அசலும் போலியும் கலக்கும் ஈக்குவடோர் தேர்தல் : சண் தவராஜா

லத்தீன் அமெரிக்க நாடான ஈக்குவடோரில் அரசுத் தலைவர் தேர்தல் நடைபெற்று முடிந்துள்ள சூழலில், இரண்டாவது இடத்தைப் பெற்று இரண்டாம் கட்டத் தேர்தலில் யார் போட்டியிடுவது என்பதில் பலப்பரீட்சை உருவாகியுள்ளது. அதில் என்ன ஆர்வத்துக்கு உரிய விடயம் உள்ளது என வாசகர்கள் யோசிக்கக் கூடும். அதுதான் கட்டுரையின் மையப் பொருள்.
லத்தீன் அமெரிக்க நாடுகளில் பெண்களுக்கான வாக்குரிமையை முதன்முதலாக வழங்கிய நாடு என்ற பெருமையைப் பெற்றது ஈக்குவடோர். அண்மைக் காலத்தில், அமெரிக்க ஏகாதிபத்தியத்தால் வேட்டையாடப்பட்ட, தொடர்ந்தும் வேட்டையாடப்பட்டுக் கொண்டிருக்கும் விக்கிலீக்ஸ் நிறுவனர் யூலியஸ் அசாஞ்ஞே அவர்களுக்கு லண்டன் தூதரகத்தில் அரசியல் தஞ்சம் வழங்கி ஊடகங்களில் தலைப்புச் செய்தியாக மாறிய நாடு. இதன் விளைவாக, அமெரிக்காவினதும், குறிப்பாக அமெரிக்க உளவு நிறுவனமான சி.ஐ.ஏ.வினதும் முதல்தர எதிரியாக மாறிப் போனது ஈக்குவடோர் நாட்டின் அரசியல் தலைமைத்துவம். விளைவு – மக்கள் புரட்சி இயக்கத்திற்குத் தலைமை தாங்கி 2007 ஆம் ஆண்டு முதல் 2017 ஆண்டு வரை அரசுத் தலைவராக இருந்த ரபேயல் கொரேயா மிண்டும் ஆட்சிக்கு வர முடியாதவாறு தடுக்கப்பட்டார். அவரது நண்பராக விளங்கிய லெனின் மொரேனா 2017 ஆம் ஆண்டு அரசுத் தலைவர் தேர்தலில் – கொரேயாவின் ஆதரவுடன் – வெற்றி பெற்று, வெற்றி பெற்ற கையோடு அமெரிக்க ஆதரவாளராக மாறிப் போனார்.

தொடர்ந்து, கொரேயா மீதும் அவரது சகாக்கள் மீதும் மோசடிக் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்ட வழக்குகள் காரணமாக கொரேயா அரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட முடியாதவாறு தடுக்கப்பட்டார். தற்போது பெல்ஜியம் நாட்டில் அரசியல் தஞ்சம் அடைந்துள்ள அவர் சார்ந்த கட்சி கூடத் தடை செய்யப்பட்டது. முன்னணித் தலைவர்கள் போட்டியிட முடியாது தடுக்கப்பட்ட நிலையில், பெரிதும் அறியப்படாது இருந்துவந்த அன்றியஸ் அருஸ் தேர்தலில் போட்டியிட முன்வந்தார்.

36 வயது நிரம்பிய அருஸ் அரசியல் பொருளாதாரம் படித்தவர். இடதுசாரிச் சிந்தனை கொண்டவரான அவர் இளம் வயதிலேயே ஈக்குவடோர் மத்திய வங்கியில் பணிப்பாளர் பொறுப்பை வகித்தவர். கொரேயா ஆட்சியில் புலமை மற்றும் திறன் அமைச்சராகப் பணியாற்றிய அவர் நம்பிக்கைக்கான ஒன்றியம் என்ற புதிய கட்சியொன்றை ஆரம்பித்தே தேர்தலில் போட்டியிட முடிந்தது.

பெப்ரவரி 7 அம் திகதி நடைபெற்ற தேர்தலில் 32.7 வீதமான வாக்குகளை அருஸ் பெற்றுக் கொண்டார். முதல் சுற்றிலேயே தெரிவு செய்யப்படத் தேவையான 40 வீத வாக்குகளை அவர் பெற்றிருக்காத காரணத்தினால் ஏப்ரல் 11 ஆம் திகதி இரண்டாம் கட்டத் தேர்தலை அவர் சந்திக்கவுள்ளார்.

வலதுசாரி வேட்பாளரும், பழமைவாதக் கருத்துக்களைக் கொண்டவருமான வங்கி உடைமையாளரான குல்லெர்மோ லாசோ 19.74 வீத வாக்குகளைப் பெற்றுக் கொண்டார். முன்னைநாள் வர்த்தக அமைச்சரான இவர் போட்டியிட்ட மூன்றாவது அரசுத் தலைவர் தேர்தல் இதுவாகும். நாட்டின் வர்த்தக சமூகம் இவரையே பெரிதும் ஆதரித்து நின்றமை குறிப்பிடத்தக்கது.

மூன்றாவது இடத்தில், சொற்ப வாக்கு வித்தியாசத்தில் உள்ளவர் பழங்குடி இனத்தைச் சேர்ந்த யாக்கு பெரஸ். 19.38 வீத வாக்குகளைப் பெற்ற இவர் அரசுத் தலைவர் தேர்தலில் புதுமுகமே ஆனாலும், பழங்குடி மக்கள் மத்தியில் பிரபலமான ஒரு சட்டத்தரணி. சூழலியல்வாதியான இவர், கனிம வளச் சுரங்கங்களை அமைப்பதற்கு எதிராகப் போரட்டங்களை முன்னெடுப்பவர். கொரேயா காலத்திலிருந்தே பழங்குடி மக்கள் போராட்டங்களுக்குத் தலைமை தாங்கி வரும் இவர், 2019 ஆம் ஆண்டு ஒக்ரோபரில் தற்போதைய அரசுத் தலைவர் லெனின் மொரேனாவுக்கு எதிராகத் தலைநகர் குயிற்றோவில் மேற்கொண்ட போராட்டம் காரணமாக, அரசாங்கத்தைத் தொடர்ந்து நடாத்த முடியாத சூழல் உருவாகி, தலைநகரத்தையே குவாயாகுயில் எனும் பிறிதொரு நகரத்துக்கு மாற்றும் நிலை உருவானது. தீவிர இடதுசாரிகளின் ஆதரவைப் பெற்ற இவர் இரண்டாம் கட்டத் தேர்தலில் அருஸை எதிர்த்துக் களங்காணப் பெரிதும் ஆர்வம் கொண்டுள்ளார்.

இந்நிலையில், மிகச் சொற்ப வாக்கு வித்தியாசத்தைக் கொண்ட இவர் மறுவாக்கு நடாத்தப்பட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார். தேர்தல் ஆணையமும் மறுவாக்கு எண்ணிக்கைக்குச் சம்மதம் தெரிவித்துள்ள நிலையில், இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ள குல்லெர்மோ லாசோவும் அதற்கு உடன்பட்டுள்ளார்.

இந்த இடத்திலேயே சந்தேகம் எழுகின்றது. தேசிய அரங்கில் பெரிதும் அறியப்படாத, பழங்குடி மக்கள் மத்தியில் மாத்திரம் அறியப்பட்டவரான பெரஸ் தேர்தலுக்கு முந்திய கருத்துக் கணிப்பில் மூன்றாவது இடத்திலேயே, அதுவும் மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்து வந்தார். இடதுசாரி வேட்பாளரான அருஸ் 36.2 வீத வாக்குகளைப் பெறுவார் எனக் கணிக்கப்பட்டிருந்தது. 21.7 வீதத்துடன் லாசோ இரண்டாவது இடத்தையும், 16.7 வீதத்துடன் பெரஸ் மூன்றாவது இடத்தையும் பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

மற்றுமொரு கருத்துக் கணிப்பில், அருஸ் 34.9 வீதத்தையும், லாசோ 21.0 வீதத்தையும் பெரஸ் 18.0 வீதத்தையும் பெறுவார் எனக் கணிக்கப்பட்டிருந்தது.

கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டதையும் விடவும் முதல் இரண்டு இடங்களில் உள்ள வேட்பாளர்கள் பின்தங்கியுள்ள நிலையில், மூன்றாவது இடத்தில் இருந்த பெரஸ் கருத்துக் கணிப்பைப் பொய்யாக்கி முன்னேறியுள்ளமையைப் பார்க்க முடிகின்றது. இது எவ்வாறு சாத்தியமானது? இதற்கு பெரஸின் வரலாற்றைப் பின்னோக்கிப் பார்க்க வேண்டிய தேவை உள்ளது. அப்படிப் பார்க்கும் போது, இரண்டாம் கட்டத் தேர்தலில் அருஸை எதிர்த்துக் களங்காண பெரஸ் ஏன் துடியாய்த் துடிக்கிறார் என்பதுவும், அதற்காக ‘விட்டுக் கொடுப்பு’ச் செய்ய லாசோ ஏன் தயராய் இருக்கிறார் என்பதையும் புரிந்து கொள்ள முடியும்.

சி.ஐ.ஏ. அமைப்பின் நிதி வழங்கலில் செயற்படும் ஒரு அமெரிக்க நிறுவனமே ஜனநாயகத்துக்கான தேசிய நிதியம் (National Endowment for Democracy). ‘ஜனநாயகத்தை ஏனைய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும்’ இலக்கைக் கொண்ட இந்த நிறுவனம் 2016 முதல் 2019 வரை ஈக்குவடோர் நாட்டில் 5 மில்லியன் டொலர் வரை செலவு செய்துள்ளது. இந்த நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் உள்ள தேசிய ஜனநாயக கல்வி நிறுவனம் (National Democratic Institute) எனும் பெயரிலான தன்னார்வ தொண்டு நிறுவனத்தினால் பயிற்றப்பட்டவரே யாக்கு பெரஸ{ம் அவர் நடத்தும் பச்சாக்குட்டிக் (Pachakutik) என்ற பெயரிலான அரசியல் கட்சியின் பிற தலைவர்களும். இவரின் கட்சிக்கான நிதி அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிடம் இருந்தும் நிதி பெறும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களிடம் இருந்தே கிடைக்கின்றது.

பழங்குடி மக்களின் காவலனாகவும், தீவிர இடதுசாரியாகவும் தன்னைக் காட்டிக் கொள்ளும் பெரஸ், லத்தீன் அமெரிக்க நாடுகளில் இடதுசாரிகளாக அறியப்பட்ட தலைவர்களை ஏற்றுக் கொள்வதில்லை. உள்நாட்டில் கூட மக்கள் தலைவனாகக் கொண்டாடப்படும் ரபாயல் கொரேயாவைத் தீவிரமாக எதிர்க்கும் இவர், இடதுசாரியாகத் தன்னைக் காட்டிக் கொண்டு தேர்தலில் வெற்றி பெற்று, பின்னர் அமெரிக்காவின் செல்லப் பிள்ளையாக மாறிய தற்போதைய அரசுத் தலைவர் லெனின் மொரேனாவை ‘நல்ல மனிதன்’ என்கிறார்.

சீனாவிடம் இருந்து நிதியைப் பெற்றுக் கொள்வதை கடுமையாக எதிர்க்கும் இவர் அமெரிக்காவிடம் இருந்து நிதி பெறுவதில் தயக்கமில்லை என்கிறார். அவரது அமெரிக்க ஆதரவு நிலைப்பாட்டிற்கு மேலும் பல எடுத்துக் காட்டுகள் உள்ளன. அசுவாய் மாகாணத்தின் மாநில சட்டவாளராக பெரஸ் பணியாற்றிய காலத்தில் 2019 ஆம் ஆண்டில் டொனால்ட் ட்ரம்ப் அவர்களினால் மாகாணத்தின் புதிய துணைத் தூதுவராக மைக்கல் ஜே.பிற்ஸ்பற்றிக் நியமிக்கப்பட்ட போதில் அவரை சந்தித்தது மட்டுமன்றி, அது தொடர்பான படத்தையும் ஊடகங்களுக்கு வழங்கினார். தொடரந்து அமெரிக்காவின் தேசிய தினம் கொண்டாடப்பட்ட போது அந்த நிகழ்விலேயும் கலந்து கொண்ட படத்தையும் வெளியிட்டார்.

தீவிர இடதுசாரி எனத் தன்னை அழைத்துக் கொள்ளும் ஒருவர் சீன மேலாதிக்கத்தை பகிரங்கமாகக் கண்டித்தவாறு அமெரிக்க மேலாதிக்கத்தோடு ஒட்டி உறவாடுவதை எவ்வாறு அர்த்தப்படுத்துவது? மக்களுக்கு நன்மை பயக்கும் திட்டங்களை அறிமுகம் செய்த இடதுசாரிகளை வசைபாடிக் கொண்டே, வலதுசாரிகளுடன் கைகோர்ப்பதை எவ்வாறு புரிந்து கொள்வது?

2017 ஆண்டு நடைபெற்ற அரசுத் தலைவர் தேர்தலில், ரபேயல் கொரேயா ஆதரவு நிலைப்பாட்டைக் கொண்டிருந்த லெனின் மொரேனா போட்டியிட்ட போதில், பெரஸின் ஆதரவு அவரை எதிர்த்துப் போட்டியிட்ட வலதுசாரி வேட்பாளரான குல்லெர்மோ லாசோவுக்கே கிடைத்தது. அந்த நன்றிக் கடனுக்காக தற்போது மறுவாக்கு எண்ணிக்கை என்ற பெயரில் இரண்டாவது இடத்தை விட்டுத் தர லாசோ முன்வந்துள்ளமை ஒன்றும் ஆச்சரியமான விடயமல்ல.

வலதுசாரி வேட்பாளரான லாசோவைக் களத்தில் இறக்கி பெரஸின் ஆதரவாளர்களை அவருக்கு வாக்களிக்கச் சொல்வதைக் காட்டிலும், பெரஸைக் களமிறக்கிவிட்டு லாசோவின் ஆதரவாளர்களை பெரஸு க்கு வாக்களிக்கச் செய்வதில் லாபம் அதிகம் என நினைக்கிறது அமெரிக்கா. பொதுவில் பார்க்கும் போது – தற்போதுள்ள நிலையில் – இரண்டாம் மூன்றாம் இடங்களைப் பெற்ற இரண்டு வேட்பாளர்களினதும் ஆதரவாளர்கள் இணைந்து வாக்களித்தால் (19.74 +19.38 = 39.12 வீதம்) அருஸை விட அதிக வாக்குகளைப் பெற்று வெற்றி பெறலாம் எனக் கணக்கிடப் படுகின்றது.
ஆனால், 16 வேட்பாளர்கள் போட்டியிட்ட தேர்தலில் இருமுனைப் போட்டி என வரும்போது வாக்களிப்பு முன்னரைப் போல் இருக்காது என்பதே யதார்த்தம். இரண்டாம் கட்ட வாக்களிப்பில் பங்கு கொள்ளும் வேட்பாளர்கள் இருவரையும் ஒப்பிட்டுப் பார்த்தே மக்கள் வாக்களிப்பார்கள். அது மாத்திரமன்றி இருவரது வாக்குறுதிகளையும் அவர்கள் கவனத்தில் கொள்வார்கள் என்பது உறுதி.

மக்களின் தலைவன் என அறியப்படும் கொரேயா நேரடியாகக் களத்தில் இல்லாது விட்டாலும் அவரது செல்வாக்கு தொடர்ந்தும் தேர்தலில் எதிரொலித்துக் கொண்டே இருக்கின்றது. கடந்த முறை வெற்றி பெற்ற மொரேனா கூட கொரேயாவின் ஆதரவு பெற்ற நிலையிலேயே வெற்றி பெற்றார் என்பதும் நினைவில் கொள்ளத்தக்கது.

கொரேயா அவர்களின் பதவிக் காலத்தில் ஈக்குவடோர் நாட்டில் பல்வேறு மக்கள் நலத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. இதன் காரணமாக ஆகக் குறைந்த வேதனத்தின் அளவு இரண்டு மடங்காக அதிகரித்தது. நாட்டில் வறுமை முற்றாகவே ஒழிக்கப்பட்டது. கல்வி, சுகாதாரம் போன்ற துறைகளுக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. உள்நாட்டு மொத்த உற்பத்தி தென்னமெரிக்கப் பிராந்தியத்தின் சாரசரியை விடவும் அதிகமாக உயர்ந்தது. விளிம்புநிலை மக்கள் சமூகத்தின் ஒரு அங்கமாகத் தங்களை உணரும் நிலை உருவாகியது.

இத்தகைய காலம் மீண்டும் உருவாக வேண்டும் என்பதே சாமானிய மக்களின் அவாவாக உள்ளது. அதனை உருவாக்கக் கூடியவர் கொரேயாவின் ஆதரவு பெற்ற அருஸ் என்பது சொல்லாமலேயே புரியும். எனவே, அவர் ஆட்சிக் கட்டிலில் அமர்வதை எப்பாடு பட்டாவது தடுத்துவிட வேண்டும் என்பதே அமெரிக்காவின் கனவு.

மே 24 ஆம் திகதி புதிய அரசுத் தலைவர் பதவியேற்பு நிகழ உள்ளது. தான் அரசுத் தலைவரானால் முதல் வேலையாக நாட்டு மக்கள் அனைவருக்கும் கொரோனத் தடுப்பு மருந்து வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ள அருஸ், பொருளாதார வளம் குன்றிய நிலையில் உள்ள பத்து இலட்சம் குடும்பங்களுக்கு தலா ஆயிரம் டொலர் வீதம் பகிர்ந்தளிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார். இந்த நிதியைக் கொண்டு தாம் பெற்றுள்ள கடன்களைத் திருப்பிச் செலுத்துவதுடன், மருந்து, உணவு, உடைகளை மக்கள் வாங்கிக் கொள்ள முடியும் எனவும் தெரிவித்துள்ளார். அந்தப் பணத்தில் மீதம் ஏற்படுமானால் அதனைக் கொண்டு சிறு தொழில் ஒன்றை ஆரம்பிக்க முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இதன் மூலம் தற்போது சீரழிந்துள்ள நிலையில் உள்ள நாட்டின் பொருளாதாரத்தை மீள் சுழற்சிக்கு உட்படுத்த முடியும் என்பது அவரது சிந்தனையாக உள்ளது.  ஆனால், இந்தச் சிந்தனை ஒரு மோசடி என வர்ணித்துள்ள பெரஸ், அரசாங்கம் வழங்கக் கூடிய பணத்தை மக்கள் குடித்தே கரைத்து விடுவார்கள் என்கிறார்.

இரண்டு வேட்பாளர்களினதும் சிந்தனைப் போக்கில் உள்ள முரணை வெளிப்படுத்த ஒரு சிறிய எடுத்துக்காட்டே இது. இதனை விடவும் ஒன்றுக்கு ஒன்று முரணான பல கருத்துக்களை இருவரும் கொண்டுள்ளார்கள்.

ஏப்ரல் 11 ஆம் திகதி நடைபெறவுள்ள தேர்தலில் அருஸை எதிர்த்துப் போட்டியிடுபவர் யாராக இருந்தாலும் போட்டி என்னவோ உண்மையாக மக்களை நேசிப்பவருக்கும், நேசிப்பதாகக் காட்டிக் கொண்டு அமெரிக்காவுக்குச் சேவகம் செய்பவருக்கும் இடையிலானதாகவே இருக்கப் போகின்றது. தங்களை யார் ஆள வேண்டும் என்பதை மக்களே தீர்மானிக்க வேண்டும். வெளியில் இருந்து ஜனநாயகத்தை ஏற்றுமதி செய்வது எப்போதும் மக்கள் விரோதச் செயற்பாடே என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

Leave A Reply

Your email address will not be published.