ஜெய்சங்கருடன் சம்பந்தன் நாளை முக்கிய பேச்சு! – கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களும் பங்கேற்பர்

இலங்கைக்கு உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை நாளை வியாழக்கிழமை சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார்.

கொழும்பிலுள்ள இந்தியத் தூதுவரின் அலுவலகத்தில் நாளை காலை 9.30 மணியளவில் இந்தச் சந்திப்பு நடைபெறவுள்ளது.

முக்கியத்துவம் வாய்ந்த இந்தச் சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களான மாவை சேனாதிராஜா (தமிழரசுக் கட்சி), செல்வம் அடைக்கலநாதன் (ரெலோ), தர்மலிங்கம் சித்தார்த்தன் (புளொட்) மற்றும் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரும் பங்கேற்கவுள்ளனர்.

இலங்கை மீதான ஐ.நா. மனித உரிமைகள் சபையின் புதிய பிரேரணை, ஜெனிவா விவகாரத்தில் தற்போதைய அரசின் அசமந்தப்போக்கு மற்றும் வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் உள்ளிட்ட சமகால அரசியல் நிலைவரங்கள் தொடர்பில் இந்திய வெளிவிவகார அமைச்சருடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பேச்சு நடத்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ச, பிரதமர் மஹிந்த ராஜபக்‌ச, வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன ஆகியோரை ஜெய்சங்கர் இன்று சந்திக்கவுள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவையும் இவர் சந்திக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.