நௌபர் மௌலவியா ஈஸ்டர் தாக்குதலின் பிரதான சூத்திரதாரி? சஜித் அணி சந்தேகம்.

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலின் பின்னணியில் செயற்பட்ட பிரதான சூத்திரதாரி நௌபர் மௌலவி என்பது அரசால் புனையப்பட்ட கதையாகக் கூட இருக்கலாம் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல சந்தேகம் வெளியிட்டார்.

நாடாளுமன்றில் இன்று புதன்கிழமை நடைபெற்ற சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலின் பின்னணியின் சர்வதேச சக்திகள் இருக்கின்றன எனக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள போதிலும், இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் இது தொடர்பாக ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையில் எந்தத் தகவலும் வெளியிடப்படவில்லை. பிரதான சூத்திரதாரி பற்றியும் இல்லை.

இந்நிலையில் தாக்குதல் நடைபெற்று இரண்டு வருடங்கள் நெருங்கும் வேளை பிரதான சூத்திரதாரி ஒருவரின் பெயர் தற்போது திடீரென வெளியிடப்பட்டுள்ளது. நௌபர் மௌலவி என்பவர் 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் கைதுசெய்யப்பட்டிருந்தாலும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னினையில் சாட்சியளிக்கவில்லை. அது ஏன்?

கொழும்பு பேராயர் உள்ளிட்ட அனைத்துத் தரப்பும் பிரதான சூத்திரதாரி குறித்து கேள்வி எழுப்புவதால் அரசுக்கு அழுத்தம் ஏற்பட்டுள்ளது. அந்த அழுத்தங்களில் இருந்து தப்பிப்பதற்காகவே நௌபர் மௌலவியின் பெயரை அரசு வெளியிட்டிருக்கலாம்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.