மலையகத்திலுள்ள பிரதான நகரங்களில் இன்று கடையடைப்பு போராட்டமும் முன்னெடுப்பு.

சம்பள உயர்வு விவகாரத்தால் ஸ்தம்பிதமானது மலையகம்

தமக்கான நாட் சம்பளம் ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்கள் இன்று அடையாள பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும், அவர்களின் கோரிக்கை நிறைவேற்றப்பட வேண்டும் என்பதற்காகவும் மலையகத்திலுள்ள பிரதான நகரங்களில் இன்று கடையடைப்பு போராட்டமும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாட் சம்பளமாக ஆயிரம் ரூபாவை வழங்குவதற்கு பெருந்தோட்ட நிறுவனங்கள் இன்னும் இணக்கம் தெரிவிக்கவில்லை. தொழில் நிபந்தனைகள் அடிப்படையிலேயே சம்பள உயர்வை வழங்குவதற்கு அவர்கள் தயார் நிலையில் உள்ளனர்.

இதனால் சம்பள நிர்ணயசபை ஊடாக தேயிலை கொளுந்து பறிக்கும் தொழிலாளர்களுக்கான நாட்சம்பளம் தீர்மானிக்கப்பட வேண்டும் என தொழிற்சங்கங்கள் வலியுறுத்தினர். இதன்படி எதிர்வரும் 8 ஆம் திகதி சம்பள நிர்ணய சபை கூடவுள்ளது.

இந்நிலையில் நிறுவனங்களுக்கு கொடுக்கும் வகையிலும், சம்பள நிர்ணய சபை பேச்சுவார்த்தை வெற்றியளிக்க வேண்டும் என்பதற்காகவும் ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தப்போராட்டத்துக்கு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் அழைப்பு விடுத்திருந்தது.

இதற்கு மலையகத்திலுள்ள கட்சிகள், தொழிற்சங்கங்கள், சிவில் அமைப்புகள் என்பன ஆதரவு தெரிவித்திருந்தன. அத்துடன், நகர வர்த்தகர்களும் தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் கடையடைப்பு செய்தனர். அத்தோடு சில பாடசாலைகளும் மூடப்பட்டிருந்தன. வருகை தந்த மாணவர்கள் வீடுகளுக்கு திருப்பினுப்பப்பட்டனர்.

மலையகத்தில் நுவரெலியா, கண்டி, மாத்தளை, பதுளை, இரத்தினபுரி, கேகாலை மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களில் பெருந்தோட்ட தொழிலாளர்கள் வாழும் பகுதிகளில் உள்ள நகரங்கள் மூடப்பட்டிருந்தன. குறிப்பாக நுவரெலியா மாவட்டத்தில் அனைத்து தரப்பினரும் ஆதரவு வழங்கியிருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.