ஐ.நா. தீர்மானத்துக்கு அஞ்சமாட்டோம்! – எஸ்.பி. திஸாநாயக்க

“ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கை மீது நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு அஞ்சமாட்டோம். அதனை நிராகரிக்கின்றோம். மேற்படி தீர்மானத்தின் பிரகாரம் இலங்கைக்கு எதிராக எதுவும் செய்யமுடியாது.”

– இவ்வாறு ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு:-

“இலங்கைக்கு எதிராக பிரிட்டன், ஜேர்மன் உள்ளிட்ட நாடுகளே தீர்மானம் கொண்டுவந்தன. அதில் ஒரு நாட்டைத் தவிர ஏனையவை நேட்டோ நாடுகளாகும். இந்த நாடுகளே அரபு வசந்தம் என்ற போர்வையில் ஈராக், லிபியா, சிரியா, ஆப்கானிஸ்தான், யேமன் ஆகிய நாடுகளில் அழிவை ஏற்படுத்தின, ஏற்படுத்தியும் வருகின்றன. யேமனில் இன்று நடத்தப்படும் தாக்குதல்களுக்குப் பயன்படுத்தப்படும் ஆயுதங்கள் பிரிட்டன் மற்றும் ஜேர்மன் நாட்டுக்குரியவையாகும்.

இவ்வாறு உலகில் இடம்பெறும் பாரிய போர்க்குற்றங்களுடன் தொடர்புடைய நாடுகளே இலங்கைக்கு எதிராக தீர்மானம் முன்வைத்தன. இந்தத் தீர்மானம் சட்டவிரோதமாகும்.

இலங்கையில் நடைபெற்ற போர் இரு நாடுகளுக்கிடையிலான போர் கிடையாது. எனவே, சர்வதேச மனித உரிமைகள் சட்டம் மட்டுமே இதனுடன் தொடர்புபடும். அந்தவகையில் இலங்கையின் உள்விவகாரங்களில் தலையிடும் அதிகாரம் ஐ.நா. மனித உரிமைகள் சபைக்குக் கிடையாது. எமது நாட்டின் அரசமைப்பையும் விமர்சிக்க முடியாது. ஆக மனித உரிமைகள் என்ற போர்வையில் இலங்கைக்கு எதிராக முன்னெடுக்கப்படும் நடவடிக்கை தவறு – சட்டவிரோதமாகும். எமக்கு எதிரான குற்றச்சாட்டுகள் போலியானவை. வடக்கில் போராட்டம் நடத்துபவர்களுக்கும் இது தெரியும்.

இறுதிப் போரின்போது மக்கள் மீது விடுதலைப்புலிகளே தாக்குதல் நடத்தினர். படையினரிடம் சரணடைய வந்தவர்கள் கொல்லப்பட்டனர். இவ்வாறு சரணடைய வந்த ஒருவரே பிரபாகரனின் இருப்பிடத்தைக் காண்பித்தார். எனவே, எமக்கு எதிரான குற்றச்சாட்டுகள் போலியானவையாகும்.

ஐ.நா. மனித உரிமைகள் சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தால் எதுவும் நடக்கப்போவதில்லை. அதற்கு அஞ்சமாட்டோம். தீர்மானத்தை அடியோடு நிராகரிக்கின்றோம்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.