மக்கள் அத்தியாவசியப் பொருட்களைச் சேமித்து வைப்பது அவசியம் என்கின்றார் இராணுவத் தளபதி.

“எதிர்வரும் நாட்களில் நாட்டில் அதிக கொரோனா வைரஸ் தொற்று பதிவாகும் பிரதேசங்கள் எந்த நேரத்திலும் தனிமைப்படுத்தப்படலாம். எனவே, மக்கள் பல நாட்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களைச் சேமித்து வைப்பது அவசியம்.”

இவ்வாறு கொரோனாத் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவரும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

“நாங்கள் மக்களைப் பீதியடையச் செய்யவோ அல்லது நிலைமையை மறைக்கவோ தேவையில்லை. ஆனால், எந்தவொரு சூழ்நிலையையும் எதிர்கொள்ளத் தயாராக இருப்பது முக்கியம்.

நாட்டில் பதிவாகும் கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கையைப் பொறுத்தே பிரதேசங்களை முடக்குவது தொடர்பில் தீர்மானிக்கப்படும்.

பாதிக்கப்பட்ட அனைவருக்கும் சிகிச்சையளிக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார்.

இதற்கமைய தேவைப்பட்டால் மருத்துவமனைகளுக்குக் குறைந்தபட்சம் 10 ஆயிரம் படுக்கைகளை வழங்கவும், நோயாளர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப கொரோனா சிகிச்சை மையங்களை அதிகரிக்கவும் இராணுவம் தயாராக இருக்கின்றது.

அத்தோடு நாட்டில் தேவைக்குப் போதுமான ஒட்சிசன் இருப்பதாக சுகாதாரப் பிரிவு உறுதிப்படுத்தியுள்ளது. பொய்யான தகவல்கள் குறித்து மக்கள் குழப்பம் அடையாது உத்தியோகபூர்வ நிறுவனங்கள் வெளியிடும் தகவல்களுக்கு மட்டுமே கவனம் செலுத்த வேண்டும்.

எத்தனை சவால்கள் வந்தாலும், எத்தனை அலைகள் வந்தாலும் ஒரே தேசமாக அதனை எதிர்கொண்டு வெற்றி அடைவோம்” – என்றார்

Leave A Reply

Your email address will not be published.