தமிழ் அரசியல் கைதிகள் இருவருக்குக் கொரோனா.

சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் இருவருக்குக் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது எனக் குரலற்றவர்களின் குரல் அமைப்பு தெரிவித்துள்ளது.

குறித்த அமைப்பு ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள செய்திக்குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

“கொரோனாத் தொற்று நான்காவது சுற்று சிறைச்சாலைக்குள் பரவத்தொடங்கியுள்ளது. அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நடேசன் தருமராசா என்ற தமிழ் அரசியல் கைதி கொரோனாத் தொற்றுக்கு ஆளாகி வெலிக்கடை சிறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அதேபோன்று கொழும்பு மகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்;பட்டிருந்த செல்லத்துரை கிருபாகரன் என்ற அரசியல் கைதிக்கும் கொரோனாத் தொற்று ஏற்பட்டு சிறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தமிழ் அரசியல் கைதிகளை பொறுத்தமட்டில் இவர்கள் இரண்டாவது தடவையாக இந்தத் தொற்றுப் பாதிப்புக்கு ள்ளாகி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்கள் மிக நீண்டகாலமாக சிறைத்தடுப்பில் வைக்கப்பட்டுள்ளதால் பல்வேறு வகையிலான நோய்நொடிகளால் பீடிக்கப்பட்டுள்ளார்கள்.

சிறைச்சாலைகளில் கைதிகளை பார்வையிடுவதற்கான சந்தர்ப்பமும் நிறுத்தப்பட்டுள்ளதன் காரணமாக அவர்களுக்கு போசாக்கான ஊட்டச்சத்து மிக்க உணவுகள் கிடைப்பதற்கான வாய்ப்புக்கள் அற்று அவர்கள் உடல் உள ரீதியில் அதிக பலவீனம் அடைந்தவர்களாக இருக்கிறார்கள்.

நோயெதிர்ப்பு சக்தியை இழந்துள்ள இவர்களை மிக இலகுவாக தொற்று நோய்கள் பற்றிக்கொள்கின்றன. இந்த நிலை தொடருமானால் உயிராபத்துக்கள் ஏற்படக்கூடிய அபாயம் இருக்கிறது.

ஆகவே, தற்போது நாட்டுக்கு கணிசமான அளவு தடுப்பூசிகள் தருவிக்கப்பட்டு வருகின்றதன் அடிப்படையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளுக்கும் தடுப்பூசி ஏற்றுவதற்கு நடவடிக்கை எடுப்பது அவசியம். அந்தவகையில், நெடுநாள் நோய் நொடிகளோடு சிறையில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளுக்கு முன்னுரிமை அளித்து அவர்களை ஆபத்தில் இருந்து மீட்க வேண்டியது அரசின் கடமையாகும்.

கொழும்பு – புதிய மகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் நோய்வாய்ப்படுகின்ற நிலையில், அவர்களுக்கான சிகிச்சைகளை பெற்றுக்கொள்வதில் கடுமையான இடையூறுகள் ஏற்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.

மகசின் சிறைச்சாலை மருத்துவர்களால் மேலதிக சிகிச்சைக்கென பரிந்துரைக்கப்படுகின்ற தமிழ் அரசியல் கைதிகளை கொழும்பு தேசிய வைத்தியசாலைக்குக் கொண்டு சென்று சிகிச்சையினை பெற்றுக்கொடுப்பதற்கு சிறைத்துறை நிர்வாகம் பொருத்தமற்ற காரணங்களை கூறி வெறுமனே காலத்தை கடத்தி வருவதாக கைதிகள் கவலை தெரிவித்துள்ளனர். இதனால் அவர்களுக்கு நோய்த்தாக்கம் அதிகரித்து மிகுந்த வேதனைகளை அனுபவித்துக்கொண்டு இருக்கிறார்கள்.

தமிழ் அரசியல் கைதிகள் கைதுசெய்யப்பட்ட காலங்களின் போது இவர்கள் சந்தித்த துன்புறுத்தல்களின் பிந்திய விளைவுகள் தற்போது வெளிப்படத்தொடங்கியுள்ளதாலும் போர்க்காலத்தின் போதான விழுப்புண் தாக்கங்களினாலும் அரசியல் கைதிகள் பல்வேறு வலி வியாதிகளுக்கு ஆளாகியுள்ளனர். அதாவது கற்புலன் செவிப்புலன் பாதிப்பு, சுவாசக்கோளாறு , ஒருதலைக்குத்து, சிறுநீரக பாதிப்பு இருதய நோய் , குடல் அலற்சி , நீரிழிவு, முள்ளந்தண்டு பாதிப்பு ,முழங்கால் மூட்டு தேய்வு , ஆஸ்மா, மன அழுத்தம், தோல் நோய்கள் என்பவற்றால் அன்றாட பொழுதுகளை துன்பங்களோடு கழித்து வருகிறார்கள்

தமிழ் அரசில் கைதிகளை பொறுத்தமட்டில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழான நீண்ட கால சிறைவைப்பு, துரித விசாரணையற்ற விளக்கமறியல், கடுமையான தண்டனை தீர்ப்புக்கள் என அனுபவித்து வரும் கஷ்டங்களுக்கு மேலதிகமாக இவ்வாறு மருத்துவ தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள முடியாமல் துயரப்படுவது எத்ததனை கொடியது? இதனை மோசமான உரிமைய மீறல் செயற்பாடாகவே கருத வேண்டியுள்ளது.

அரசானது , தமிழ் அரசியல் கைதிகள் விடயத்தில் கரிசனை கொண்டுள்ளது எனத் தெரிவித்து வருகின்ற நிலையில் , இது போன்ற அடிப்படை பிரச்சனைகளுக்கு தீர்வினை காணாமல் இருப்பது நம்பிக்கையீனத்தை ஏற்படுத்துகிறது.

சிறைத்துறையும் மருத்துவத்துறையும் தமிழ் அரசியல் கைதிகள் விடயத்தில் மாற்றான் தாய் மனப்பாங்குடன் நடந்துகொள்வதை நிறுத்த வேண்டும்.

அரசியல் கைதிகளுக்கு கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதித்து சிகிச்சை அளிப்பதில் ஏதேனும் நடைமுறை இடையூறுகள் காணப்படுமாயின், விசேட பாதுகாப்பு கட்டமைப்புக்களுடன் அமைக்கப்பட்டுள்ள யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு அவர்களை மாற்றி யாழ் போதனா வைத்தியசாலையில் தேவையான சிகிச்சைகளை பெற்றுக்கொள்வதற்கு அரசு நடவடிக்கை எடுக்க முடியும்.

தமிழ் அரசியல் கைதிகள் எதிர்நோக்கும் இவ்வாறான பிரச்சனைகள் தொடர்பில் தமிழ் நாடாளுமன்ற பிரதிநிதிகள் அரசுடன் பேசித் தீர்வுகளைக் கண்டறிய வேண்டும் என வலியுறுத்துக்கின்றோம்” – என்றுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.