மேல் மாகாணத்தில் 30 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி; நாட்டில் அனைவருக்கும் செப்ரெம்பருக்கு முன்.

மேல் மாகாணத்தில் வாழும் 30 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும், ஜூலை 31ஆம் திகதிக்கு முன்னர் தடுப்பூசிகளை வழங்குமாறு சுகாதாரத் துறைக்கு நான் பணிப்புரை விடுத்துள்ளேன்.

தற்போது – கொழும்பு மாவட்டத்தில் இந்த வயதுப் பிரிவைச் சேர்ந்த 60 வீதமானவர்களுக்கும்,

கம்பஹா மாவட்டத்தில் 47 வீதமானவர்களுக்கும்,

களுத்துறை மாவட்டத்தில் 34 வீதமானவர்களுக்கும் முதலாவது தடுப்பூசி செலுத்துகை வழங்கப்பட்டுள்ளது.

கொள்வனவுக்கான கட்டளைகள் முழுமைப்படுத்தப்பட்டிருக்கும் தடுப்பூசிகள்
கிடைக்கப்பெற்றதும்,

முறையான ஒரு திட்டத்தின் கீழ் செப்டெம்பர் மாதத்துக்கு முன்னர், நாட்டின் அனைத்துப் பிரதேசங்களுக்கும் அதிகளவு தடுப்பூசிகளை வழங்க வேண்டியதன் அவசியத்தை நான் இன்று வலியுறுத்தினேன்.

தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் மற்றும் எதிர்காலச் செயற்பாடுகள் குறித்து, கொவிட் ஒழிப்பு சிறப்பு குழுவுடன் இன்று முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போதே, இந்தப் பணிப்புரையை நான் விடுத்தேன்.

இரண்டாம் செலுத்துகைக்குத் தேவையான அஸ்ட்ரா செனக்கா தடுப்பூசிகள் விரைவில் கிடைக்கும் என நான் நம்புகின்றேன்.

அந்த வகையில், அஸ்ட்ரா செனக்கா தடுப்பூசிகளைப் பெற்றுக்கொண்டுள்ள அனைவருக்கும், அதன் இரண்டாவது செலுத்துகையை முறையாக வழங்குவதற்குத் திட்டமிடுமாறு சுகாதார
அதிகாரிகளுக்கு நான் பணிப்புரை விடுத்துள்ளேன்.

அஸ்ட்ரா செனக்கா தடுப்பூசியைப் பெற்றுக்கொண்ட ஒருவருக்கு, 45 வாரங்களுக்குள் அதன் இரண்டாவது செலுத்துகையைப் பெற்றுக்கொள்ள முடியும் என, ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் பரிந்துரைத்துள்ளதனை, கொவிட் ஒழிப்பு சிறப்பு குழுவின் உறுப்பினர் வைத்திய நிபுணர் பிரசன்ன குணசேன சுட்டிக்காட்டினார்.

கடந்த திங்கள் முதல், வைத்தியசாலைகளில் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து,

மிகக் குறுகிய காலத்தில் அதிகளவானவர்களுக்கு கொவிட் தடுப்பூசிகளை வழங்க முடிந்துள்ளது.

நாடளாவிய ரீதியில் இந்த முறைமையைத் தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அமைச்சர்களான பவித்ரா வன்னியாரச்சி, காமினி லொக்குகே, பந்துல குணவர்தன, கெஹெலிய ரம்புக்வெல்ல, மஹிந்தானந்த அழுத்கமகே, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, ரோஹித்த அபேகுணவர்தன, ரமேஷ் பத்திரன, நாமல் ராஜபக்க்ஷ, இராஜாங்க அமைச்சர்களான சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே, சன்ன ஜயசுமன, பாராளுமன்ற உறுப்பினர் மதுர விதானகே, சுகாதார அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் வைத்திய நிபுணர் சஞ்ஜீவ முனசிங்க,மற்றும் கடற்படை, விமானப்படை தளபதிகள், காவற் துறை மா அதிபர் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் இந்த நிகழ்வில் பங்குபற்றினர்.

Leave A Reply

Your email address will not be published.