நாடு திரும்பும் இலங்கையர்களின் தனிமைப்படுத்தலுக்காக 10 ஹோட்டல்கள் அறிவிப்பு.

கொரோனா 19 வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக மத்திய கிழக்கு உள்ளிட்ட நாடுகளில் இருந்து நாடு திரும்பும் புலம்பெயர் இலங்கைத் தொழிலாளர்களுக்கு இலவசமாக தனிமைப்படுத்தல் நிலையங்களை வழங்க தனியார் துறையில் 10 ஹோட்டல்கள் மற்றும் தனியார் விடுதிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

இந்த நடவடிக்கைக்கு கொரோனா தடுப்பு தொடர்பான ஜனாதிபதி செயலணி ஒப்புதல் வழங்கியுள்ளது என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

இதன்படி, புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கான தனிமைப்படுத்தல் நிலையங்களாக வெலிகம, ஹிக்கடுவ, வாதுவ, திக்வெல்ல, நீர்கொழும்பு, அஹங்கம மற்றும் தங்காலை ஆகிய இடங்களில் உள்ள ஹோட்டல்கள் மற்றும் தனியார் விடுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதில் வெலிகம ஜகாபே ரிசோட், பெரடைஸ் பீட்ச் மற்றும் நெப்சூன் ரிசோட், ஹிக்கடுவ ஹிக்கா எப்.என்.ஆர் மற்றும் கொரல் ரீப் கெஸ்ட், வாதுவ ப்ளூ ஸ்ப்ரிங்ஸ், திக்வெல்ல விலா ஜயனன்த, நீர்கொழும்பு கெடமரான், அஹங்கம ஜயன்தி சர்ப் மற்றும் தங்காலை சென்டன் ரிசோட் உள்ளிட்ட ஹோட்டல்களில் வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பும் இலங்கையர்கள் சுய தனிமைப்படுத்தலை மேற்கொள்ள முடியும்.

இந்த தனிமைப்படுத்தல் நிலையங்களில் 5 இலட்சத்து 71 ஆயிரம் நபர்கள் தனிமைப்படுத்தல் வசதிகளைப் பெற்றுக்கொள்ள முடியும்.

இந்தத் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்கான வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் 18 மில்லியன் ரூபாவை செலவிடுகின்றது எனத் தொழில்துறை அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

இதன்படி, மேலே குறிப்பிடப்பட்ட தனிமைப்படுத்தல் ஹோட்டல்களில் தங்கவைக்கப்படுகின்ற நபரொருவருக்காக நாளொன்றுக்கு 4 ஆயிரத்து 500 ரூபா பணம் செலவிடப்படுகின்றது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனிடையே, ஹோட்டல் கட்டணங்கள், உணவு உள்ளிட்ட ஏனைய வசதிகளைப் பெற்றுக்கொள்வதற்கான கட்டண விபரங்களை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் வழங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.