பிணை அனுமதி பெற ஆவண செய்துதவுமாறு கோரி அரசியல் கைதி ஒருவர் உண்ணாவிரதப் போராட்டம்!

கொழும்பு புதிய மகசின் சிறைச்சாலையிலுள்ள தமிழ் அரசியல் கைதியான கனகசபை தேவதாசன் (வயது 64) தனக்குப் பிணை அனுமதி பெற ஆவண செய்துதவுமாறு கோரி இன்று முதல் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.

தனது மேன்முறையீட்டு வழக்குகள் தொடர்பாகவும், தனது உடல் நிலை தொடர்பாகவும் குறிப்பிட்டு கடந்த டிசம்பர் மாதம் 17ஆம் திகதி சிறைச்சாலைகள் ஆணையாளருக்குக் கடிதம் மூலம் அவர் தெரியப்படுத்தியிருந்தார்.

“நான் நிரபராதி என நிரூபிக்கும் வாய்ப்பு இல்லாமலும், மேலதிக வைத்திய சிகிச்சை இல்லாமலும் தொடர்ந்தும் சிறைக்குள் அடைபட்டிருப்பதில் அர்த்தமில்லை. இதனால் நான் உடல் உள ரீதியாக மிகவும் பாதிக்கப்பட்டுள்ளேன்” எனவும் அந்தக் கடிதத்தில் அவர் குறிப்பிட்டிருந்தார்.

மேற்படி கடிதத்துக்கமைய எந்தவித நடவடிக்கையையும் சிறைச்சாலைகள் ஆணையாளர் இதுவரை எடுக்கவில்லை.

இந்தநிலையில், குறித்த தமிழ் அரசியல் கைதி தனது கோரிக்கையை வலியுறுத்தி இன்று முதல் உண்ணாவிரதப் போராட்டத்தை சிறையில் இருந்தவாறு ஆரம்பித்துள்ளார் என அவரது உறவுகளால் குரலற்றவர்களின் குரல் அமைப்புக்குத் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.