அதியுச்ச அதிகாரப் பகிர்வை தமிழருக்கு வழங்கவேண்டும் : விக்கிரமபாகு கடும் அழுத்தம்

“தமிழ் மக்களுக்கு அதியுச்ச அதிகாரப் பகிர்வு வழங்கப்பட வேண்டும். இதனை மையப்படுத்தியதாகவே புதிய அரசமைப்பு இயற்றப்பட வேண்டும்.”

– இவ்வாறு நவசமசமாஜக் கட்சியின் தலைவரும் ஐக்கிய தேசியக் கட்சியின் களுத்துறை மாவட்ட வேட்பாளருமான கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“தேசிய இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வுத் திட்டமாகவே 13 ஆவது திருத்தச் சட்டம் முன்வைக்கப்பட்டது. ஆனால், குறித்த சட்டத்தில் இருந்த அதிகாரங்கள் முழுமையாகப் பகிரப்படவில்லை. பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்கள் தடுக்கப்பட்டன. எனவே, 13ஆவது திருத்தச் சட்டம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாக இருக்கின்றது.

ஆனால், அதியுச்ச அதிகாரப் பகிர்வைத் தடுப்பதற்கும் 13 ஆவது திருத்தச் சட்டத்தில் மாற்றம் கொண்டு வருவதை இலக்காகக்கொண்டும் புதிய அரசமைப்பு இயற்றப்பட வேண்டும் என்ற கருத்து ராஜபக்ச தரப்பில் இருந்து வந்துள்ளது. இதனுடன் எமக்கு உடன்பட முடியாது.

அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும். எந்தத் தரப்பு புதிய அரசமைப்பை இயற்றினாலும் கூட அதில் அதிகாரப் பகிர்வு உறுதிப்படுத்தப்பட வேண்டும். புதிய அரசமைப்பை இயற்றுவதற்குக் காலம் எடுக்குமானால் அதன் முதற்கட்டமாக 13ஆவது திருத்தச் சட்டம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்” – என்றார்.

Comments are closed.