தமிழ் ஊடகங்களை ஒடுக்குவதில் ராஜபக்ச குடும்ப அரசு கங்கணம்! மனோ கடும் சீற்றம்.

தமிழ் ஊடகங்களை ஒடுக்குவதில்
ராஜபக்ச குடும்ப அரசு கங்கணம்!
மனோ கடும் சீற்றம்

“தமிழ் ஊடகங்களை அடக்குவதிலும் ஒடுக்குவதிலும் ராஜபக்ச குடும்ப அரசு கங்கணம் கட்டிச் செயற்படுகின்றது என்பதற்கு ‘உதயன்’ மீதான வழக்கு சிறந்த எடுத்துக்காட்டாகும்.”

– இவ்வாறு தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் வெளியிட்டுள்ள கண்டனத்தில் தெரிவித்துள்ளார்.

அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

“வரலாற்றில் தடம் பதித்தவர்களின் பிறந்த தினத்தையும், நினைவேந்தல் தினத்தையும் நினைவூட்டுவதும், அது தொடர்பான பதிவுகளை இடுவதும் – பிரசுரிப்பதும் ஊடகங்களின் பணி. இந்தநிலையில், கடந்த நவம்பர் 26ஆம் திகதி தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் பிறந்த தினமன்று அது தொடர்பான செய்தியுடன் அவரின் புகைப்படத்தையும் வெளியிட்டதாக ‘உதயன்’ மீது பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தெற்கில் சிங்கள மற்றும் ஆங்கிலப் பத்திரிகைகளில் வெளிவரும் செய்திகள் மற்றும் கட்டுரைகளில் பிரபாகரனின் படமும் வெளிவருகின்றது. இந்தநிலையில், ‘உதயன்’ பத்திரிகையைக் குறிவைத்தே இந்தப் பயங்கரவாதத் தடைச் சட்டம் பாய்ந்துள்ளது.

‘உதயன்’ பல்லாண்டு கால வரலாற்றைக்கொண்ட பத்திரிகை. பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வடக்கு, கிழக்கு, மலையகம் மற்றும் கொழும்பு வாழ் தமிழ் மக்களின் உரிமைகளுக்காகவும், முஸ்லிம் மக்களின் உரிமைகளுக்காகவும் அன்று தொடக்கம் குரல் கொடுத்து வரும் பத்திரிகை. எனவே, இந்தப் பத்திரிகை மீதான அரசின் அராஜகத்தை வன்மையாகக் கண்டிக்கின்றேன்” – என்றுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.