பால் பண்ணையாளர்களுக்கென கடன் தொகையை 10 இலட்சம் ரூபாய் வரை அதிகரிக்க அறிவுரை.

பால் பண்ணையாளர்களுக்கென வரவு, செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்டிருந்த 05 இலட்சம் ரூபாய் கடன் தொகையை 10 இலட்சம் ரூபாய் வரை அதிகரிக்குமாறு நிதியமைச்சர் என்ற ரீதியில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ (08) அறிவுறுத்தினார்.

வரவு, செலவுத்திட்ட முன்மொழிவிற்கமைய செயற்படுத்தப்படும் திட்டங்கள் மற்றும் பொதுமக்களுக்கான நிவாரணங்கள் தொடர்பில் கவனம் செலுத்தி நிதி அமைச்சில் நடைபெற்ற முன்னேற்ற ஆய்வுக் கூட்டத்தின் போதே பிரதமர் இவ்வாறு வலியுறுத்தினார்.

அதற்கமைய எதிர்வரும் வாரம் முதல் பால் பண்ணையாளர்களுக்கு அவர்களது அடிப்படை வசதிகளை மேம்படுத்திக் கொள்வதற்கு 04 வீத வட்டிக்கு 10 இலட்சம் ரூபாய் வரை கடன் பெற்றுக் கொள்வதற்கு வாய்ப்பு கிடைக்கும். வரவு – செலவுத்திட்ட முன்மொழிவிற்கமைய தற்போது செயற்படுத்தப்படும் கடன் நிவாரணம் தொடர்பில் இச்சந்திப்பின் போது நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல விளக்கமளித்தார்.

அதன்படி, அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் வீட்டுக் கடனை பெற்றுக் கொண்ட மற்றும் பெற்றுக் கொள்ளும் கடன் தொகை 7 சதவீத வட்டி விகிதத்தில் செயற்படுத்தப்படும்.

இந்த சலுகையின் அடிப்படையில் ஒரு அரசு ஊழியரின் மாதச் சம்பள உயர்வு ரூபாய் 2,500-3,000 ஆகக் காணப்படும் என்று எஸ்.ஆர்.ஆட்டிகல்ல சுட்டிக்காட்டினார்.

அரச மற்றும் அரச சாரா ஊழியர்களின் கூரைகளில் சோலார் பேனல்களை நிறுவுவதற்கு தற்போது 04 வீத வட்டி விகிதத்தில் 08 இலட்சம் ரூபாய் வரை கடன் வழங்கப்படுகின்றன. இந்த பருவத்தில் நெல் கொள்வனவிற்கு சிறு மற்றும் நடுத்தர நெல் ஆலை உரிமையாளர்களுக்கு கடன் வசதிகள் வழங்கப்பட வேண்டும் என்று இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க சுட்டிக்காட்டினார்.

அதன்படி, நெல் கொள்வனவு செய்வதற்கான கடன் வழங்கும் நடவடிக்கையை விரைவுபடுத்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அறிவுறுத்தினார்.

நகர அபிவிருத்தி அதிகாரசபையுடன் செயற்படுத்தப்படும் மத்திய மாகாண வீட்டுத் திட்டங்களுக்கு 6.25 சதவீத வட்டி விகிதத்தில் கடன் வழங்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மின்சாரத்தை பெற்றுக் கொள்ளல் உள்ளிட்ட சமுர்த்தி உறுப்பினர்களுக்கு சலுகைக் கடன்களை விரைவாக வழங்குவது குறித்தும் பிரதமரின் கவனம் செலுத்தப்பட்டது. வெளிநாட்டு கடன்களில் கவனம் செலுத்துவதற்கு பதிலாக, அரசாங்கம் இப்போது அந்நிய முதலீட்டில் அதிக கவனம் செலுத்தியுள்ளதாக நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல தெரிவித்தார்.

இலங்கை சுங்கத்தின் இறக்குமதி பிரிவு ஒன்லைன் (இணைய) தொழில்நுட்பத்துடன் செயற்படுவதாக சுட்டிக்காட்டிய சுங்க பணிப்பாளர் நாயகம் ஜி.வி.ரவிப்ரிய அதன்மூலம் சிக்கல்களைக் குறைக்க கூடியதாக அமைந்ததாக தெரிவித்தார்.

இதற்கிடையில், உள்நாட்டு வருவாய் துறைக்கு ஒன்லைன் முறை மூலம் வரி செலுத்துவது இன்று முதல் செயல்படுத்தப்படுவதுடன், இதற்கு ஐந்து வங்கிகளின் ஒப்புதல் கிடைத்துள்ளதாக அதிகாரிகள் பிரதமருக்கு தெரிவித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.