வடமராட்சி கிழக்கில் மணல் கடத்தலைத் தடுத்த பொலிஸ் அதிகாரி டிப்பர் மோதி படுகாயம்!

யாழ்., வடமராட்சி கிழக்கில் மணல் கடத்தலில் ஈடுபட்டோரைத் தடுக்க முற்பட்ட பொலிஸ் அதிகாரி டிப்பர் வாகனம் மோதி படுகாயமடைந்துள்ளார்.

இந்தச் சம்பவம் வடமராட்சி, வல்லிபுக்குறுச்சியில் இன்று இடம்பெற்றுள்ளது.

வடமராட்சி கிழக்கிலிருந்து சட்டத்துக்குப் புறம்பமாக மணல் அகழ்வில் ஈடுபட்டோர் டிப்பர் வாகனத்தில் மணலை ஏற்றிப் பயணிப்பதாக உள்ளூர் மக்களால் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்துக்குத் தகவல் வழங்கப்பட்டது.

அதை அறிந்து பருத்தித்துறை பொலிஸ் நிலைய முறைப்பாட்டுப் பிரிவு பொறுப்பதிகாரி, உப பொலிஸ் பரிசோதகர் அஜித் தலைமையில் 6 பேர் கொண்ட பொலிஸ் பிரிவு சம்பவ இடத்துக்கு விரைந்தது.

வல்லிபுரக்குறிச்சிப் பகுதியில் டிப்பர் வாகனம் வருவதைக் கண்ட பொலிஸார் அதை மறிக்க முற்பட்டனர். எனினும், டிப்பர் வாகனம் உப பொலிஸ் பரிசோதகரை மோதிவிட்டுத் தப்பிச் சென்றுள்ளது.

சம்பவத்தில் படுகாயமடைந்த உப பொலிஸ் பரிசோதகர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ள பருத்தித்துறை பொலிஸார் மோதி விட்டுத் தப்பிச் சென்ற டிப்பர் வாகனத்தையும், சாரதியையும் தேடி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.