சம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்பு எம்.பிக்களை நாளை அவசரமாகச் சந்திக்கின்றார் கோட்டாபய!

கொழும்பு: இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களை நாளை அவசரமாகச் சந்திக்கின்றார் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச.

இதற்கான அழைப்பை ஜனாதிபதி செயலகம் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இன்று அனுப்பிவைத்துள்ளது.

ஜனாதிபதி செயலகத்தில் நாளை மாலை 4.30 மணியளவில் இந்தச் சந்திப்பு இடம்பெறவுள்ளது.

ஜி.எஸ்.பி. வரிச் சலுகையைத் தொடர்ந்தும் இலங்கைக்கு வழங்குவதற்கான நிபந்தனையாக ஏற்கனவே ஐரோப்பிய ஒன்றியத்துக்கு இலங்கை வழங்கிய உறுதிமொழிப்படி, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை இலங்கை நீக்கி, மாற்ற வேண்டும் என்று ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதேவேளை, ஜி.எஸ்.பி. வரிச்சலுகையை இலங்கை இழக்கும் ஆபத்து நிலைமை குறித்து காட்டமான கருத்தை கூட்ட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வெளியிட்டுள்ளார்.

இலங்கை அரசுக்கும் நாட்டுக்கும் வெளிநாட்டு செலாவணியை ஈட்டித் தரும் ஒரே மார்க்கம் ஜி.எஸ்.பி. வரிச் சலுகை மூலமான ஏற்றுமதிதான். இப்போதைய நெருக்கடி நிலையில் அது இரத்துச் செய்யப்பட்டால், நாட்டுக்குப் பெருளாதார ரீதியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திவிடும்.

இந்த இக்கட்டான நிலைமையைச் சமாளிக்கவே முதல் படியாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடன் பேச்சு நடத்த ஜனாதிபதி முன்வந்துள்ளார் எனச் செய்திகள் வெளியாகியுள்ளன.

கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடன் இதுவரை உத்தியோகபூர்வமான பேச்சுக்கள் எதையும் நடத்தவில்லை.

“புதிய அரசுடன் பேச்சு நடத்த நாம் தயார். ஆனால், அரசுப் பக்கத்தில் ஜனாதிபதிதான் எம்மைப் பேச்சுக்கு அழைக்க வேண்டும். அந்த அழைப்புக்கு நாம் காத்திருக்கிறோம்” என்று கூட்டமைப்பினர் ஏற்கனவே கருத்துக்களை வெளியிட்டு வந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.