ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகையை இழக்கும் நிலையில் இலங்கை! – ஐக்கிய மக்கள் சக்தி அறிக்கை

கொழும்பு: மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகத்தைப் பாதிக்காத தேசிய பாதுகாப்புக் கட்டமைப்பொன்றே இலங்கைக்கு அவசியம் என்று எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது.

இலங்கை மீது ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பிரேரணை தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தி வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் பயங்கரவாதத் தடைச் சட்டம், பாரிய அளவிலான மனித உரிமை மீறல்களை ஏற்படுத்தும் வகையில் துஷ்பிரயோகம் செய்யப்படுவதாக ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் எடுத்துக்காட்டப்பட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது.

மனித உரிமை விடயத்தில் கடந்த அரசின் கீழ் அடைந்துகொண்ட குறிப்பிடத்தக்க முன்னேற்றம், இந்த அரசில் சீர்குலைந்து செல்வதாக ஐக்கிய மக்கள் சக்தி சுட்டிக்காட்டியுள்ளது.

20 ஆவது திருத்தச் சட்டத்தை அறிமுகப்படுத்தியதன் மூலம் எதிர்த்தரப்பு அரசியல்வாதிகளை குறிவைத்து விசாரணை ஆணைக்குழுக்களை நிறுவுவப்படுவதாக எதிர்க்கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

இலங்கை ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகைகளை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது எனவும், சர்வதேச நடைமுறைகளுடன் கூடிய தேசிய சட்ட கட்டமைப்பு அறிமுகப்படுத்தப்பட வேண்டும் எனவும் எதிர்க்கட்சி கேட்டுக்கொண்டுள்ளது.

இலங்கையின் சட்ட ஆணைக்குழு, தேசிய பாதுகாப்பைப் உறுதிப்படுத்துவது குறித்து அறிமுகப்படுத்தியுள்ள வரைவுச் சட்டத்தை, சர்வதேச சட்டங்களுடன் பொருந்தக்கூடிய வகையில் பரிசீலனை செய்து, நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாகவும் ஐக்கிய மக்கள் சக்தி மேலும் தெரிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.