சீனாவின் ‘ஒரு சீனா’ கனவும்  மோடியின் பிறந்த நாள் வாழ்த்தும்! 

சுற்றுப் பகுதி  நாடுகளை வலுக்கட்டாயமாக இணைத்து ‘ஒரு சீனா’ கொள்கை  சீனா வழக்கமாக கொண்டுள்ளது. அப்படி இணைக்கப்பட்ட நாடுகளில் ஒன்று தான் திபெட்.

திபெத்தை கையடக்கி வைப்பது   சீனாவின் தேவையாவதின் காரணம் சீனாவில்   ஓடும் பெருவாரி நதிகளின் பிறப்பிடவும், வளமான  இயற்கை வளங்கள் அடங்கிய நாடு திபெட் என்பதாகும்.  சீனாவில் இருந்து மாறுபட்ட புத்த மதத்தை பின்பற்றும் வித்தியாசமான கலாச்சாரம் கொண்ட நாடு.  வரலாற்றுச் சுவடுகளை பரிசோதித்தால் திபெத், தனித்தும் சீனாவின் பகுதியாகவும் மாறி மாறி அதன் நலனைப்பொறுத்து நிலைகொண்டு கொண்டு இருந்தது.  திபெத்தின்  அரசு மற்றும் மத தலைமைகளாக தாலாய் லாமாக்கள் இருந்து வருகின்றனர்.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

திபெத்திய மகாயானா புத்த மத  நம்பிக்கைப் படி , தலாய் லாமா மற்றும் பஞ்சன் லாமா அதற்கு முன் அதே பதவியில் இருந்தவர்களின் மறுபிறவிகளாக கருதப்படுகின்றனர்.  16 ஆம் நூற்றாண்டிலிருந்து, தலாய் லாமா  மற்றும் பஞ்சன் லாமா ஒருவருக்கொருவர் மறுபிறப்புகளை அடையாளம் காண்பதில் ஈடுபட்டுள்ளனர்.

பஞ்சன் லாமா வான புத்த அமிதாபாவின் அவதாரமாக கருதப்படுகிறவர்.  “பஞ்சன்” என்பது “பண்டிதர் அல்லது “சிறந்த அறிஞர்” எனப்படுகிறது . தலாய் லாமாவின் ராஜ குருவாக அங்கீகரிக்கப்படுவது பாரம்பரியம் ஆகும்.  தலாய் லாமாவை கண்டு பிடிக்கும் பொறுப்பு  பஞ்சன் லாமாவில் உள்ளது. அதே போன்று பஞ்சன் லாமாவை அங்கீகரிப்பதும் ,  கெலுக் பாரம்பரியத்தில், தலாய் லாமாவுக்கு அடுத்தபடியாக ஆன்மீக அதிகாரம் பஞ்சன் லாமாவில் உள்ளது.

1924 ஆம் ஆண்டில், 13 வது தலாய் லாமாவிற்கும்   ஒன்பதாவது பஞ்சன் லாமாவிற்கும் முரண்பாடு உருவெடுத்தது.   ஒன்பதாவது பஞ்சன் லாமா “சீன சார்புடையவர்” என்று கருதப்பட்டார்.  ஒன்பதாவது பஞ்சன் லாமாவை பின்பற்றுபவர்கள் மத்திய திபெத்திய அரசாங்கத்தில் எந்தவொரு பதவியையும் வைத்திருப்பதைத் தடைசெய்து அவர்களை சிறையில் அடைத்தது.  இதனால் பஞ்சன் லாமா சீனாவின் இன்னொரு பகுதியான மங்கோலியாவுக்கு தப்பிச் சென்றார். திபெத்தின் இராணுவச் செலவுகளை ஈடுகட்டவும், பஞ்சன் லாமாவின் அதிகாரத்தைக் குறைக்கவும் பஞ்சென் லாமாவின் தோட்டத்திலிருந்து வருவாய் வசூலிக்க 13 வது தலாய் லாமா முயன்றார்.

 

1937 ஆம் ஆண்டில் ஒன்பதாவது பஞ்சன் லாமா இறந்தபோது, பத்தாவது பஞ்சன் லாமாவுக்காக  போட்டியிட இரண்டு வேட்பாளர்களை உருவாக்கியது சீனா அரசு.   தலாய் லாமாவின் அதிகாரிகள் ஜிகாங்கிலிருந்து ஒரு சிறுவனைத் தேர்ந்தெடுத்தனர் ஆனால்  சீனக் குடியரசு அரசாங்கம், ஜூன் 3, 1949 இல் செட்டனுக்கு தனது ஆதரவை அறிவித்தது. அதே நேரத்தில் 14 வது தலாய் லாமாவின் அரசாங்கம் அவரை அங்கீகரிக்க மறுத்துவிட்டது. இத்துடன் தலாய் லாமா மற்றும் பஞ்சன் லாமா முரண்பட ஆரம்பித்தனர்.

1950 ல் சீன கம்யூனிஸ்டு அரசாங்கம் திபெத்தை ஆக்கிரமித்த பின்னர், தலாய் லாமாவை திபெத்தியர்களின் வாழ்க்கையிலிருந்து ஒழிப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வந்தது.  அதன் தொடர்ச்சியாக பஞ்சன் லாமாவை  தாங்களே தேர்வு செய்வோம் என பிடிவாதம் பிடிக்க ஆரம்பிக்கிறது. 1950 களில் கம்யூனிஸ்ட் ஆட்சியின் அச்சுறுத்தலை பயந்து தலாய் லாமா சுமார் 80,000 அகதிகளுடன் இந்தியாவிற்கு நாடுகடத்தப்பட்டார்.  அதே போன்று 1980 களின் முற்பகுதியில் குறைந்தது 40,000 திபெத்தியர்கள் நாடுகடத்தப்பட்டனர்

பத்தாவது பஞ்சன் லாமா,  தலாய் லாமாவை விட்டு விலகி கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழுவின் உறுப்பினராக இருந்தார், திபெத்தை சீனாவோடு இணைத்ததில் ஒத்துழைத்தார்.  அதன்பின்னர் சீனாவின் கைப்பாவையாக கருதப்பட்டார்.   10 வது பஞ்சன் லாமாவை “ஒரு சிறந்த தேசபக்தர், ஒரு அரசு ஆர்வலர், சீன கம்யூனிஸ்ட் கட்சியின் விசுவாசமான நண்பர் மற்றும் சீனாவில் திபெத்திய புத்த மதத்தின் சிறந்த தலைவர்” என்று அழைத்து வந்த நேரம்; திபெத்தில் சீனக் கொள்கை குறித்து மாவோ சேதுங்கிற்கு ஒரு புகார் கடிதம் எழுதினார் 10 வது பஞ்சன் லாமா . அத்துடன் அவருடைய சனி ஆரம்பத்தது.  பின்னர்  1964 ல் அவர் ஒரு துரோகி என்று குற்றம் சாட்டப்பட்டு  எட்டு ஆண்டுகள் சிறைச்சாலையிலும் அடுத்த ஆறு ஆண்டுகள் வீட்டுக் காவலில் இருந்தார்.

அடிபட்ட புலியான பத்தாவது பஞ்சன் லாமா;   பிற்பாடு திபெத்திய மொழி, கலாச்சாரம் மற்றும் மதம் ஆகியவற்றைப் பாதுகாக்க போராடினார். தனது வாழ்க்கையின் முடிவில் அவர் சீனா( பெய்ஜிங்) எதிர்ப்பு கருத்துக்களை வெளிப்படுத்தத் தொடங்கியிருந்தார்.  ஜனவரி 29, 1989 அன்று 51 வயதில் இறந்தார் .  அதிக வேலை காரணமாக 10 வது பஞ்சன் லாமா மாரடைப்பால் இறந்துவிட்டதாக சீன அரசு கூறினாலும்  விஷம் வைத்து கொன்றதாகவும் ஒரு பேச்சு நடமாடியது.

பத்தாவது பஞ்சன் லாமாவின் மரணத்திற்குப் பிறகு, அவரது வாரிசான 11 வது பஞ்சன் லாமாவின் ​​ மறுபிறப்பு பெற்ற சிறுவனைத் தேடுவதற்கு மூத்த துறவிகளுக்கு  சீன அரசாங்கம் அனுமதி வழங்கியிருந்தது.  அதே நேரத்தில் புதிய பஞ்சன் லாமாவை அங்கீகரிக்க யாருக்கு உரிமை உள்ளது என்பது குறித்து தலாய் லாமாவிற்கும் சீனா கம்யூனிஸ்ட் அரசாங்கத்திற்கும் இடையே ஒரு போர் வெடித்தது.

மே 14, 1995 அன்று, தலாய் லாமா மத்திய திபெத்தின் தொலைதூரப் பகுதியில்,  கெதுன் சோக்கியி நைமா  என்ற ஆறு வயது சிறுவனை 11 வது பஞ்சன் லாமாவாக  பிரகடனப்படுத்தினார். அடுத்த மூன்று தினங்களில்  சீன அரசாங்கத்தால் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டார்.  1996 இல் பெய்ஜிங் அவரை தடுத்து வைத்ததாக ஒப்புக்கொண்டது. அவரும் அவரது குடும்பத்தினரும் வீட்டுக் காவலில் இருப்பதாக சொல்லப்படுகிறது. 6 வயதான சோக்கியி நைமா ” ஒரு நாயை மூழ்கடித்தார்”, இழிவானவர் , துரோகி என்று சீன அரசால் குற்றம் சாட்டப்பட்டார்.  வீட்டுக் காவலில் வைக்கப்பட்ட உலகின் இளைய அரசியல் கைதியாக அவரே.

ஜனவரி 1996 இல், அம்னஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பு, மற்றும் ஐ.நா  குழந்தை காணாமல் போனது குறித்து கவலை தெரிவித்தது.  ஆனால்  பெய்ஜிங் அதே ஆண்டு நவம்பரில் தனது சொந்த ஒரு  பஞ்சன் லாமாவை நியமித்தது சீனா அரசாங்கம்.   கட்சிக்கு கீழ்ப்படிந்து, சீன அரசுக்கு விசுவாசமாக, “சீன பஞ்சன்” தலாய் லாமாவுக்கு மாற்றாக முன்நிறுத்தப்படுகிறார்.  கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களான  திபெத் பெற்றோருக்கு 1970 இல்  பிறந்துள்ளார் சீன பஞ்சன் -கியால்ட்சன் நோர்பு . தற்போது பெய்ஜிங்கில் வசித்து வருகிறார்.  “வெகுஜனங்களின் வாழ்க்கை செல்வத்தையும் நாகரிகத்தையும் நோக்கி நகர்கிறது” என்றும் “திபெத்திய எதிர்காலம் தங்க சூரியனின் முடிவற்ற ஒளியைப் போல பிரகாசமானது” என்று அறிவித்த அவர் சீன அரசுக்கு தனது விசுவாசத்தை எப்போதும் வலியுறுத்துவார்.

சீன பஞ்சனைப் பற்றி திபெத்தியர்கள் என்ன நினைத்தாலும், தற்போதைய  தலாய் லாமா இறந்த பிறகு சீன பஞ்சன்,  அதிகாரத்திற்கு வருவார் என நம்பப்படுகிறது. மேலும்  சீனா தன்க்கு தோதான ஒரு தலாய் லாமாவைக் தேர்ந்தெடுப்பதற்குத் தேவையான திட்டங்களை வகுத்து வைத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

தற்போதைய தலாய் லாமா தனது இரண்டு வயதில் கண்டுபிடிக்கப்பட்டு,  1940 ஆம் ஆண்டில், ஐந்து வயதாக இருந்தபோது, ​​ டென்சின் க்யாட்சோ என்று பெயர் மாற்றப்பட்டு திபெத்தின் தலைநகரான லாசாவில் உள்ள பொட்டாலா அரண்மனையில் திபெத்தின் ஆன்மீகத் தலைவராக அதிகாரப்பூர்வமாக நிறுவப்பட்டார். பெய்ஜிங் தலாய் லாமா உருவத்தையும் ,  பக்தி ஆர்ப்பாட்டங்களையும் தடைசெய்துள்ள போதிலும் ஆறு மில்லியனுக்கும் அதிகமான திபெத்தியர்கள் தலாய் லாமாவை தொடர்ந்து பின்பற்றுகின்றனர் . 1980 களில் இருந்து, திபெத் பிரச்சினை தொடர்பாக சீனாவுடன் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பதற்கு தலாய் லாமா ஒரு “நடுநிலை அணுகுமுறையை” ஆதரித்து  வருகிறார்.  திபெத்தியர்களுக்கு  சீனா அரசின் கீழ் சுயாட்சியான நாடு  பெற்று தரவே  முற்படுகிறார்.

திபெத்திய ஆன்மீகத் தலைவர் தலாய் லாமா, ”இந்த பட்டத்தை கடைசியாக வைத்திருப்பவர் தான் என்பதை உணர்ந்திருப்பதாகவும், தனது  அடுத்த அவதாரம் இந்தியாவில் பிறக்கக்கூடும் என்று கூறியிருந்தார். இந்த  கூற்றை பெய்ஜிங் முற்றிலும் நிராகரித்தது .

 

நோபல் பரிசு பெற்ற தலாய் லாமா சீனாவின் திபெத்திய பகுதிகளில் வன்முறை மற்றும் பிரிவினைவாத நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் ஒரு பிளவுபடுத்தும்  நபர் என சீனா குற்றம் சாட்டுகிறது .  துறவியின் உடையில் இருக்கும் ஓநாய் என்றும் திபெத்தை சீனாவிலிருந்து பிரிக்க முற்படும் ஆபத்தான பிரிவினைவாதி என்று கருதுகிறது.  இந்த நிலையில் உலகநாடுகள் அடுத்த தலாய் லாமாவின் தேர்வைப்பற்றி கவனிக்க ஆரம்பித்து உள்ளது.

 தலாய் லாமாவின் அடுத்த வாரிசை தேர்ந்தெடுப்பதில் சீன அரசுக்கு எந்தப் பங்கும் இருக்கக்கூடாது என்று  அமெரிகாவும் ; தலாய் லாமாவின் வாரிசை  தேர்ந்தெடுப்பதில் இந்தியா தலையிடக்கூடாது என்று சீனாவும் கொக்கரித்துக்கொண்டு இருக்கும் வேளையில் அமெரிக்காவின் ஜோ பிடன் நிர்வாகம், திபெத் குறித்து சீனாவுக்கு அனுப்பிய செய்தியில், தலாய் லாமாவின் அடுத்த வாரிசை தேர்ந்தெடுப்பதில் பெய்ஜிங் பங்கு கொள்ளக்கூடாது  என  நினைவூட்டியுள்ளது. எந்த வருடவும் இல்லாத கதையாக,  பிரதமர் நரேந்திர மோடி,  தலாய் லாமாவின்  86 வது பிறந்தநாளை முன்னிட்டு,  அன்பான வாழ்த்துக்களை அறிவித்துள்ளார்.சீனாவின்  எல்லை மாநிலைங்களான அருணாச்சல பிரதேச முதல்வர் பெமா காண்டு, சிக்கிம் முதலமைச்சர் பிரேம் சிங் தமாங் ஆகியோரும் தலாய் லாமாவுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

சீனாவின் ஆட்டத்தை பொறுத்து இருந்து பார்ப்போம்!

 

Leave A Reply

Your email address will not be published.