யாழில் மேலும் 18 பேருக்குக் கொரோனா! – நல்லூரைச் சேர்ந்த வயோதிபப் பெண் சாவு.

யாழ்ப்பாணத்தில் மேலும் 18 பேருக்கும், முல்லைத்தீவு, மன்னாரில் தலா ஒருவருக்கும் என வடக்கு மாகாணத்தில் 20 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை இன்று கண்டறியப்பட்டுள்ளது என்று வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“யாழ்ப்பாணம், நல்லூர் செட்டித்தெருவில் வசிக்கும் 81 வயது பெண் ஒருவர் வீட்டில் உயிரிழந்த நிலையில் அவருக்குக் கொரோனாத் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 429 பேரின் மாதிரிகள் இன்று பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. அதில் 20 பேருக்குத் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மாநகர சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 11 பேருக்குக் கொரோனாத் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர்களில் 10 பேர் சுயதனிமைப்படுத்தப்பட்டிருந்தவர்கள்.

யாழ்ப்பாணம், நல்லூர் செட்டித்தெருவில் வசிக்கும் 81 வயது பெண் ஒருவர் வீட்டில் உயிரிழந்த நிலையில் அவருக்குக் கொரோனாத் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சண்டிலிப்பாய், சங்கானை மற்றும் சங்கானை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகளில் தலா ஒருவர் கொரோனாத் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்கள் மூவரும் சுயதனிமைப்படுத்தப்பட்டிருந்தவர்கள்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நால்வருக்குக் கொரோனாத் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர்களில் மூவர் வைத்தியசாலை சுயதனிமைப்படுத்தல் விடுதியில் தங்கவைக்கப்பட்டிருந்தவர்கள். ஒருவர் வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சை பெற வந்தவர்.

முல்லைத்தீவு வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சிகிச்சை பெற்ற ஒருவருக்கும், மன்னார் வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சேர்க்கப்பட்ட ஒருவருக்கும் கொரோனாத் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.