யாழ். மாவட்டத்தில் ‘ஏ’ பாசிட்டிவ் ( A Positive) வகை குருதி வகைக்குத் தட்டுப்பாடு

யாழ். மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலமாக ‘ஏ’ பாசிட்டிவ் ( A Positive) வகை குருதி வகைக்குத் தட்டுப்பாடு நிலவி வருகிறது, எனவே, குறித்த குருதி வகையையுடைய குருதிக் கொடையாளர்கள் உடனடியாக இரத்ததானம் வழங்க முன்வர வேண்டுமெனவும் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையின் இரத்த வங்கிப் பொறுப்பதிகாரி வைத்தியகலாநிதி டாக்டர் ம. பிரதீபன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தற்போது நடமாடும் இரத்த தான முகாம்களை ஏற்பாடு செய்து நடாத்துவது குறைவடைந்துள்ளதுடன், இரத்த வங்கிகளுக்கு குருதிக் கொடையாளர்கள் நேரடியாக வருகை தந்து இரத்ததானம் வழங்குவதும் குறைவடைந்துள்ளது. இதனால், ஏ பாசிட்டிவ் வகை குருதிக்கு மாத்திரமல்லாமல் ஏனைய குருதி வகைகளுக்கும் தட்டுப்பாடு ஏற்படக் கூடிய அபாய நிலை காணப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

‘ஏ’ பாசிட்டிவ் வகை குருதியையுடைய குருதிக் கொடையாளர்கள் உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை இரத்த வங்கிப் பிரிவு, தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையின் இரத்த வங்கிப் பிரிவு, பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் இரத்த வங்கிப் பிரிவு ஆகிய இரத்த வங்கிகளில் தமக்கு அண்மையிலுள்ள இரத்த வங்கிக்கு நேரடியாகச் சென்று குருதி வழங்க முடியும்.

அதுமாத்திரமன்றி கடந்த வாரத்திற்குப் பின்னர் நடமாடும் இரத்ததான முகாம் எதுவும் நடைபெறவில்லை. இதன் காரணமாக எம்மிடமுள்ள குருதியின் இருப்பும் குறைவடைந்து செல்கிறது.

தற்போது குருதியின் தேவை அதிகரித்துள்ள நிலையில் பொது அமைப்புக்களும், அரச, அரச சார்பற்ற நிறுவனங்களும் நடமாடும் இரத்ததான முகாம்களை ஏற்பாடு செய்து நடாத்த முன்வருவதன் ஊடாகத் தட்டுப்பாடில்லாத வகையில் எம்மால் குருதி வழங்கலை மேற்கொள்ள முடியும்.

எனவே, அனைத்துக் குருதிக் கொடையாளர்களும் இதனைக் கருத்தில் கொண்டு செயற்பட வேண்டுமெனவும் அவர் கேட்டுள்ளார்.

Comments are closed.