ரயிலுக்கு பலியாகவிருந்த குழந்தையை காப்பாற்றிய ரியல் ஹீரோ (வீடியோ)

ஒரு நொடி தாமதித்திருந்தாலும் அந்த குழந்தையின் உயிர் போயிருக்கும்.

முப்பது நொடிகள் மட்டுமே ஓடும் வீடியோ அது. திரும்ப திரும்ப பார்த்து மெய் சிலிர்த்தேன்.

மனிதாபிமானத்தின் உச்சம் அந்த மகத்தான சம்பவம்.

கடந்த சனிக்கிழமை மாலை நடந்தது அது.

ஊரடங்கு காரணமாக வெறிச்சொடிப் போயிருந்த மும்பை வாங்கனி ரயில் நிலையம்.

அதன் பிளாட்பார்ம் ஒன்றில்
ஒரு பார்வையற்ற பெண்ணும், அவளது ஆறு வயது மகனும் ஏதோ பேசியபடி நடந்து வந்து கொண்டிருக்கிறார்கள்.

பேச்சு சுவாரஸ்யத்தில் இருவரும் பிளாட்பார்ம் ஓரமாக போய் விட …
சட்டென கால் தவறி தண்டவாளத்தில் விழுந்து விடுகிறான் அந்த குழந்தை.

விழுந்தவுடன் அந்த பையன் வீறிட்டு அலற…
அவன் குரல் கேட்டு அந்த தாய் அழுகையுடன் அலற…
தூரத்தில் ரயில் ஹார்ன் அலறுகிறது.

குழந்தை விழுந்து கிடந்த அதே தண்டவாளத்தில் எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று பயங்கரமான வேகத்தில் விரைந்து வந்து கொண்டிருக்கிறது.

இதைப் பார்த்து பதறிப் போன பையன், தள்ளாடி
தாவிக் குதித்து பிளாட்பார்மில் ஏற முயற்சிக்க…
முடியாமல் தடுமாறி கதறுகிறான்.

ரயில் நெருங்கி கொண்டிருக்கிறது.

பிளாட்பார்மில் பரிதவிப்புடன் அங்கும் இங்கும் ஓடும் அந்த பார்வையற்ற தாய்க்கு, ஓசைகளை வைத்தே ஓரளவுக்கு நிலைமையின் விபரீதம் புரிந்து போகிறது.

ரயிலின் அலறல் சத்தத்தையும் மீறி பெருங் குரலெடுத்து அவள் அடிவயிற்றிலிருந்து அலற…
அப்போதுதான் நடக்கிறது அந்த அதிசயம்.

எங்கிருந்தோ ஓடி வருகிறார் ஒரு ரயில்வே ஊழியர்.

அவருக்கும் சூழ்நிலையின் விபரீதம் புரிந்து விடுகிறது.

ரயில் மிகவும் நெருங்கி விட்டது.

ஒன்று குழந்தையின் உயிர் போகும். அல்லது காப்பாற்றும் முயற்சியில் அவரது உயிர் போகும்.

ஆனால் எதைப் பற்றியும் சிந்திக்க அங்கே நேரம் இல்லை. தன் முழு மூச்சையும் திரட்டி ஓடி வந்த அந்த மனிதர்,
குழந்தையை காப்பாற்றி பிளாட்பார்மில் தூக்கி விட்டு,
அதே வேகத்தில் தானும் தாவிக் குதித்து பிளாட்பார்ம் மேலே ஏற…
தடதடத்து கடந்து செல்கிறது அந்த எக்ஸ்பிரஸ் ரயில்.

எல்லாமே ஒரே சில நொடிகளுக்குள் நடந்து முடிந்து விடுகிறது.

அங்கங்கே இருந்து ஓடி வருபவர்கள் அந்த ரயில்வே ஊழியரை பாராட்ட…
அந்த பார்வையற்ற அன்னையும் பாராட்டி இருக்கிறாள், தன் உயிரையும் பொருட்படுத்தாமல் அவள் மகனை காப்பாற்றிய அந்த மனித தெய்வத்தை..!

சீக்கிரத்திலேயே ரயில்வே அவருக்கு பதவி உயர்வையும் பாராட்டுக்களையும் வழங்கி கௌரவிக்கும்.
அந்த மனிதரின் பெயர் மயூர் ஷெல்கே.

ரயில்வே சிக்னல்களை கவனிக்கும் பாயிண்ட்ஸ் மேன்.

பிரபஞ்சம் நமக்கும் அவ்வப்போது ஏதாவது ஒருவகையில் சிக்னல்களை அனுப்பிக் கொண்டுதான் இருக்கிறது…

மனித நேயம் இன்னமும் இந்த உலகில் உயிர்ப்போடுதான் இருக்கிறது என்று..!

பாராட்டுக்கள்..!

– John Durai Asir Chelliah

செய்தி:

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை , வாங்கனி ரயில் நிலையத்தில் குழந்தையைக் காப்பாற்றி ரயில்வே ஊழியருக்கு பாராட்டு குவிந்த நிலையில், அவருக்கு பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.

தாயுடன் நடந்த சென்ற குழந்தை தவறி தண்டவாளத்தில் விழுந்த நிலையில், வேகமாக வந்துகொண்டிருந்த ரயிலிடமிருந்து குழந்தையை சாமர்த்தியமாக காப்பாற்றிய ரயில்வே ஊழயர் தான் தற்போது அனைவருக்கும் ஹீரோவாக இருக்கின்றார். குறித்த தாய் பார்வையற்றவர் என்று கூறப்படுகின்றது.

சரியான நேரத்தில் சாமர்த்தியமாகவும், துரிதமாகவும் செயல்பட்டு தனது உயிரைப் பற்றிக் கவலைப்படாமல், குழந்தையின் உயிரைக் காப்பாற்றிய ரயில்வே ஊழியருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வந்தது.

இந்நிலையில், தனது உயிரையும் பொருட்படுத்தாமல் தண்டவாளத்தில் சிக்கிய குழந்தையை மீட்ட ரயில்நிலைய பணியாளர் மயூர் ஷெல்க்கேவுக்கு மத்திய ரெயில்வே அமைச்சகம் வாழ்த்து தெரிவித்துள்ளதோடு, சன்மானமாக ரூபாய் 50 ஆயிரம் வழங்குவதற்கு ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.