மலையக தமிழர்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்காக இந்தியா தொடர்ந்தும் உதவியளிக்கும்.

இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கருக்கும், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பிரதிநிதிகளுக்குமிடையிலான சந்திப்பு இன்று (7) கொழும்பிலுள்ள இந்திய உயர்த்தானிகரின் உத்தியோகபூர்வ வதிவிடத்தில் நடைபெற்றது.

இ.தொ.காவின் பொதுச்செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான், இ.தொ.காவின் உப தலைவரும், பிரதம அமைச்சரின் பெருந்தோட்ட இணைப்பு செயலாளருமான செந்தில் தொண்டமான், பாராளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஷ்வரன் ஆகியோர் சந்திப்பில் பங்கேற்றனர். இலங்கைக்கான இந்திய தூதுவரும் கலந்துகொண்டிருந்தார்.

இந்திய அரசின் நிதி பங்களிப்புடன் மலையக பெருந்தோட்டப்பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டுவரும் அபிவிருத்தி திட்டங்கள், வீடமைப்பு திட்டங்கள் சம்பந்தமாக இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

அத்துடன், மலையக தமிழர்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்காக இந்தியா தொடர்ந்தும் உதவியளிக்கும் என சந்திப்பில் அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் உறுதியளித்துள்ளார்.

கல்வி, சுகாதாரம் மற்றும் விளையாட்டுத்துறை மேம்பாடுகளுக்கும் இந்தியாவின் ஒத்துழைப்புகள் தொடரும் எனவும் கூறப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.