தி.மு.க.வின் வெற்றி, இந்திய அரசியலை மாற்றுமா ? : சண் தவராஜா

கொரோனாக் கொள்ளை நோய் தலைவிரித்தாடும் நிலையிலும், இந்தியாவின் ஐந்து மாநிலங்களுக்கான தேர்தல்கள் நடந்து முடிந்திருக்கின்றன.

மத்தியில் ஆளும் பா.ஜா.க.வின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் தேர்தலாக நோக்கப்பட்ட இந்தத் தேர்தலில் அனைத்து மாநிலங்களிலும் ஆட்சியைக் கைப்பற்றுவது என்ற இலக்கோடு அதி தீவிரமாகச் செயற்பட்ட பா.ஜ.க. அசாம் மாநிலத்தில் மாத்திரமே முழு வெற்றியைப் பதிவு செய்தது.

யூனியன் பிரதேசமான பாண்டிச்சேரியில் ரங்கசாமி தலைமையிலான என்.ஆர். காங்கிரசுடன் இணைந்து ஆறுதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது பா.ஜ.க. தமிழ் நாடு மற்றும் கேரள மாநிலங்களைப் பொறுத்தவரை அங்கே வெற்றிபெற்று ஆட்சியைப் பிடிக்க முடியாது என்பதைத் தெளிவாகவே உணர்ந்திருந்த பா.ஜ.க. அந்த மாநிலங்களில் ஆறுதல் வெற்றியையாவது பார்த்துவிடத் துடித்தது.

கேரளத்தில், மாநில சட்டசபையில் தன்வசம் ஏலவே இருந்த ஒரு ஆசனத்தையும் பறிகொடுத்த பரிதாபம் நிகழ்ந்தது. எனினும், தமிழகத்தில் அ.தி.மு.க.வின் முதுகில் சவாரி செய்து நான்கு ஆசனங்களைப் பெற்றிருக்கின்றது.

மேற்கு வங்காளத் தேர்தல்

 நடந்து முடிந்த தேர்தலில், தனது அனைத்து வளங்களையும், சக்திகளையும் பா.ஜ.க. உச்ச பட்சமாகப் பயன்படுத்திய தேர்தலாக மேற்கு வங்காளத் தேர்தல் அமைந்திருந்தது. தேர்தல் மரபுகள், கட்சி மரபுகள், மனித மாண்புகள், மக்கள் நலன்கள் யாவற்றையும் ஒருபுறம் தள்ளிவைத்துவிட்டு மம்தா பானர்ஜியைத் தோற்கடித்து ஆட்சியைக் கைப்பற்றுவது என்ற ஒற்றை இலக்கோடு தலைமை அமைச்சர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் களம் கண்டனர்.

எனினும் அவர்களால் வெற்றிபெற முடியவில்லை. ஒரு பெண்ணாக இருந்து கொண்டு, தனக்கு எதிரான அனைத்துச் சவால்களையும் எதிர்கொண்டு, களத்தில் நின்று போராடி, வெற்றிபெற்றுக் காட்டியிருக்கின்றார் மம்தா.

தமிழ் நாடு மாநிலத் தேர்தல்
 

தமிழகத் தேர்தல் முடிவுகள் ஓரளவு எதிர்பார்க்கப்பட்டதே. ஆனாலும் கூட, வாக்கு எண்ணிக்கை நடைபெற்று, முடிவுகள் அறிவிக்கப்படும் வரை பதட்டத்துக்குக் குறைவிருக்கவில்லை. தேர்தல் முடிவுகளில் குளறுபடிகள் ஏற்படலாம் என்ற எதிர்பார்ப்பு இறுதிவரை இருந்தது. ‘வெற்றியை எவ்வாறு திருடுவது’ என்ற தந்திரத்தைத் தெரிந்து வைத்துள்ள பா.ஜ.க.வும், அதன் சிந்தாந்த மூலமான ஆர்.எஸ்.எஸ்.சும் என்னென்ன திருகுதாளங்களை மேற்கொள்வார்களோ என்ற அச்சம் நீடிக்கவே செய்தது. தேர்தல் ஆணையத்தின் சுயாதீனத் தன்மை தொடர்பில் கேள்விகள் எழுந்துள்ள சூழலில் இந்த அச்சம் நியாயமானதாகவும் இருந்தது.

களத்தில் தி.மு.க. தலைமையிலான மதச் சார்பற்ற மக்கள் நலக் கூட்டணி தனித்து விடப்பட்டிருந்தது. அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி, அ.ம.மு.க., நாம் தமிழர் கட்சி மற்றும் மக்கள் நீதி மையம் ஆகிய அனைத்து அணிகளும் ஆட்சியைப் பிடிக்கும் நோக்கை விடுத்து தி.மு.க. தலைமையிலான கூட்டணி ஆட்சியைப் பிடிப்பதைத் தடுத்துவிட வேண்டும் என்ற இலக்குடனேயே பாடுபட்டன.

‘ஆரியத்துக்கும், திராவிடத்துக்கும் எதிரான போர்’ என வர்ணிக்கப்பட்ட இந்தத் தேர்தலில் நிலவிய களச் சூழல் காரணமாக, சமூக நீதிக்காகப் போராடும் அமைப்புக்களும், இயக்கங்களும் தாமாகவே களத்தில் இறங்கி தி.மு.க. அணியின் வெற்றிக்காகப் பாடுபட்டதைக் காண முடிகின்றது.

இந்த அடிப்படையில், ஒரு வரியில் சொல்வதானால், ‘நடந்து முடிந்த தமிழகத் தேர்தல், தி.மு.க. அணியை வெற்றிபெறச் செய்வதற்கும், தோற்கடிக்கச் செய்வதற்கும் இடையிலான போட்டியே’ எனக் கூறிவிட முடியும்.

தமிழின உணர்வாளரும், பெரியாரியச் சிந்தனை கொண்டவருமான திரைப்பட நடிகர் சத்தியராஜ் செய்தியாளர்களைச் சந்தித்த போது தெரிவித்த கருத்து, மேற்படி விடயத்தை விளங்கிக் கொள்ள பெரிதும் உதவலாம். தேர்தலில் வெற்றிபெற்ற மு.க.ஸ்ராலினைச் சந்தித்த சத்தியராஜ், பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது, “ஒரு பெரியாரிய உணர்வாளராக, இந்த வெற்றி மகிழ்ச்சியைத் தருகிறது” எனறார்.

இதே கருத்தையே தேர்தல் சமயத்தில் ஸ்ராலினும் தெரிவித்திருந்தார். “தமிழகத்தின் 15 ஆவது சட்ட சபைக்கான தேர்தல் தமிழ்நாட்டின் சுயமரியாதையைக் காப்பதற்கான ஒரு யுத்தம்” என்பது அவரின் கருத்தாக இருந்தது. தமிழ் நாட்டின் சுய மரியாதை என்பது, சமூக நீதியை அடிப்படையாகக் கொண்டது, மத சார்பின்மையை, மத நல்லிணக்கத்தை அடிப்படையாகக் கொண்டது, மாநில சுயாட்சியை அடிப்படையாகக் கொண்டது. சமகாலத்தில், தமிழகத்தில் மாத்திரமன்றி அகில இந்திய அளவிலும் இந்த அம்சங்கள் மிகுந்த அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ளன.

இவை மாநில அளவில் மாத்திரமன்றி, மத்திய அளவிலும் மீட்டெடுக்கப்பட வேண்டிய தேவை உள்ளது. அதற்கான முயற்சியை ஸ்ராலின் தலைமை மேற்கொள்ள வேண்டிய அவசியம் இருக்கிறது.

சவால்கள்

புதிதாகப் பதவியேற்றுள்ள ஸ்ராலின் முன்பாக உடனடியாகத் தீர்வு காணப்பட வேண்டிய பல பாரிய சவால்கள் உள்ளன.

கொள்ளை நோய்

கொரோனாக் கொள்ளை நோய் கோரத் தாண்டவம் ஆடுகின்றது. தினமும் ஆயிரக் கணக்கான மக்கள் தொற்றுக்கு ஆளாகின்றனர். நூற்றுக் கணக்கான மரணங்களும் சம்பவிக்கின்றன. மருத்துவக் கட்டமைப்பு ஏற்கனவே தடுமாறத் தொடங்கியிருக்கின்றது. கடந்தகால ஆட்சியின் மெத்தனப் போக்கு காரணமாக அரச இயந்திரம் தள்ளாடிக் கொண்டிருக்கின்றது. ஊழல் எங்கும் வியாபித்து இருக்கின்றது. அரசாங்கம் மீது மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக நம்பிக்கையை இழந்து கொண்டிருக்கின்றார்கள். இந்நிலையில், கொரோனாத் தடுப்பு விடயத்தில் ஸ்ராலின் அரசாங்கம் தீவிரமாகச் செயற்பட வேண்டிய தேவை உள்ளது.

பொருண்மியம்

இரண்டாவதாகப் பார்க்கப்பட வேண்டிய விடயம் பொருளாதாரம். அரசாங்கத்தின் திறைசேரி காலியாக இருப்பது மட்டுமன்றி, பல இலட்சம் கோடி ரூபாய் கடனையும் வைத்துவிட்டே செல்கிறது எடப்பாடி அரசாங்கம்.

தமிழகத்துக்குத் தர வேண்டிய வரி நிலுவையை வழங்காமல் இழுத்தடித்துக் கொண்டிருக்கின்றது நடுவண் அரசு. ஏற்கனவே, கொரோனா காரணமாக மாநிலத்தின் தொழிற்துறை நலிந்துபோய் இருக்கிறது. பல வருடங்களாக புதிய முதலீட்டாளர்கள் எவரும் தமிழகத்தின் பக்கம் வரவே இல்லை. மாதாந்த உதவித் தொகை பெறுவோருக்கான பேரிடர் நிவராணம், இல்லத் தலைவிகளுக்கான உரிமைத் தொகை என தி.மு.க. தேர்தல் அறிக்கையில் வழங்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டிய தேவை உள்ளது. எனவே, இவற்றுக்கான நிதி ஆதாரத்தைக் கண்டிறிய வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது.

வேலை வாய்ப்பு

அடுத்ததாக, தமிழ்நாட்டில் தமிழர்களுக்கே வேலை வாய்ப்பில் முன்னுரிமை என்ற கோரிக்கை கவனத்தில் எடுக்கப்பட வேண்டியதாக உள்ளது. நடுவண் அரசின் கொள்கை காரணமாகவும், கடந்த கால அ.தி.மு.க. அரசின் பாராமுகம் காரணமாகவும் தமிழ்நாட்டின் அரச பணிகளில் தமிழ் நாட்டவர் அல்லாதோர் அதிகமாக இடம்பிடித்து உள்ளனர். தமிழ்நாட்டைச் சோர்ந்த இளையோர் வேலைவாய்ப்பு இன்றி இருக்க, வெளி மாநிலத்தவர்கள் வேலையில் அமர்த்தப்படுவது என்பது ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது என்பதே தி.மு.க. மற்றும் அதன் தோழமைக் கட்சிகளின் சிந்தனையாக உள்ளது. எனவே, அடுத்தடுத்த கட்டங்களில் இந்த விடயத்திலும் கரிசனை செலுத்த வேண்டிய நிலையில் ஸ்ராலின் உள்ளார்.

சித்தாந்தம்

திராவிட சித்தாந்தத்தின் அடிப்படையில் உருவான கட்சியாக தி.மு.க. உள்ள போதிலும், ஆட்சிக் கட்டிலில் ஏறிய பின்னர் அளவுக்கு அதிகமான சமரசங்களைச் செய்கின்ற நிலைக்கு தி.மு.க. கடந்தகாலங்களில் சென்றிருந்தமையை அவதானிக்கலாம்.

சமூக நீதி, இட ஒதுக்கீடு, சாதி மறுப்பு போன்ற திராவிட சித்தாந்தத்தின் அடிப்படையான அம்சங்கள் மக்கள் மனதில் இருந்து படிப்படியாக அகன்றுவரும் இன்றைய நிலையில் அவற்றை மீளவும் மக்களுக்கு, குறிப்பாக இளையோருக்கு நினைவூட்டி அவர்களை சித்தாந்த அடிப்படையில் வளர்த்தெடுக்க வேண்டிய தேவை இருக்கிறது.

‘ஆட்சியைப் பிடித்து விட்டோம், எதிரணியில் பலமான தலைமை இல்லாதபடியால், தொடர்ந்து நாமே தேர்தலில் வென்றுவிட முடியும்’ என்ற நினைப்பில் செயற்பட்டால், அது தமிழகத்துக்கு மட்டுமன்றி, ஒட்டு மொத்த இந்தியாவுக்கே பேராபத்தாக முடியும் என்பதை ஸ்ராலின் உணர்ந்தாக வேண்டும்.

 

மாநில உரிமை

இந்தியாவைப் பொறுத்தவரை, மாநில உரிமைகளுக்காகக் குரல் தருவதில் முன்னிலைப் பாத்திரம் வகிக்கும் கட்சி தி.மு.க. அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி போன்றவர்கள் தாம் வாழ்ந்த காலங்களில் மாநில உரிமைகளை நிலைநாட்டவும், அவற்றுக்காகப் போராடவும் தம் வாழ்நாளில் அதிக நேரங்களைச் செலவிட்டிருக்கின்றார்கள்.

‘மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி’ என்ற பிரகடனத்தை முன்வைத்தார் அறிஞர் அண்ணா. பின்னாளில், பங்கேற்பு ஜனநாயகத்தின் அடிப்படையில், நடுவண் அரசில் பதவிகளைப் பெற்று, முழு நாட்டுக்குமே கலைஞர் சேவையாற்றினார்.

இன்று, மத்தியில் ஆளும் பா.ஜ.க. மாநிலங்களின் உரிமைகளைக் கணக்கில் கொள்ளாமல் செயற்பட்டு வருகின்றது. மாநிலப் பட்டியலில் இடம்பெற்றுள்ள பல விடயங்களை படிப்படியாகத் தன்வசம் எடுத்துக் கொள்ளும் முயற்சிகளில் இறங்கியிருக்கின்றது.

மாநிலங்கள் அமைப்பையே இல்லாமல் செய்துவிட வேண்டும் என்பதே ஆர்.எஸ்.எஸ்.சின் கோட்பாடாக உள்ளது. ஏற்கனவே, காஸ்மீர் மாநிலம் இரண்டாகப் பிரிக்கப்பட்டுவிட்டது. தமிழ்நாட்டை மூன்றாகப் பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழத் தொடங்கியுள்ளன. இந்நிலையில், மாநில உரிமைகளுக்காகப் போராட வேண்டிய நிலையில் உள்ள தி.மு.க. தமிழ்நாடு பிரிக்கப்படாமல் இருப்பதையும் உறுதிப்படுத்த வேண்டிய தேவை உள்ளது.

 
மொழியுரிமை
தமிழ் நாட்டின் பிரதான அடையாளங்களுள் ஒன்று மொழியுரிமை. ~தமிழ் எங்கள் உயிருக்கு நேர்| என்ற சிந்தனையைக் கொண்ட தமிழகத்தில் இந்தித் திணிப்புக்கு எதிரான ஒரு மிகப் பாரிய போராட்டமே நடந்தது.

ஆனால், கடந்த ஆட்சிக் காலத்தில் மாநிலத்தில் படிப்படியாக தமிழ் மொழிக்கு எதிரான பல நடவடிக்கைகள் சத்தம் சந்தடியின்றி நடைபெற்று முடிந்திருக்கின்றன. செம்மொழியான தமிழ் மொழியின் எதிர்காலம் கேள்விக்கு இலக்காகி உள்ளது. இந்த விடயத்தில் தி.மு.க. அரசாங்கம் தீவிர கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.

தி.மு.க. என்றதும் எதிரணியில் உள்ளவர்கள் ஞாபகப் படுத்துகின்ற ஒருசில விடயங்கள் உள்ளன. கட்டப் பஞ்சாயத்து, ஊழல் மற்றும் ஈழ விவகாரம். தேர்தல் வெற்றி அறிவிக்கப்பட்ட கையோடு, சென்னையில் ~அம்மா உணவகம்| ஒன்றில் தி.மு.க. தொண்டர்கள் இருவர் அடாவடியில் ஈடுபட்ட காணொளி மிகப் பாரிய கவனஈர்ப்பைப் பெற்றது. விரைந்து செயற்பட்ட ஸ்ராலின் குறித்த இருவரையும் கட்சியை விட்டு நீக்கியதுடன், அம்மா உணவகத்தில் அகற்றப்பட்ட சுவரொட்டிகளை மீளவும் அமைக்க நடவடிக்கை எடுத்தார். அது மாத்திரமன்றி, சம்பந்தப்பட இருவரும் காவல்துறையால் கைது செய்யப்பட்டும் உள்ளனர். வரலாற்றில் இருந்து தி.மு.க. பாடம் கற்றிருக்கின்றது என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு சிறு எடுத்துக்காட்டு.
 
ஈழ விவகாரம்
இதேபோன்று, ஈழ விவகாரத்தில் தி.மு.க. மீது உள்ள கறையைப் போக்குவதற்கு ஸ்ராலின் உளப் பூர்வமாக முயற்சி செய்ய வேண்டும். அது தி.மு.க.வின் எதிர்காலத்துக்கு நல்லது என்பதற்கு அப்பால் ஈழத் தமிழ் மக்கள் அவரிடம் இருந்து அதிகம் எதிர்பார்க்கிறார்கள் என்பதையும் அவர் புரிந்துகொள்ள வேண்டும்.

இம்முறை, தேர்தல் முடிவுகள் வெளியான கையோடு ஈழத் தமிழ் அரசியல்வாதிகள் பலரும் அவருக்கு வாழ்த்துச் செய்திகளை அனுப்பி வைத்தது மட்டுமன்றி, தங்களின் எதிர்பார்ப்புகளையும் பதிவு செய்திருந்தார்கள். அது மாத்திரமன்றி புலம்பெயர்ந்த தமிழர்கள் சார்பில் கனடாவில் இருந்தும் வாழ்த்துச் செய்தி அனுப்பப்பட்டதுடன், கனடா வருமாறு அழைப்பும் விடுக்கப்பட்டிருந்தமை நினைவில் கொள்ளத்தக்கது.

ஈழ விவகாரம் இரு நாடுகளுக்கு இடையிலானது. நடுவண் அரசு தி.மு.க.வுடன் இணக்கமற்ற போக்கைக் கடைப்பிடிக்கின்மை போன்ற யதார்த்தங்கள் கவனத்திற் கொள்ளப்பட வேண்டியவையே. ஆனால், மாநிலங்கள் அவையில் பெரும்பான்மை அற்ற நிலையிலேயே மத்திய அரசு காலந்தள்ள வேண்டிய நிலை உள்ளது. தற்போதைய மாநிலத் தேர்தல் முடிவுகள் மத்திய அரசின் பலத்தை இன்னும் குறைப்பதாகவே உள்ளன. எனவே, இது தொடர்பில் அழுத்தம் தரக் கூடிய பலமும், வாய்ப்பும் தி.மு.க.வுக்கு உள்ளது.

 
எழுவர் விடுதலை
ராஜீவ் காந்தி படுகொலையில் தண்டனை பெற்ற எழுவர் விடுதலை விவகாரம் இன்றுவரை இழுபறி நிலையிலேயே உள்ளது. இது விடயத்தில் விரைந்து காரியமாற்றுவதன் ஊடாக, ஈழத் தமிழர் தொடர்பான தனது கறையைப் போக்கிக் கொள்ள முடியும். அ.தி.மு.க. போன்று ஒப்புக்காக தீர்மானங்களை நிறைவேற்றாமல், உளப்பூர்வமாகச் செயற்பட வேண்டிய தேவை தி.மு.க.வுக்கு உள்ளது.
 

இது தவிர நீட் விவகாரம், ஸ்ரெர்லைட் ஆலை விவகாரம், பொள்ளாச்சி பாலியல் வன்முறை வழக்கு, சாத்தான்குளம் காவல்துறை படுகொலை வழக்கு, அ.தி.மு.க. அமைச்சர்கள் மீதான ஊழல் வழக்குகள் என கவனிக்கப்பட வேண்டிய பல விடயங்கள் தி.மு.க. முன் உள்ளன.

ஆனால், அனைத்திலும் முக்கியமானது மாநில உரிமைகளை நிலைநாட்டுவது. கடந்த பொதுத் தேர்தலின் போது ராகுல் காந்தி அவர்களை தலைமை அமைச்சர் வேட்பாளராக முன்மொழிந்தவர் ஸ்ராலின். தற்போது, தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து பாராட்டுத் தெரிவித்த ராகுல், “உங்கள் தலைமையில் இணைந்து செயற்படத் தயாராக உள்ளோம்” எனக் கூறியிருக்கின்றார். இது சாதாரண பாரட்டுச் செய்தி போன்று தோன்றினாலும், அதில் உள்ளார்ந்த அர்த்தம் ஒன்று இருப்பதாகவே தெரிகின்றது.
 
இன்று நடுவண் அரசு மீதான வெறுப்பு உள்நாட்டில் மாத்திரமன்றி, வெளிநாடுகளிலும் ஏற்பட்டிருக்கின்றது. இது பா.ஜ.க. ஆட்சியின் வீழ்ச்சிக்கான அறிகுறியாகவே பார்க்கப்பட வேண்டும். ஏனெனில், கடந்த காலங்களில் பன்னாட்டு ஊடகங்களின் ஆதரவுப் பிரச்சாரமும் கூட மோடி ஆட்சியைப் பிடிப்பதற்கு உதவியிருந்தது. இந்நிலையில், எதிர்கால ஆட்சி மாற்றத்தில் தி.மு.க.வுக்கு காத்திரமான பங்கு உள்ளது என்பதை ராகுலின் வாழ்த்துச் செய்தி கொண்டுள்ளதாகவே தெரிகின்றது.
அறிவியல் பூர்வமான அணுகுமுறை அற்ற, பாசிசத்தின் கூறுகளைக் கொண்ட, மக்கள் விரோத ஆட்சிகள் அகற்றப்பட வேண்டியது ஒட்டுமொத்த மானுட சமூகத்தின் தேவையாக உள்ளது. அதற்கான முயற்சி தி.மு.க.வின் வெற்றியில் இருந்து தொடங்குவது சாலச் சிறந்ததே.

Leave A Reply

Your email address will not be published.