பிறைந்துறைச்சேனையில் நான்கு வயதுக்குழந்தை கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு : தந்தை கைது.

வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிறைந்துறைச்சேனைப் பகுதியில் உயிரிழந்த நிலையில் கிணற்றிலிருந்து சடலம் இன்று வியாழக்கிழமை மீட்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார்.

பிறைந்துறைச்சேனை ஐஸ் உற்பத்தி நிலைய பின் வீதியில் வசிக்கும் நளீம் காபில் என்ற நான்கு வயதுடைய குழந்தையே கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தாய், தந்தையுடன் இரவு 11 மணியளவில் தூங்கிக் கொண்டிருந்த நிலையில், சிறுவன் காணாமல் போயுள்ளதாகவும், பின்னர் நீண்ட நேரத்துக்குப் பிறகு சிறுவனைத் தேடிப்பார்த்த போது, கிணற்றினுள் உயிரிழந்த நிலையில் சிறுவன் காணப்பட்டதாகவும் பொலிஸாரிடம் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

வாழைச்சேனை மாவட்ட / நீதவான் நீதிமன்ற நீதிபதி எச்.எம்.முஹமட் பஸீல் சம்பவ இடத்திற்கு வருகை தந்து பார்வையிட்டதுடன், குழந்தை மீட்கப்பட்ட நிலையில் குழந்தையின் சடலத்தினை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்குமாறும், சட்ட வைத்திய அதிகாரி பிரேத பரிசோதனையினை மேற்கொண்டு பின்னர் சடலத்தை குடும்ப உறவினர்களிடம் ஒப்படைக்குமாறும் கட்டளை பிறப்பித்துள்ளார்.

மேலும், குறித்த இடத்திற்கு மட்டக்களப்பு மாவட்ட குற்றத்தடவியல் பிரிவினர் மற்றும் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி வைத்தியர் சுனாலி இலப்பெரும ஆகியோர் வருகை தந்திருந்தனர்.

குறித்த குழந்தையின் மரணம் தொடர்பில் நடைபெற்ற ஆரம்பக்கட்ட விசாரணைகளின் அடிப்படையில் சந்தேகத்தின் பேரின் குழந்தையின் தந்தை வாழைச்சேனை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன மேலும் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.