அரசியல் கைதிகள் மரணித்தால் ராஜபக்ச அரசே முழுப் பொறுப்பு! – வினோ எம்.பி. தெரிவிப்பு

“அரசியல் கைதிகளுக்குச் சிறைச்சாலையில் மரணங்கள் நிகழ்ந்தால் ராஜபக்ச அரசு முழுப்பொறுப்புக்களையும் ஏற்க வேண்டும்.”

– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோநோகராதலிங்கம் தெரிவித்தார்.

வவுனியாவில் நேற்று (02) நடைபெற்ற அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்திய போராட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“கடந்த ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத்தேர்தல் காலங்களில் தற்போதைய ஆட்சியாளர்கள் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் அரசியல் கைதிகளை விடுதலை செய்வோம் என்ற ஒரு உறுதி மொழியைக் கூறி தமிழ் மக்களின் வாக்குகளைக் கவரும் வேலைகளைச் செய்தார்கள்.

ஆனால், இவர்கள் ஆட்சிக்கு வந்தவுடன் தமிழ் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளைக் கைவிட்டு தமிழ் மக்களுக்கு மிகப் பெரிய துரோகத்தைச் செய்துள்ளார்கள்.

தற்போது குட்டி ஜனாதிபதி போல் செயற்படும் நாமல் ராஜபக்ச கூட அவ்வாறான வாக்குறுதியை வழங்கியிருந்தார். ஆனால், அது காற்றில் பறந்த வாக்குறுதியாகவுள்ளது.

தமிழ் அரசியல் கைதிகள் சிறைச்சாலைகளில் கொரோனாத் தாக்கத்துக்குள்ளாகியுள்ளார்கள். இந்த நேரத்தில் மனிதாபிமான அடிப்படையில் தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும். அவர்களது உயிருக்கு அரசு உத்தரவாதம் வழங்க வேண்டும்.

சிறைச்சாலைகளில் அடைத்து வைக்கப்பட்டிருக்கின்ற அரசியல் கைதிகள் தற்போதுகூட தொற்றுக்குள்ளாகி வருகின்றார்கள்.

அவர்களை உடனடியாக விடுதலை செய்வதற்கு அனைத்துத் தரப்பும் ஒன்று திரள வேண்டும். கடந்த காலங்களில் மேற்கொண்ட போராட்டங்கள் அனைத்தும் செவிடன் காதில் ஊதிய சங்காககவுள்ளது.

அரசின் மனங்களில் கைதிகள் விடயத்தில் மாற்றம் வரவேண்டும். அரசியல் கைதிகளுக்கு சிறைச்சாலையில் மரணங்கள் நிகழ்ந்தால் அரசு முழுப்பொறுப்புக்களையும் ஏற்க வேண்டும்.

இந்த விடயத்தில் உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் உள்ள மனித உரிமை அமைப்புக்கள் அழுத்தம் கொடுக்க வேண்டும். அரசுக்கு உறைக்கும் வகையில் அழுத்தம் கொடுக்கும் செயற்பாடுகளை அனைத்துத் தரப்பும் முன்னெடுக்க வேண்டும்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.