தமிழ்த் தேசியப் பேரவை 28இல் உதயம்! – 10 தேசியக் கட்சிகள் சங்கமம் என்கிறார் சுரேஷ்

தமிழ்த் தேசியக் கட்சிகள் அனைத்தையும் இணைத்து ‘தமிழ்த் தேசியப் பேரவை’ ஒன்றை உருவாக்கத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

ஒன்றிணைந்த தமிழ்த் தேசியக் கட்சிகளின் கூட்டம் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில் இன்று நடைபெற்றது. குறித்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானம் தொடர்பாக ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இந்தக் கூட்டத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி, தமிழ்த் தேசிய பசுமை இயக்கம் உள்ளிட்ட கட்சிகள் கலந்துகொண்ட அதேவேளை, கூட்டத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கலந்துகொள்ளவில்லை.

இன்றைய கூட்டம் தொடர்பாக சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவிக்கையில்,

“தமிழ்த் தேசியப் பரப்பில் இருக்கக்கூடிய 10 கட்சிகள், தற்போதைய அரசியல் நிலைமைகள் தொடர்பாகவும் ஐ.நா. மனித உரிமைகள் சபையின் முதலாவது வரைவு மற்றும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் பற்றியும் பல விடயங்களை ஆராய்ந்துள்ளது.

இந்தக் கூட்டத்தில், முக்கியமாக இரண்டு விடயங்கள் பேசப்பட்டன. இதன்படி, எதிர்வரும் 26ஆம் திகதி வவுனியாவில் தமிழ்த் தேசியப் பரப்பில் இருக்கக்கூடிய தமிழ்க் கட்சிகளும், வடக்கு, கிழக்கில் இருக்கக்கூடிய கிறிஸ்தவ ஆயர்கள், ஆதீன முதல்வர்கள் மற்றும் சிவில் அமைப்புக்கள் ஒன்றிணைந்து கலந்துரையாடவுள்ளோம்.

அதில், முக்கியமாக தமிழ் மக்களுடைய அரசியல் கோரிக்கைகள், பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கான பொறுப்புக்கூறல் போன்ற நடவடிக்கைகள் தொடர்பாக ஐ.நாவின் முதலாவது வரைவில் சரியான முறையில் பிரதிபலிக்கப்படவில்லை. அது தமிழ் மக்களுக்கு ஏமாற்றம் அளிக்கின்ற விடயமாக சொல்லப்பட்டிருக்கின்றது.

ஆகவே, வரைவு என்பது பாதிக்கப்பட்ட மக்களுக்கான ஒரு சரியான தீர்வைப் பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்க வேண்டும். அந்த விடயம் இதில் உள்ளடக்கப்படவில்லை.

தமிழ்த் தேசியப் பரப்பில் இருக்கக்கூடிய பல கட்சிகள் ஒன்றிணைந்து முக்கியமான மூன்று கோரிக்கைகளை முன்வைத்து இருந்தார்கள்.

ஆனால், அந்த முதலாவது வரைவில் அவை உள்ளடக்கப்படவில்லை. எனவே, எதிர்வரும் 26ஆம் திகதி அடுத்தகட்டமாக இதற்கு என்ன செய்வது என்பது பற்றி ஆராய்வதற்காக ஒன்றுகூடிப் பேசவுள்ளோம்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கான பொறுப்புக் கூறுதல், தீர்வு என்பவை முக்கியமானவை என்பதை சர்வதேச சமூகம் புரிந்துகொள்ள வேண்டும். இது சர்வதேச அரசியலுக்கு அப்பால் சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கான மனித உரிமைகள், பாதிக்கப்பட்ட மக்களுக்கான தீர்வுகள், பொறுப்புக்கூறல் போன்றவற்றை சர்வதேச சமூகம் உண்மையாக உணர்ந்து அந்த அடிப்படையில் ஐ.நா. மனித உரிமை ஆணையகத்தில் தீர்மானம் கொண்டுவரப்பட வேண்டும் என்பதுதான் எமது நோக்கமாகும்.

அடுத்த கட்டமாக தற்போது நாங்கள் 10 கட்சிகள் கூடி பேசிக் கொண்டிருக்கின்றோம். தமிழர் தரப்பில் இருக்கக் கூடிய ஏனைய கட்சிகள்கூட இணையலாம்.

நாங்கள் இந்த பத்துக் கட்சிகளையும் மிக விரைவாக, ஒரு தமிழ் தேசியப் பேரவையாக உருவாக்குவதற்கான கோரிக்கை இப்போதும் முன்வைக்கப்பட்டிருக்கின்றது. அந்தக் கோரிக்கை இங்கு வந்திருந்த அனைத்துக் கட்சியினராலும் பேசப்பட்டது.

எனவே, இந்த விடயம் குறித்து பேசப்படவுள்ளதுடன், எதிர்வரும் 28 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் மீண்டும் கூடி தமிழ்த் தேசியப் பேரவை உருவாக்குவது பற்றிய இறுதித் தீர்மானம் எடுக்கப்படவுள்ளது.

ஆகவே, எதிர்வரும் 28 ஆம் திகதி, ‘தமிழ்த் தேசியப் பேரவை’ உருவாக்கப்படுவதுடன், அந்தப் பேரவை தமிழ் மக்களுடைய பிரச்சினைகளுக்குத் தீர்வு எட்டக்கூடிய சாத்தியப்பாடான முடிவுகளை எடுப்பதற்காகச் செயற்படும்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.