யாழில் 38 பேருக்குக் கொரோனா!

யாழ்ப்பாணத்தில் 38 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது என்று வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை மற்றும் யாழ்ப்பாணம் மருத்துவபீட ஆய்வு கூடம் இரண்டிலும் 756 பேரின் மாதிரிகள் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. அதில் 25 பேருக்குத் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மாநகர வர்த்தக நிலைய உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்கள் 321 பேரின் மாதிரிகள் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. அவர்களில் 8 பேருக்குத் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

நல்லூர் சுகாதார மருத்துவ அதிகாரி பிரில் 4 பேருக்குத் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர்களில் ஒருவர் திருநெல்வேலி பொதுச் சந்தை தொகுதியைச் சேர்ந்தவர்கள். ஏனைய 3 பேரும் ஏற்கனவே தொற்றாளர்களுடன் நேரடித் தொடர்புடையவர்கள்.

சண்டிலிப்பாய் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 6 பேருக்குத் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் சுயதனிமைப்படுத்தப்பட்டவர்கள்

உடுவில் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் இருவருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ஒருவர் மருதனார்மடம் பொதுச் சந்தை வியாபாரி. ஏனைய ஒருவர் தொற்றாளருடன் நேரடித் தொடர்புடையவர்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் அறிகுறிகளுடன் சேர்க்கப்பட்ட 5 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் மூவர் தனிமைப்படுத்தல் விடுதியில் சேர்க்கப்படவர்கள். மேலும் இருவர் வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சைக்கு வந்தவர்கள்” – என்றார்.

இதேவேளை, யாழ்ப்பாணம் மாநகர சந்தைக் கடைத்தொகுதி வர்த்தகர்கள் மற்றும் பணியாளர்களில் மேலும் 13 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை நேற்று கிடைத்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் மாநகர வர்த்தக நிலைய உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்கள் 541 பேரின் மாதிரிகள் முல்லேரியா ஆய்வுகூடத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டன எனவும், அவற்றில் 13 பேருக்குத் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டு அறிக்கை கிடைத்துள்ளது எனவும் அவர் மேலும் கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.