தமிழ்நாட்டில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஒருவர் கூட உயிரிழக்கவில்லை – அமைச்சர் மா.சுப்ரமணியன்

தமிழ்நாட்டில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஒருவர் கூட உயிரிழக்கவில்லை என மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மேலும், இன்னும் 3 நாட்களுக்கு கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு இருக்காது என்றும் உறுதியளித்துள்ளார்.

கொரோனா தடுப்பூசிகள் கையிருப்பில் இல்லாததால், கடந்த இரண்டு நாட்களாக சென்னையில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் நிறுத்தப்பட்டு இருந்தன, நேற்று 8 லட்சத்து 60 ஆயிரம் கோவிஷீல்ட் தடுப்பூசிகள் வந்ததை அடுத்து, 36 ஆயிரத்து 500 டோஸ்கள் சென்னைக்கு ஒதுக்கப்பட்டன. இதனால், 45 மையங்களிலும் தடுப்பூசிகள் போடப்பட்டன. நேரில் வந்தவர்களுக்கு 70 டோக்கன்கள் வழங்கப்பட்டதோடு, ஆன்லைனில் பதிவு செய்த 130 பேருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டன.

ஈரோடு அருகே கனகபுரம் உயர் நிலைப்பள்ளியில் 100 பேருக்கு தடுப்பூசி போடப்படும் என அறிவிக்கப்பட்டதால், அதிகாலை முதலே பொதுமக்கள் காத்திருந்தனர். ஆனால், தடுப்பூசி மையமாக செயல்படுமாறு, சுகாதாரத்துறையில் இருந்து தகவல் வரவில்லை எனக்கூறி, பள்ளியை திறக்க தலைமை ஆசிரியர் மறுத்துவிட்டார். இதனால், பொதுமக்கள், அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

சிறிதுநேரத்தில் மருத்துவர்கள், சுகாதாரப்பணியாளர்கள் அங்கு வர, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், தலைமை ஆசிரியரிடம் பேச்சுவார்த்தை நடத்தி பள்ளிக்கூடத்தை திறக்க வைத்தனர். தலைமை ஆசிரியரின் பிடிவாதத்தால் சுமார் 2 மணி நேரம் மக்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

இந்நிலையில், தமிழ்நாட்டில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தலைமைச் செயலகத்தில் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியனை சந்தித்து மத்தியப்பிரதேச மருத்துவ கல்வி அமைச்சர் விஸ்வாஸ் கைலாஷ் சாரங் கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தமிழ்நாட்டில் மருத்துவ கட்டமைப்பு மற்றும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் சிறப்பாக இருப்பதாக தெரிவித்தார்.

அதன்பிறகு பேட்டியளித்த அமைச்சர் மா.சுப்ரமணியன், தமிழகத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஒருவர் கூட உயிரிழக்கவில்லை என தெரிவித்தார். அரசு மருத்துவமனைகளில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் ஊழியர்கள், விரைவில் பணி நிரந்தரம் செய்யப்படுவர் என அவர் குறிப்பிட்டார்.

இதனிடையே, புனேவில் இருந்து 5 லட்சத்து 42 ஆயிரம் கோவிஷீல்ட் தடுப்பூசிகள் விமானம் மூலம் சென்னைக்கு வந்தடைந்தன. அவற்றை தேனாம்பேட்டையில் உள்ள மாநில சுகாதார கிடங்கிற்கு கொண்டு சென்ற அதிகாரிகள், தேவைப்படும் மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்பி வைத்தனர்.

Leave A Reply

Your email address will not be published.