பிக்பாஸ் சீசன்4 டைட்டில் வின்னராகினார் ஆரி அர்ஜுனன்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் மக்கள் போடும் ஓட்டுக்கள் தான் வெற்றியாளரை தீர்மானிக்கப் போகிறது என கமல் அழுத்தமாக சொன்னபோதே ஆரி தான் டைட்டில் வின்னர் என்று முடிவாகி விட்டது.

ரன்னர்-அப் ரியோவா? பாலாவா? என்கிற குழப்பங்கள் கடைசி நேரத்தில் நீடித்த நிலையில், பாலாஜி முருகதாஸ் ரன்னர்-அப்பாக தேர்வானார்.

விக்ரம் வேதாவாக இருந்தவர்கள் இந்த பிக் பாஸ் தமிழ் 4வது சீசனில் வெற்றியாளர்களாக வெற்றிபெற்றது அவர்களது ரசிகர்களுக்கும் குடும்பத்தாருக்கும் மகிழ்ச்சியை அளித்துள்ளது.

அன்புக்கு என்னாச்சு

பிக் பாஸ் தமிழ் சீசன் 4ல் அன்பு தான் ஜெயிக்கும் என அர்ச்சனா அக்காவும் நிஷாவும் ஆணித்தனமாக நம்பினார்கள். நிஜமான அன்பு ஜெயிக்கும் என்றும், அன்பை ஸ்ட்ராட்டஜியாக பயன்படுத்தினால் மக்கள் அதை ஏற்க மாட்டார்கள் என்பதையும் இந்த சீசன் உணர்த்தியுள்ளது.

அர்ச்சனாவுடன் கேங்காக சுற்றாமல் இருந்தாலே ரியோ ராஜ் ரன்னர் அப்பாவது இருந்திருப்பார்.

பிக் பாஸ் டைட்டில் வின்னர் மற்றும் ரன்னர் அப்பை கிராண்ட் ஃபினாலே மேடைக்கு அழைத்துச் செல்ல கமல் உள்ளே அதிரடியாக நுழைந்தார். கமலை பார்த்ததும் ஆரி மற்றும் பாலாஜி முருகதாஸ் இருவரும் அவரது காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றனர். பின்னர் இருவருடன் டைனிங் ஏரியாவில் அமர்ந்து பேசத் தொடங்கினார்.

பட்டாசு வெடிக்க கமல்ஹாசன் இறுதிப் போட்டியாளர்களான ஆரி மற்றும் பாலாவை பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே கொண்டு வந்தார். பிக் பாஸ் வீட்டின் விளக்குகள் இந்த சீசனில் இறுதியாக அமைக்கப்பட்டு அமைதியானது. கடந்த 105 நாட்களாக பெரும் சத்தத்தோடு மகிழ்ச்சி, சண்டை, சோகம், அழுகை என பார்த்த பிக் பாஸ் வீடு அடுத்த சீசன் வரை அமைதியாகவே இருக்கும்.

கிராண்ட் ஃபினாலே மேடைக்கு வந்ததும் பாலாஜியும் ஆரியும் ஆனந்த கண்ணீரில் மூழ்கினர். இருவர்து ஏவிக்களும் திரையிடப்பட்டன. இறுதியாக அந்த தருணம் வந்தது. இருவரது கையையும் பிடித்த கமல், சின்னதாக ஒரு இடைவேளை விட்டு அனைவரையும் மேலும் சற்று நேரம் டென்ஷன் ஆக்கினார். பின்னர், மீண்டும் இருவரது கையையும் பிடித்த கமல் ஆரியை டைட்டில் வின்னர் என அறிவித்தார்.

பிக் பாஸ் டைட்டில் வின்னரான ஆரிக்கு 24 கோடி ஓட்டுக்கள் வந்ததாக தகவல்கள் வெளியாகின. ஆனால், கமல் கடைசியில் சொல்லும் போது ஆரிக்கு 16 கோடி ஓட்டுக்களும், ரன்னர் அப்பான பாலாவுக்கு 6 கோடி ஓட்டுக்களும் வந்ததாக தெரிவித்தார். டைட்டில் வின்னர் என அறிவிக்கப்பட்டதும் ரொம்பவே ஆரி கண்கலங்கிவிட்டார்.

இந்த சீசனிலாவது மக்களின் ஓட்டுக்கள் அடிப்படையில் வெற்றி இருக்குமா? இறுதி நேரத்தில் விஜய் டிவியின் செல்லப் பிள்ளைக்கு வின்னர் அல்லது ரன்னர் அப் கொடுப்பார்களா? என ஏகப்பட்ட கேள்விகளும் சந்தேகங்களும் எழுந்தன. ஆனால், கடந்த வாரமே அதிக ஓட்டு வித்தியாசத்தில் சேவ் செய்யப்பட்ட ஆரி மற்றும் பாலா இந்த வாரமும் அதே போல அதிக வாக்குகளுடன் வெற்றிப் பெற்று டைட்டில் மற்றும் ரன்னர் அப்பை வென்றனர். நேர்மை வென்றது என கமல் வாழ்த்தினார்.

பிக் பாஸ் தமிழ் சீசன் 4ன் டைட்டிலை வென்ற ஆரிக்கு டைட்டில் வின்னர் கோப்பை மற்றும் 50 லட்சம் பரிசையும் கமல்ஹாசன் வழங்கினார். பாலாஜி முருகதாஸ் கையால் ஆரிக்கு கோப்பையை வழங்க வைத்தது ரசிகர்களை சந்தோஷப்படுத்தியது. பாலா ஆரிக்கு முத்தம் கொடுத்து வாழ்த்தினார்.

சும்மாவே வீக்கெண்ட் ஷோ என்றாலே கமல் அரசியல் பேசாமல் இருக்க மாட்டார். இப்போது கிராண்ட் ஃபினாலே வேற, நேர்மைக்கு கிடைத்த வெற்றி, மக்கள் வென்று விட்டார்கள் என மறைமுகமாக அரசியல் பேசிய கமல், இப்பவே 12 மணி ஆகிடுச்சு, இன்னும் கொஞ்சம் போனால், நாளை ஆகிவிடும் நாளை நமதே என நேரடியாகவே அரசியல் பேசியது பக்கா மாஸ்! ஆனால், 6 மணிக்கே முடிந்த ஷூட்டிங்கிற்கு 12 மணி டைம் பார்த்து சொன்னதெல்லாம் வேற லெவல்!

Leave A Reply

Your email address will not be published.