாட்டங்கள் இடம்பெறும் வாரங்கள். எனினும், அந்தக்  காலத்தில் நாட்டில்  சில புதிய சுகாதார நடைமுறைகளை நாங்கள் செயற்படுத்துவதற்கு எதிர்பார்த்துள்ளோம். அது  எவ்வாறான  நடைமுறைகள் தொடர்பில் நாம் ஆராய்ந்து வருகின்றோம்.

மக்களைக் கொரோனாத் தொற்றிலிருந்து பாதுகாக்கும் முகமாக மக்களைப் பாதிக்காதவாறு சில சுகாதாரக் கட்டுப்பாடுகளை எடுக்கவுள்ளோம். அதற்காக அனைவரையும் தனிமைப்படுத்தமாட்டோம். ஆனால், கொரோனாத்  தொற்றிலிருந்து  மக்களைப் பாதுகாக்கும் முகமாகவே சில நடைமுறைகளைச் செயற்படுத்தவுள்ளோம்

ஏனைய நாடுகளோடு ஒப்பிடும்போது இலங்கையைப் பொறுத்த வரைக்கும் கொரோனாவானது கட்டுப்பாட்டுக்குள்தான் இருக்கின்றது. எனினும், அதனைத் தொடர்ச்சியாகப் பேண வேண்டும். அதற்குப் பொதுமக்கள் உதவ வேண்டும்.

குறிப்பாகத் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் எக்காரணம் கொண்டும் வீடுகளை விட்டு வெளியில் செல்லக் கூடாது. அவ்வாறு சென்றால் ஏனையவர்களுக்கும் கொரோனா இலகுவாகப் பரவும். யாழ்ப்பாணத்தில் அவ்வாறு இடம்பெறவில்லை. ஆனால், கொழும்பின் சில இடங்களில் இவ்வாறு நடந்துள்ளது. எனவே, அவ்வாறானவற்றைத்   தவிர்த்துக்கொள்ள வேண்டும்.

எதிர்காலத்தில் நடமாடும் பி.சி.ஆர். பரிசோதனைகளை மேற்கொள்வதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.

எதிர்காலத்தில் கொரோனாவைக் கட்டுப்படுத்துவதற்காக எதிர்வரும் வாரமளவில் சில புதிய கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்துவதற்கு எதிர்பார்த்துள்ளோம்.

வட்டுக்கோட்டையில் இராணுவத்தினரால் புனர்நிர்மாணம்  செய்யப்பட்ட குளம் ஒன்றைத் திறப்பதற்காகவே இன்று யாழ்ப்பாணம் வந்திருக்கின்றேன்.

இந்தப் பிரதேச மக்களின் விவசாயத் தேவையைப் பூர்த்தி செய்யக்கூடிய இந்தக் குளத்தை இராணுவத்தினர் புனரமைத்துள்ளார்கள். அது இன்று மக்கள் பயன்பாட்டுக்கு கையளிக்கப்பட்டுள்ளது .

ஜனாதிபதியின் விவசாயத்துறையை விருத்தி செய்ய வேண்டும் என்ற எண்ணக் கருவுக்கு அமைவாக வடக்குப் பகுதியில் இராணுவத்தினரால் பல்வேறு விவசாய அபிவிருத்திச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதேபோல் வட்டுக்கோட்டைப் பிரதேசத்தில் 600 விவசாயிகள் பயன்பெறகூடிய இந்தக் குளமானது இன்று புனரமைக்கப்பட்டு மக்கள் பாவனைக்காகக் கையளிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக இவ்வளவு காலமும் இந்த பகுதியில் உள்ள விவசாயிகள் எதிர்நோக்கி வந்த நீர் பிரச்சினைக்கு ஒரு தீர்வு கிடைத்து விட்டது. எதிர்காலத்திலும் யாழ். மாவட்டத்தில் விவசாயத்துறையை விருத்தி செய்வதற்கு இராணுவத்தினர் தமது முழுப் பங்களிப்பை வழங்குவார்கள்” – என்றார்

Leave A Reply

Your email address will not be published.