சர்வதேச அரங்கில் தடுப்பூசி அரசியல் : சுவிசிலிருந்து சண் தவராஜா

கொள்ளை நோயான கொரோனா உலகைக் காவு கொள்ளத் தொடங்கி ஒரு வருடம் கடந்து விட்டது. அறிவியல் வளர்ச்சியின் உச்சத்தில் உள்ள மனித குலம், தனது வளங்கள் அத்தனையையும் பயன்படுத்தி கொள்ளை நோய்க்கு எதிரான தடுப்பு மருந்தையும் கண்டு பிடித்து விட்டது. “அப்பாடா!” என்று மூச்சுவிடத் தொடங்கும் முன்னரேயே கொரோனாத் தீநுண்மி வேறு வடிவங்களை எடுத்து விட்டது என்ற தகவல் வெளியாகி அடிவயிற்றைக் கலக்கத் தொடங்கி விட்டது. தடுப்பு மருந்துகள் கண்டு பிடிக்கப்பட்டதும் கொரோனா அபாயம் நீங்கிவிடும் என நினைத்திருந்த மக்களின் நம்பிக்கையைத் தவிடுபொடி ஆக்கிய கொரோனாத் தீநுண்மி புதிய வடிவம் எடுத்திருப்பது மட்டுமன்றி, பரவுதலிலும் வேகம் எடுத்துள்ளது. இரண்டாவது அலை, மூன்றாவது அலை என வெவ்வேறு பெயர்களில் வேகமெடுத்துள்ள தீநுண்மியின் பரவல் மரணங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்துள்ளது. மறுபுறம், மக்கள் மனங்களில் சோர்வையும், விரக்தியையும் ஏற்படுத்தி நிற்கின்றது.

அதிர்ச்சிதரும் புள்ளி விபரங்கள்

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

புதிய புள்ளி விபரங்கள் அதிர்ச்சி தருவனவாக உள்ளன. கொரோனாத் தீநுண்மி முதன் முதலாக 2019 டிசம்பரில் சீனாவின் வூகான் நகரில் கண்டறியப்பட்டிருந்தாலும், அதன் தாக்கம் அதிகமாக உள்ள பிராந்தியமாக ஐரோப்பாக் கண்டமே உள்ளது. மருத்துவத் துறையில் முன்னேறிய பிராந்தியமாக உள்ள போதிலும், ஆரம்பத்தில் இந்தப் பிராந்திய அரசாங்கங்கள் கடைப்பிடித்த அலட்சியப் போக்கினால் கொரோனா வேக வேகமாகப் பரவத் தொடங்கியது. காலங்கடந்து அரசாங்கங்கள் சுதாகரித்துக் கொண்டு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்த போதிலும், கொரோனாப் பரவலைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

ஒரு சிறிய தணிவின் பின்னர் கொரோனா தற்போது மீண்டும் வேகமாகப் பரவத் தொடங்கியுள்ளது.

சாதாரண மக்களின் உயிர்களை விடவும் கையளவு பெரு வணிகர்களின் பொருளாதார வளர்ச்சியே பெறுமதியானது என நினைக்கும் பொருண்மியக் கொள்கையைக் கடைப்பிடிக்கும் மேற்குலகம், சாதாரண மக்களின் நடமாட்டத்தை மறைமுகமாக ஊக்குவித்து ‘மந்தை நிர்ப்பீடணம்’ என்ற இலக்கை எட்டிவிடத் துடியாய்த் துடிக்கிறது. அதன் விளைவாக, இந்த மாதம் முடிவதற்கு இடையில் ஐரோப்பாக் கண்டத்தில் கொரோனாவிற்குப் பலியாகியவர்களின் எண்ணிக்கை பத்து இலட்சத்தைக் கடக்கும் என எதிர்வு கூறல் வெளியாகி உள்ளது. அதேவேளை, கொரோனாவிற்கு அதிக எண்ணிக்கையில் மக்களைக் காவு கொடுத்த முதல் கண்டம் என்ற பெருமை(?)யையும் ஐரோப்பா பெற உள்ளது.

ஏப்ரல் முதலாந் திகதிய புள்ளிவிபரங்களின் அடிப்படையில் ஐரோப்பாக் கண்டத்தில் அதிக உயிரிழப்புக்களைச் சந்தித்த நாடான ஐக்கிய இராச்சியத்தில் மரணித்தோரின் எண்ணிக்கை 1,26,764 ஆக உள்ளது. இரண்டாவது இடத்தில் உள்ள இத்தாலியில் 1,09,847 பேரும், மூன்றாவது இடத்தில் உள்ள ரஸ்யாவில் 99,233 பேரும் மரணத்தைத் தழுவியுள்ளனர். அடுத்தடுத்த இடங்களில் பிரான்ஸ் (95,976), யேர்மனி (77,244), ஸ்பெயின் (75,541) மற்றும் போலந்து (53,665) ஆகிய நாடுகள் உள்ளன.

தடுமாறும் தடுப்பூசி வழங்கல் திட்டம்

இந்த உயிரிழப்புக்களின் எண்ணிக்கை மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் சடுதியாக அதிகரித்து வருவதைப் பார்க்க முடிகின்றது. இருந்த போதிலும், தடுப்பு மருந்து வழங்கும் பணிகள் மிகவும் மந்தமாகவே காணப்படுகின்றன. மார்ச் 28 ஆம் திகதி கிடைத்த தரவுகளின் பிரகாரம் ஐரோப்பியக் கண்டத்தில் நூறு பேருக்கு 15.79 என்ற வீதத்திலேயே தடுப்பூசி வழங்கப்பட்டு உள்ளது. அமெரிக்காவில் இந்த வீதம் 42.9 ஆக உள்ளது.

தடுப்பூசி ஏற்றப்பட்ட ஐரோப்பியச் சராசரி 15.79 ஆக உள்ள போதிலும், கண்டம் முழுவதிலும் உள்ள நாடுகளில் தடுப்பூசி ஏற்றும் விடயத்தில் சமமற்ற தன்மையே காணப்படுகின்றது. ஐக்கிய இராச்சியத்தில் இந்த வீதம் – அமெரிக்காவை விடவும் அதிகமாக – 45 வீதமாக உள்ளது. அதேவேளை, ஐரோப்பாக் கண்டத்தில் மிகவும் வறிய நாடு என அறியப்படும் அல்பேனியாவில் இந்த வீதம் வெறும் 0.2 ஆகவே உள்ளது. கிழக்கு மற்றும் தென் கிழக்கு ஐரோப்பாவில் உள்ள ஏனைய வறிய நாடுகளான உக்ரைன், பல்கேரியா, மொன்ரிநீக்ரோ, குரோசியா மற்றும் லற்வியா என்பவற்றில் வாழும் மக்களுள் இதுவரை இரண்டு வீதம் வரையானோருக்கே தடுப்பூசி ஏற்றப்பட்டு உள்ளது.

பின்னணி அரசியல்

இத்தகைய சமத்துவமற்ற நிலைமைக்குக் காரணமான பின்னணி அரசியல் மிகவும் சுவாரசியமானது. கொரோனாக் கொள்ளை நோய் அறியப்பட்ட காலம் முதலாகவே ‘அதுவொரு சீனச் சதி’ என்பது போன்ற ஒரு பார்வையும், அணுகுமுறையும் மேற்குலகில் இருந்து வருகின்றது.

கொரோனாவின் மூலம் என அறியப்படும் சீனாவின் வூகான் நகரில் ஐ.நா. உலக சுகாதார நிறுவனம் மேற்கொண்ட ஆய்வுகளின் பின்னர் வெளியிடப்பட்ட அறிக்கையை அமெரிக்கா ஏற்றுக் கொள்ள மறுப்பது இத்தகைய சிந்தனையின் வெளிப்பாடே. சீனாவுடனான பொருளாதார யுத்தத்தில் ஒரு அங்கமாக இந்த விடயத்தை அமெரிக்கா பயன்படுத்துகின்றதோ என்ற ஐயம்; எழும் அளவிற்கு அமெரிக்காவின் அணுகுமுறைகள் இருந்து வருகின்றன.

கொள்ளை நோய் என்பது மனித குலத்திற்கு எவ்வாறு மிகப் பாரிய அச்சுறுத்தலாக அமைந்ததோ, அதே போன்று கொள்ளை நோய்க்கான தடுப்பு மருந்தைக் கண்டு பிடிப்பதுவும் மனித குலத்திற்கு ஒரு சவாலாகவே அமைந்திருந்தது. மருந்தைக் கண்டு பிடிப்பது என்பது வல்லரசுகளுக்கு இடையிலான ஒரு போட்டிக் களமாகவும், மருந்து தயாரிப்பு நிறுவனங்களுக்கு இடையிலான ஒரு அதிக இலாபத்தை ஈட்டக்கூடிய பாரிய வர்த்தகக் களமாகவும் திகழ்ந்தது.

ரஸ்யத் தடுப்பு மருந்தும், மேற்குலகின் எதிர்வினையும்

2020 ஓகஸ்ற் மாதத்தில் உலகின் முதலாவது கொரோனாத் தடுப்பு மருந்தைக் கண்டு பிடித்து விட்டதாக ரஸ்யா அறிவித்த போது பெரும்பாலான உலக மக்கள் மத்தியில் மகிழ்ச்சி வெளிப்பட்டது. ஆனால், உலகை ஆள்வதாக நினைத்துக் கொண்டிருக்கும் மேற்குலகினால் இந்தக் கண்டுபிடிப்பை ஜீரணிக்க முடியவில்லை. அதன் விளைவாக, ஸ்புட்னிக்-வி என்ற பெயரிலான ரஸ்யத் தயாரிப்பை உதாசீனம் செய்வது என அமெரிக்கா முடிவெடுத்தது. தொடர்ந்து தனது ஆள், படை, அம்பு என சகல வளங்களையும் பயன்படுத்தி ரஸ்யத் தயாரிப்புத் தடுப்பு மருந்தை மக்களின் கவனத்தில் இருந்து மறைத்துவிட முயற்சித்தது. தொடர்ந்தும் முயற்சித்துக் கொண்டும் இருக்கின்றது. தனது நேச நாடுகள் எனக் கருதும் ஐரோப்பிய நாடுகளும் தனது நிலைப்பாட்டையே பின்பற்ற வேண்டும் என்ற கருத்தைக் கொண்டுள்ள அமெரிக்கா அதனை வலியுறுத்தியதன் விளைவாக ரஸ்யத் தடுப்பு மருந்தைப் புறக்கணிப்பது என்ற முடிவிற்கு ஐரோப்பிய ஒன்றியமும் தள்ளப்பட்டது.

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் வாழும் மக்களுக்கு போதிய தடுப்பு மருந்துகளை வழங்க முடியாத கையறு நிலை உள்ள போதிலும், ரஸ்யாவிடம் இருந்து தடுப்பு மருந்துகளைக் கொள்வனவு செய்யக் கூடிய ஏதுநிலை உள்ள போதிலும் அதற்கு முன்வராத ஐரோப்பிய ஒன்றியம், குறிப்பாக வட அத்திலாந்திக் ஒப்பந்த நாடுகள் எனும் பெயரிலான இராணுவக் கட்டமைப்பு (நேட்டோ) தனது உறுப்பு நாடுகள் ரஸ்யத் தயாரிப்புத் தடுப்பு மருந்தைக் கொள்வனவு செய்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றது. இவ்வாறு செய்வதன் ஊடாக, பிராந்தியத்தில் வாழும் மக்களின் உயிர்களைக் காப்பாற்றக் கூடிய ஒரு வாய்ப்பு மறுக்கப்படுகின்றது.
இது அரசியலை முன்னிறுத்தி மக்களின் உயிரோடு விளையாடும் செயலே அன்றி வேறில்லை.

துணிவோடு நடைபோடும் ஹங்கேரி

எனினும், பிராந்தியத்தில் உள்ள அனைத்து நாடுகளும் இத்தகைய நிலைப்பாட்டில் இல்லை. ஹங்கேரி மற்றும் ஸ்லோவேக்கியா ஆகிய நாடுகள் ஏற்கனவே ரஸ்யத் தயாரிப்புத் தடுப்பு மருந்தைப் பாவிக்கத் தொடங்கிவிட்டன. ஹங்கேரி அரசாங்கம் ரஸ்ய மற்றும் சீனத் தயாரிப்புத் தடுப்பு மருந்துகளை அவசர தேவைக்குப் பயன்படுத்தும் சட்டம் ஒன்றை நிறேவேற்றியுள்ளது. அந்த நாட்டில் இதுவரை தடுப்பு ஊசியைப் பெற்றுக் கொண்டுள்ள 15 இலட்சம் பேரில் சுமார் அரைவாசிப் பேர் ரஸ்ய மற்றும் சீனத் தயாரிப்புத் தடுப்பூசிகளைப் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுள் ரஸ்யத் தயாரிப்புத் தடுப்பூசியை ஏற்றிக் கொண்ட முதலாவது அரசியல் பிரபலம் என அறியப்படும் ஹங்கேரி நாட்டின் வெளிவிவகார அமைச்சர் பீற்றர் சியாற்றோ “தடுப்பூசி என்று வரும்போது அங்கே அரசியல் கொள்கைகளுக்கு இடமில்லை” என்கிறார்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் முடிவைப் பற்றிக் கவலைப்படாது தனது நாட்டின் சூழலை முன்னிறுத்தி, தற்துணிவுடன் முடிவை எடுத்து ரஸ்யத் தடுப்பூசியை கொள்வனவு செய்த போது. ஒன்றிய உறுப்பு நாடுகளிடம் இருந்து கண்டனத்தையும் விமர்சனத்தையும் அதிகளவில் ஹங்கேரி எதிர்கொள்ள நேரிட்டது. ஆனால், இன்று நாளுக்கு நாள் மோசமடைந்து வரும் நிலைமைகள் காரணமாக பல நாடுகள் ரஸ்யாவிடம் தடுப்பு மருந்து பெறும் நிலையை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றன.

அனுமதியை இழுத்தடிக்கும் ஐரோப்பிய மருந்துக் கட்டுப்பாட்டகம்

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் ரஸ்யத் தயாரிப்புத் தடுப்பூசியைப் பயன்படுத்துவதாயின் ஐரோப்பிய மருந்துக் கட்டுப்பாட்டகம் மருந்தைப் பரிசீலனை செய்து அதற்கான அனுமதியை வழங்க வேண்டும். குறித்த அனுமதிக்காக ஸ்புட்னிக்-வி மருந்து நிறுவனம் விண்ணப்பித்துள்ள போதிலும் மூன்று வாரங்கள் கடந்தும் அனுமதி வழங்கப்படாமல் – வேண்டும் என்றே- இழுத்தடிக்கப்பட்டு வருகின்றது. அது மாத்திரமன்றி, ரஸ்யத் தயாரிப்பு மருந்து எமக்குத் தேவையில்லை. அது இல்லாமலேயே எதிர்வரும் யூன் மாதத்துக்கு இடையில் ஐரோப்பிய மக்களுக்கு தடுப்பு மருந்து கிட்டிவிடும் என்ற கள யதார்த்தத்துக்கு முரணான பேச்சுக்களும் கிளம்பியுள்ளன.

அதேவேளை, ஐரோப்பிய மருந்துக் கட்டுப்பாட்டகத்தின் அனுமதிக்குக் காத்திராமல் ரஸ்யத் தடுப்பூசிகளைப் பெறுவது தொடர்பில் பல நாடுகளும் சிந்தித்து வருகின்றன.

வெகு விரைவில் ரஸ்யாவில் இருந்து பெரும் எண்ணிக்கையான தடுப்பு மருந்துகளைக் கொள்வனவு செய்ய உள்ளதாக ஒஸ்ரியா நாட்டுத் தலைமை அமைச்சர் செபஸ்ரியான் குற்ஸ் மார்ச் 30 ஆம் திகதி தெரிவித்து உள்ளார். மறுபுறும், ரஸ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் உடனான கூட்டுத் தொலைபேசி உரையாடலின் போது ரஸ்யத் தயாரிப்புத் தடுப்பு மருந்துகளைப் பெறுவது தொடர்பில் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோனும், யேர்மன் தலைமை அமைச்சர் அங்கெலா மேர்க்கலும் ஆராய்ந்துள்ளனர். எதிர்வரும் நாட்களில் மேலும் பல நாடுகள் இந்த முயற்சியில் ஈடுபடலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நேட்டோ நாடுகள் மத்தியில் ஒற்றுமை பற்றிய பேச்சுக்கள் ஒருபுறம் இருந்தாலும் தடுப்பூசி விடயம் காரணமாக விரிசல்களும் உருவாகி உள்ளன. உறுப்பு நாடுகளுள் ஒன்றான ஐக்கிய இராச்சியத்தில் தடுப்பூசி பெற்றுக் கொண்டோரின் வீதம் மிக அதிகமாக உள்ள நிலையில், அந்த நாட்டுத் தயாரிப்பான அஸ்ட்ரா-செனக்கா விநியோகத்தில் தடங்கல் ஏற்பட்டுள்ளது. இதனைக் காரணம் காட்டி, அந்த நிறுவனத்திற்காக நெதர்லாந்தில் தயாரிக்கப்படும் மருந்துகளை இங்கிலாந்துக்கு எடுத்துச் செல்வதற்கு முட்டுக்கட்டை போடப்படுவதாக ஒரு விவகாரம் எழுந்துள்ளது.
எத்துணை தூரம் ஜனநாயகம் பேசினாலும், அடி மனதில் உள்ள தேசிய வாதத்தை மறைத்துவிட முடியாது என்பதற்கு ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தற்போதைய போக்கு எடுத்துக்காட்டாக உள்ளதைப் பாரக்க முடிகின்றது.

மக்கள் நலன் என்பதற்கு எதிராக வேறு எந்தவொரு நலனை முன்னிறுத்தினாலும் அது நீண்ட காலத்திற்கு பலன் தரப் போவதில்லை என்பதற்கு வரலாற்றில் அநேக பாடங்கள் உள்ளன. கொரோனாத் தடுப்பூசி விடயத்திலும் ரஸ்யாவுக்கு எதிரான போக்கு என்பதைக் கடைப்பிடித்து மக்களின் உயிரோடு விளையாடும் ஒரு சில வல்லாதிக்க நாடுகளின் போக்கும் இறுதியில் மக்களின் வெறுப்பையே சம்பாதித்துத் தரும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

Leave A Reply

Your email address will not be published.